Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 4, 2016

நாட்டுக்கு தேவையான நல்ல ஆராய்ச்சி


கிறிஸ்டினா மேரி, இந்திய அளவில் தொடங்கப்பட்டிருக்கும் ‘‘இரட்டை முனைவர் ஆராய்ச்சி’’ படிப்பில் பட்டம் பெற்றுள்ள பெருமைக்குரிய மாணவி. தர்மபுரி மாவட்டம் செல்லியம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர். இவரது பெற்றோர் மரியசெல்வம்–ஜெசிந்தா. விவசாய குடும்பத்தில் பிறந்த கிறிஸ்டினா மேரி, ‘தென் இந்திய மக்களின் மரபணுக் களில் முடக்குவாதநோய் ஏற்படுவதற்கான காரணிகள்’ குறித்து இந்தியாவில் புதுச்சேரி ஜிப்மரிலும், பிரான்சில் உள்ள பல்கலைக்கழகத்திலும் ஒரே நேரத்தில் ஆராய்ச்சி செய்து, இரண்டு பி.எச்டி. பட்டங்களை பெற்றுள்ளார். அடுத்து பிரான்சில் தங்கி, மேல்நிலை ஆராய்ச்சி செய்ய இருக்கிறார். இந்த ஆராய்ச்சி மூலம் மருத்துவ துறைக்கு சவாலாக விளங்கும் முடக்குவாத நோய் பற்றி புதிய விஷயங்கள் தெரிய வரும். அது மக்களுக்கு மிகுந்த பலனளிப்பதாக இருக்கும். முனைவர் கிறிஸ்டினா மேரியுடன் நமது உரையாடல்!

விவசாய குடும்பத்தில் பிறந்த நீங்கள் விவசாய பணிகளை செய்திருக்கிறீர்களா? 

‘‘எனது அப்பா முழுநேர விவசாயி. எனது அம்மாவுக்கும் விவசாய ஆர்வம் உண்டு. அம்மா ஆசிரியையாக பணியாற்றியதால், ஓய்வு நாட்களில் விவசாய பணிகளை மேற்கொள்வார். நானும் அம்மா     வுடன் வயலுக்கு செல்வேன். வேலையாட்களுடன் வயலில் இறங்கி நானும் நாற்றுகள் நட்டு இருக்கிறேன்’’

பெற்றோரிடம் இருந்து நீங்கள் கற்றுக்கொண்ட வாழ்வியல் விஷயங்கள்?

‘‘அப்பா 10–ம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர். பிள்ளைகளான நாங்கள் பெரிய அளவில் படிக்க வேண்டுமென ஆசைப்பட்டார். அதற்காக பல தியாகங்களை செய்தார். என்னிடம் ‘உன்னை பெண் பிள்ளை போல வளர்க்கவில்லை. ஆண் பிள்ளை போல வளர்த்திருக்கிறேன்’ என்று அடிக்கடி கூறி தைரியம் அளித்தார். எனது அம்மா பொறுமைசாலி. பிறருக்கு உதவும் எண்ணம் கொண்டவர். இருவரிடம் இருந்தும் நான் கற்றுக்கொண்டது ஏராளம்..’’ 

டாக்டர், என்ஜினீயர் என்ற மோகமே அதிகமாக பெண்களிடம் இருக்கும் சூழலில் சிரமமான ஆராய்ச்சி படிப்பு மீது உங்கள் கவனம் பதிய என்ன காரணம்?

‘‘டாக்டருக்கு படிக்கவே நானும் ஆசைப்பட்டேன். ஆனால் அந்த படிப்பை கடினம் என கருதியதால், டாக்டருக்கு சமமான இந்த ஆராய்ச்சி படிப்பை தேர்ந்தெடுத்தேன். எனது சித்தி அதிசயமேரி மலேரியா நோய் பற்றி ஆராய்ச்சி செய்து வந்தார். அவருடைய ஆலோசனையும், வழிகாட்டுதலும் என்னை இந்த துறைக்கு கொண்டு வந்தது. முதலில் காட்பாடியில் உள்ள ஆக்சீலியம் கல்லூரியில் பி.எஸ்சி. மைக்ரோபயாலஜி பாடப்பிரிவை தேர்வு செய்தேன். பின்பு மதுரை அமெரிக்கன் கல்லூரியில் எம்.எஸ்சி. நோய் எதிர்ப்பியல் மற்றும் நுண்ணுயிரியல் படித்தேன். அடுத்து சென்னை பல்கலைக்கழகத்தில் ஒரு வருட டிப்ளமோ கல்வியை முடித்தேன். 

