Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 31, 2016

அண்ணன் முறையில் உள்ளவருடன் திருமணம்: ‘மேஜர்’ பெண்ணை பெற்றோருடன் செல்ல கட்டாயப்படுத்த முடியாது ஐகோர்ட்டு உத்தரவு


அண்ணன் முறை கொண்ட வாலிபரை திருமணம் செய்த பெண் மேஜர் என்பதால் அவரை பெற்றோருடன் செல்ல கட்டாயப்படுத்த முடியாது என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

பெரியப்பா மகன்

கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயதான மைனர் சிறுமி கடந்த 2015-ம் ஆண்டு கடத்தப்பட்டார். இதுபற்றி விசாரித்ததில் அந்த சிறுமியின் பெரியப்பாவின் மகன் (அண்ணன் முறை) கடத்தி சென்றிருப்பது தெரியவந்தது.இதுதொடர்பாக 18-11-15 அன்று ஹட்கோ போலீசில் சிறுமியின் தந்தை புகார் கொடுத்தார். போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் ஐகோர்ட்டில் தந்தை ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். தனது மகளை தனது சகோதரரின் மகனே கடத்தி சென்றதாக அதில் தெரிவித்திருந்தார்.

பெண் ஆஜர்

இந்த வழக்கை நீதிபதி எஸ்.நாகமுத்து, வி.பாரதிதாசன் ஆகியோர் விசாரித்தனர். அப்போது, 18 வயதைக் கடந்த நிலையில் இருந்த அந்தப் பெண், நீதிபதிகள் முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். அவரை கடத்திச் சென்ற வாலிபரை, பெண் பாதுகாப்பு மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டம் என்ற போஸ்கோ சட்டத்தின் கீழ் கைது செய்ததாகவும் போலீஸ் சார்பில் கூறப்பட்டது.அண்ணன் என்ற உறவுமுறையைக் கொண்டிருந்தாலும், அவரை கடந்த ஜனவரி 15-ந்தேதியன்று பழனியில் தாலி கட்டி திருமணம் செய்து கொண்டதாகவும், தான் கர்ப்பிணியாக இருப்பதாகவும் நீதிபதிகளிடம் அந்தப் பெண் கூறினார்.

போலீசுக்கு கண்டனம்

மேலும், தான் கடத்தப்படவில்லை என்றும் கட்டியவரோடு வாழ விரும்புவதாகவும் தெரிவித்தார். ஆனால் அந்தப் பெண்ணின் பெற்றோர் உறவற்ற திருமணத்தால் அவமானம் தாங்காமல் எங்களின் இளைய மகன் தற்கொலை செய்துகொண்டான் என்று கூறி மிகுந்த வேதனையோடு இறந்தவரின் புகைப்படத்தை நீதிபதிகளிடம் காட்டினர்.
அதைப் பார்த்து நீதிபதிகளும் மிகுந்த வேதனை அடைந்தனர். மேலும், அந்த சம்பவம் மிகுந்த துரதிருஷ்டவசமானது என்று கருத்து தெரிவித்த அவர்கள், மைனராக இருக்கும்போதே அந்தப் பெண்ணை தேடி கண்டுபிடித்திருந்தால், ஒரு உயிர் போயிருக்காது என்று போலீசாரை கண்டித்தனர்.
கட்டாயப்படுத்த முடியாது

அதைத் தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

மேஜர் ஆகிவிட்ட நிலையில், யாருடன் வாழவேண்டும் என்ற உரிமையை அந்தப் பெண் பெற்றுவிட்டார். எனவே இதில் முடிவை மாற்றிக் கொள்ள அவரை யாரும் கட்டாயப்படுத்த முடியாது. தனது எதிர்காலத்தைப் பற்றிய முடிவுகளை எடுக்கும் சுதந்திரம் இப்போது அந்தப் பெண்ணுக்கு உண்டு.

எனவே, அவர் தனது விருப்பப்படி கணவருடன் வாழலாம். ஆனால் அவரது கணவர் கைதாகி ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் அங்கிருந்து வரும்வரை ஓசூர் அரசு காப்பகத்தில் தங்க வைக்கப்படவேண்டும்.

மகனை இழந்து வாடும் அந்தப் பெற்றோருக்கு கிருஷ்ணகிரி மாவட்ட போலீசார் ரூ.50 ஆயிரத்தை இழப்பீடாக 2 வாரங்களுக்குள் வழங்க வேண்டும். அவர்களுக்கு பாதுகாப்பில் ஏதாவது பிரச்சினை இருந்தால் ஐகோர்ட்டை அணுகலாம். இந்த வழக்கின் விசாரணை 2 வாரங்களுக்கு தள்ளிவைக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.