Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 26, 2016

மாயமான சென்னை விமானத்தில் சென்ற புனேயை சேர்ந்த விமானி பற்றி உருக்கமான தகவல்கள்


29 பேருடன் மாயமான சென்னை விமானத்தில் சென்ற புனேயை சேர்ந்த விமானி பற்றி உருக்கமான தகவல்கள் வெளியாகி உள்ளது.

விமானம் மாயம்

சென்னை தாம்பரம் விமானப்படை தளத்தில் இருந்து கடந்த வெள்ளிக்கிழமை காலை 8.30 மணியளவில் 29 பேருடன் அந்தமான் தலைநகர் போர்ட்பிளேயருக்கு ராணுவ சரக்கு விமானம் ஒன்று கிளம்பியது. புறப்பட்ட சிறிது நேரத்தில் அந்த விமானம் மாயமானது. விமானம் கடலில் விழுந்து மூழ்கி இருக்கலாம் என கருதப்படுவதால் தேடுதல் வேட்டை நடக்கிறது.

அந்த விமானத்தில் சென்றவர்களில் புனே மாவட்டம் நிகிடி பகுதியில் உள்ள எல்.ஐ.சி. காலனியை சேர்ந்த குணாலும் ஒருவர். இவர் விமானத்தில் லெப்டினண்ட்டாக பணியாற்றி வந்தார். மாயமான விமானத்தை பத்சாரா, நந்தா ஆகியோர் இயக்கி உள்ளனர். அவர்களுக்கு வழிகாட்டியாக குணால் விமானத்தில் இருந்து உள்ளார்.

தந்தை உருக்கம்

இந்த சம்பவம் நடந்த நாள் முதல் மகன் வருவானா? மாட்டானா? என குணாலின் குடும்பம் பரிதவித்து வருகிறது. இது குறித்து குணாலின் தந்தை ராஜேந்திரா கூறியதாவது:-

சம்பவம் நடந்த நாள் முதல் ஞாயிற்றுக்கிழமை வரை எங்களுக்கு எந்த தகவலையும் விமானப்படை அதிகாரிகள் கூறவில்லை. ராணுவ மந்திரி மனோகர் பாரிக்கரை சமூக வலைத்தளத்தில் தொடர்பு கொண்ட பின்னரே ஞாயிற்றுக்கிழமை எங்களது வீட்டிற்கு விமானப்படை அதிகாரிகள் வந்தனர்.

அகற்றப்பட வேண்டும்

விமான விபத்து ஏற்பட்ட முந்தைய நாள் நாங்கள் குணாலை தொடர்பு கொண்டோம். அப்போது நாக்பூரில் இருப்பதாக தெரிவித்தான். அந்த விமானம் நாக்பூரில் பழுது பார்க்கப்பட்டு உள்ளது. இதற்காக குணால் அங்கு 3 நாட்கள் தங்கியிருந்து உள்ளான். 1984-ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட இதுபோன்ற பழமையான விமானங்களை விமானப்படையில் இருந்து கட்டாயம் அகற்ற வேண்டும்.

இந்த மாத தொடக்கத்தில் குணால் 7 நாட்கள் விடுமுறையில் வீட்டிற்கு வந்தான். அந்த நாட்களில் எங்களுடன் இருந்து விட்டு பணிக்கு திரும்பினான். மாயமான விமானத்தில் அவனும் சென்றதால் அவனது கதி என்னவென்று எங்களுக்கு தெரியவில்லை. இது எங்களுக்கு மிகவும் கடினமான தருணம். இதுபோன்ற சமயங்களில் பொறுமையாக இருப்பது கடினமானது. ஆனாலும் தேடுதல் வேட்டையின் முடிவை ஏற்றுக்கொள்ள தயாராக உள்ளோம்.

இவ்வாறு அவர் உருக்கமாக கூறினார்.

திருமணத்திற்கு பெண் பார்த்தனர்

குணால் குடும்பத்தினர் 1980-ம் ஆண்டு முதல் புனேயில் வசித்து வருகின்றனர். குணால் புனே பெர்குசன் கல்லூரில் பி.எஸ்.இ. பட்டப்படிப்பு படித்தார். பின்னர் செகந்திராபாத்தில் உள்ள விமானப்படை அகாடமியில் சேர்ந்தார். அங்கு பட்டம் பெற்ற பிறகு 2008-ம் ஆண்டு விமானப்படையில் பணியில் சேர்ந்த இவர், தமிழ்நாட்டில் கோவை சூலூரிலும் சில காலம் பணியாற்றி உள்ளார்.

28 வயதான குணாலுக்கு அவரது பெற்றோர் திருமணம் செய்து வைக்க முடிவு செய்து, பெண் பார்த்து வந்தனர். இந்தநிலையில் தான் மாயமான விமானத்தில் சென்ற குணாலின் கதி என்ன என்பது தெரியவில்லை. 

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.