பின்பு புதுச்சேரி ஜவஹர்லால் மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் (ஜிப்மர்) 2007–ம் ஆண்டு இந்தோ–பிரெஞ்சு திட்ட சீனியர் ஆராய்ச்சியாளராக பணியில் சேர்ந்தேன். ஜிப்மர் மருத்துவமனைக்கு நிறைய நோயாளிகள் வருவார்கள். அவர்கள் மீது எனக்கு கருணை ஏற்பட்டது. அதுவே, நோய் காரணிகளை கண்டறியும் ஆராய்ச்சியில் என்னை முழுமையாக ஈடுபடவைத்தது’’ 

இதன் மூலம் மனித சமூகத்திற்கு கிடைத்த பலன்?

‘‘தென் இந்திய மக்களின் முடக்குவாத நோய்களுக்கான காரணம்– முடக்குவாத நோயாளிகளின் வலிகள்– உடல் உறுப்புகளில் ஏற்படும் வீக்கங்கள்.. போன்றவைகளுக்கான காரணங்கள் தெரியவந்துள்ளன. அத்துடன் தென் இந்திய மக்களின் முடக்குவாத நோய்க்கும்– வட இந்திய மக்களின் முடக்குவாத நோய்க்கும் வேறுபாடுகள் இருப்பதும் தெரியவந்திருக்கிறது’’ 

இரட்டை முனைவர் பட்டம் என்பது என்ன? இந்த திட்டம் ஏன் தொடங்கப்பட்டது? இதனால் ஆராய்ச்சி மாணவி களுக்கு என்ன பலன்?

‘‘முதல் இரட்டை முனைவர் பட்ட ஆராய்ச்சி படிப்பு என்பது ஜிப்மர் நோய் எதிர்ப்பியல் துறைக்கும், uஸீவீஸ்மீக்ஷீsவீtமீ sஷீக்ஷீதீஷீஸீஸீமீ ஜீணீக்ஷீவீs நீவீtமீ ஷீயீ யீக்ஷீணீஸீநீமீ    என்ற பிரெஞ்சு பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள   uஸீவீஸ்மீக்ஷீsவீtமீ ஜீணீக்ஷீவீs பீவீபீமீக்ஷீஷீt (ஜீணீக்ஷீவீs7) என்ற பிரெஞ்சு அறிவியல் நிறுவனத்திற்கும் இடையே தொடங்கப்பட்டது. இந்த தனித்துவம் வாய்ந்த இரட்டை முனைவர் ஆராய்ச்சி படிப்பு, இரு நாடுகளின் ஆய்வு மேற்பார்வையாளர்களின் வழிகாட்டுதலின்படி நடக்கிறது. இரு நாடுகளின் பொதுவான ஆராய்ச்சி ஒப்பந்தத்தின் கீழ் மாணவர்கள் இரட்டை முனைவர் பட்ட ஆராய்ச்சி படிப்பை மேற்கொள்ள இந்த வாய்ப்பு அளிக்கப்பட்டிருக்கிறது. இது இந்தியாவில் முதல் முறையாக தொடங்கப்பட்ட இரட்டை முனைவர் பட்ட ஆராய்ச்சி படிப்பாகும்.

