ஆடியோ வெளியீடு
தே.மு.தி.க.வை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் வி.சி.சந்திரகுமார், எஸ்.ஆர்.பார்த்திபன், சி.எச்.சேகர் ஆகியோர் தி.மு.க.வில் இணைந்து உள்ளனர். தே.மு.தி.க. நிர்வாகிகளை ஆசை வார்த்தைகளை கூறி தி.மு.க.வுக்கு வி.சி.சந்திரகுமார் அழைப்பதாக தே.மு.தி.க. குற்றம்சாட்டி வருகிறது. இதை நிரூபிக்கும் வகையில் தி.மு.க.வுக்கு தே.மு.தி.க. நிர்வாகி ஒருவரை வி.சி.சந்திரகுமாரும், எஸ்.ஆர்.பார்த்திபனும் அழைக்கும் ஆடியோ ஒன்றை தே.மு.தி.க. தலைமை நிலைய செயலாளர் பார்த்தசாரதி வெளியிட்டுள்ளார். சென்னை அரும்பாக்கத்தில் நடந்த தே.மு.தி.க. நிர்வாகிகள் கூட்டத்தில் ஆடியோவை வெளியிட்டு அவர் பேசினார்.
உண்மையை நிரூபிக்க...
அப்போது அவர், ‘தே.மு. தி.க.வில் இருந்து யாரையும் நாங்கள் தி.மு.க.வுக்கு இழுக்கவில்லை என்று மு.க.ஸ்டாலின் கூறி வருகிறார். அது உண்மை கிடையாது என்பதை நிரூபிக்கவே இந்த ஆடியோ உரையாடலை வெளியிட்டு இருக்கிறோம். தேவைப்பட்டால் ஒவ்வொரு மாவட்டத்திலும் தே.மு.தி.க. வினரை இழுப்பதற்காக இவர்கள் பேசிய உரையாடலை வெளியிடுவோம்’ என்றார்.
பார்த்தசாரதி வெளியிட்ட ஆடியோவில், தே.மு.தி.க. கலை இலக்கிய அணி துணைச்செயலாளரும், நடிகருமான ராஜேந்திரநாத்திடம் வி.சி.சந்திரகுமாரும், எஸ்.ஆர்.பார்த்திபனும் உரையாடுகிறார்கள். அந்த உரையாடல் வருமாறு:-
நல்ல வாய்ப்பு
எஸ்.ஆர்.பார்த்திபன்:- அடுத்தவாரம் வாங்க, தளபதி வீட்டில் பேசி உனக்கு பதவியை உறுதி செய்து விட்டு, பத்திரிகையாளர் சந்திப்பு வைப்போம். தி.மு.க.வுக்கு வந்தால் பிரகாசமான எதிர்காலம் இருக்கிறது. உன் வாழ்க்கையே மாறிவிடும். நாங்க அமைதியா இருந்து பல வேலையை செய்து கொண்டு இருக்கிறோம்.
ராஜேந்திரநாத்:- பார்ப்போம்... தி.மு.க. சார்பில் கண்ணன் என்பவர் என்னிடம் பேசினார். கட்சியில் பொறுப்பு வாங்கி தருகிறோம். உள்ளாட்சி தேர்தலில் நீங்க கேட்கிற வார்டு வாங்கி தருவதாக சொன்னார். என் செயல்பாட்டை பார்த்து எம்.எல்.ஏ. சீட்டும் வாங்கி தருவதாக சொன்னார்.
வி.சி.சந்திரகுமார்:- அதான் நான் சொன்னேன். நல்ல வாய்ப்பு. இதை ஏன் வேண்டாம் என்று நினைக்கிறீர்கள். என் கூடத்தான் வரவேண்டும் என்று நான் சொல்லவில்லை. எந்த இடத்தில் உங்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கிறதோ? அந்த பக்கம் போங்க. அ.தி.மு.க. பக்கம் கூட போங்க. அங்க கூட மாபா இருக்காரு... நல்ல யோசித்து சொல்லுங்க.
இவ்வாறு அந்த உரையாடலில் கூறப்பட்டுள்ளது.
மறுப்பும்-விளக்கமும்
இதற்கிடையே, ராஜேந்திரநாத் தான் தங்களை போனில் அழைத்ததாகவும், தாங்கள் முதலில் பேசவில்லை என்றும் சந்திரக்குமார், பார்த்திபன் ஆகியோர் கூறியுள்ளனர்.
இது குறித்து கருத்து தெரிவித்த ராஜேந்திரநாத், ‘அவர்கள் தான் போனில் கூப்பிட்டார்கள். இது தான் உண்மை. உண்மைக்கு மாறாக அவர்கள் கூறுகிறார்கள். நான் ஆடியோ பதிவிலேயே கூறியிருக்கிறேன். தி.மு.க. தரப்பினர் தான் என்னை கூப்பிட்டார்கள்’ என்றார்.
இந்த ஆடியோ வெளியீடு அரசியல் வட்டாரத்தில் நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது.


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.