நான், ஜிப்மரில் இந்தோ–பிரெஞ்சு திட்ட சீனியர் ஆராய்ச்சியாளராக இருந்தபோது ஆராய்ச்சி தொடர்பாக பிரான்ஸ் சென்று வந்தேன். அப்போது ஜிப்மரில் பி.எச்டி.க்கான நுழைவுத்தேர்வு எழுதி வெற்றி பெற்று, என் ஆய்வை தொடங்கினேன். அந்த ஆய்வுகளை இந்தோ– பிரெஞ்சு நோய் எதிர்ப்பியல் துறைக்கு அனுப்பினேன். அங்கு எனது ஆய்வுகள் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதைத்தொடர்ந்து ஜிப்மரிலும்–பிரான்சிலும் ஆய்வில் ஈடுபட்டு இரட்டை முனைவர் பட்டம் பெற்றேன். இதன் மூலம் சர்வதேச நாடுகளில் மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சிகள் பற்றி மாணவர்கள் தெரிந்து கொள்ள முடியும். இதனால் மாணவர்கள் நவீன தொழில்நுட்பத்தை கற்றுக்கொள்வதுடன், உலகளவில் ஆராய்ச்சிகளை சுலபமாக மேற்கொள்ள இயலும்’’ 

ஒரே நேரத்தில் இரண்டு நாட்டு கல்வி நிறுவனங்களில் ஆய்வு படிப்பை மேற்கொள்ளும்போது ஏதாவது நெருக்கடிகள் ஏற்பட்டதா?

‘‘இல்லை. ஜிப்மர் நிர்வாகம் எனது ஆராய்ச்சிக்கு மிகவும் உதவியாக இருந்தது. அதுபோல பிரான்ஸ் நாட்டில் ஆராய்ச்சியில் ஈடுபடும்போது அங்குள்ள ஆய்வு கூடத்தில் அனைவரும் ஆங்கிலத்திலேயே பேசியதால் என்னால் சமாளிக்க முடிந்தது’’

ஜிப்மர் நோய் எதிர்ப்பியல் துறை ஆராய்ச்சி படிப்பில் உங்களுக்கு கிடைத்த அனுபவங்கள்?

‘‘நோய் எதிர்ப்பியல் துறை ஆராய்ச்சி படிப்பில் ஆரம்பத்தில் ஒவ்வொரு நாளும் மிகவும் கஷ்டப்பட்டேன். தினமும் காலை முதல் இரவு வரையில் ஆராய்ச்சி பணியை மேற்கொண்டேன். எனினும் எனது இலக்கை அடைய வேண்டுமென சிரமத்துடன் பணியாற்றினேன். அப்போது ஜிப்மர் நோய் எதிர்ப்பு துறை தலைவர் வீர்சிங் நெகி மற்றும் துறையை சார்ந்தவர்களும், லேப் டெக்னீசியன்கள் உள்பட அனைவரும் எனக்கு பேருதவியாக இருந்தனர்.

பிரான்சில் நான் மேற்கொண்ட ஆராய்ச்சி அனுபவம் வித்தியாசமானது. ஏனெனில் புதுவையில் செய்த ஆராய்ச்சியை மீண்டும் பிரான்சிலும் செய்ய வேண்டும். பிரான்சில் செயின்ட் லூயிஸ் மருத்துவமனையின் நோய் எதிர்ப்பியல் துறை தலைவர் டோமினிக் சார்ரோன் வழிகாட்டினார். மேலும் அங்குள்ள ஆராய்ச்சி கூடத்தில் பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்களுடன் ஆராய்ச்சி செய்யும் வாய்ப்பு கிடைத்தது. அது மறக்க முடியாத அனுபவம்’’

பிரான்சுக்கு எத்தனை முறை சென்றீர்கள்? பிரெஞ்சு மொழி தெரியுமா?

‘‘நான், ஜிப்மரில் இந்தோ–பிரெஞ்சு திட்ட சீனியர் ஆராய்ச்சியாளராக இருந்த போது ஆராய்ச்சி தொடர்பாக பிரான்ஸ் நாட்டிற்கு 5 முறை சென்று வந்தேன். அதேபோல் பி.எச்டி. படிப்பிற்காக 3 முறை சென்று வந்தேன். பிரெஞ்சு மொழியை 6 மாத காலம் படித்தேன். எனக்கு சரளமாக பிரெஞ்சு பேசத்தெரியாது. ஆனால் பிரெஞ்சு நாட்டவர்கள் பேசும்போது அதை என்னால் புரிந்துகொள்ள முடியும்’’

தென் இந்தியாவில் எந்த பகுதி மக்களிடம் ‘மரபணுக்களில் முடக்குவாத நோய்’ இருப்பது பற்றி ஆய்வு செய்தீர்கள்? 

‘‘ஜிப்மர் மருத்துவமனைக்கு முடக்குவாத நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு வந்த 3 தலைமுறை தமிழ் பேசுபவர்களை கண்டறிந்து, அவர்களில் 271 பேரிடம் ஆய்வு செய்தேன். ஆய்வு பல்வேறு கட்டங்களைக்கொண்டது. மிக நுட்ப மானது’’

ஆராய்ச்சியில் நீங்கள் கண்டறிந்திருக்கும் உண்மை என்ன? இதன் மூலம் மக்களுக்கு நேரடியாக என்ன பலன் கிடைக்கும்?

‘‘வருங்காலங்களில் முடக்குவாத நோய் குறித்து சிகிச்சை அளிக்க எனது ஆராய்ச்சி பயனுள்ளதாக இருக்கும். தென் இந்திய மக்களுக்கு முடக்குவாதத்தால் ஏற்படும் வலி, உடல் உறுப்புகள் வீக்கம் போன்றவைகளை மருந்துகள் கொடுத்து கட்டுப்படுத்த முடியும். ஆனால் முழுமையாக குணப்படுத்த இயலாது’’



பிரான்சில் நீங்கள் நடத்தப்போகும் உயர் ஆராய்ச்சி பற்றி?

‘‘அங்கு மனநலம் குறித்தும், மரபணுக்கள் பற்றியும் ஆராய்ச்சி மேற்கொள்ள உள்ளேன். இதுவும் மனித சமூகத்திற்கு பயனுள்ளதாக இருக்கும்’’

ஆராய்ச்சி முடிந்ததும் எங்கு பணியாற்றுவீர்கள். இந்தியாவிலா? வெளிநாட்டிலா? 

‘‘தொடர்ந்து ஆராய்ச்சி செய்ய விரும்புகிறேன். இந்தியாவிலே பணிபுரிய ஆசைப்படுகிறேன். பிரான்சில் ஒரு வருட உயர் ஆராய்ச்சியை முடித்த பின்னரே அடுத்து கட்டம் பற்றி முடிவு செய்வேன்’’ 

இரட்டை முனைவர் படிப்பில் ஈடுபட விரும்பும் வருங்கால மாணவிகளுக்கு நீங்கள் சொல்ல விரும்பும் தகவல்?

‘‘ஆராய்ச்சி படிப்பானது சுலபமானது இல்லை. இரட்டை முனைவர் படிப்பில் ஈடுபட விரும்பும் மாணவிகள், சரியான மேற்பார்வையாளர்களை தேர்வு செய்ய வேண்டும். அதேபோல் மாணவிகள் தேர்வு செய்யும் மேற்பார்வையாளர்கள் விருப்பமும் இதில் அவசியம். எந்த ஆராய்ச்சியிலும் உடனடியாக முடிவு தெரிந்துவிடாது. இதில் பொறுமையும், கடினமான உழைப்பும் 
அவசியம்’’

உங்கள் எதிர்கால லட்சியம் என்ன?

‘‘மக்களுக்கு பயன்படும் வகையில் இன்னும் பல ஆராய்ச்சிகளை செய்ய வேண்டும். இந்த துறையில் சிறந்து விளங்கி நோபல் பரிசு பெற வேண்டும்’’ என்கிறார்.

கிறிஸ்டினா மேரிக்கு மார்க்ரேட், மேரி புளோரன்ஸ், ஸ்டெல்லா மேரி ஆகிய 3 சகோதரிகளும், மைக்கேல் சேவியர் ஆண்டனி என்ற சகோதரனும் உள்ளனர். இவர்களில் மார்க்ரேட் ஆசிரியை. ஸ்டெல்லா மேரி லண்டனில் நர்சாக பணியாற்றி வருகிறார். மைக்கேல் அமெரிக்காவில் என்ஜினீயராக இருக்கிறார். இவர்     களுடைய தாயார் ஜெசிந்தா காலமாகிவிட்டார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.