Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 25, 2016

தமிழகம் முழுவதும் 105 வக்கீல்களை இடைநீக்கம் செய்து இந்திய பார் கவுன்சில் உத்தரவு; ஐகோர்ட்டில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை என்று எச்சரிக்கை


சென்னை,

ஐகோர்ட்டு கொண்டு வந்த சட்டத்திருத்தத்தை எதிர்த்து தொடர்ந்து போராட்டம் செய்து வரும் 105 வக்கீல்களை, வக்கீல் தொழிலில் இருந்து இடைநீக்கம் செய்து அகில இந்திய பார் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.

முற்றுகை போராட்டம்

வக்கீல்கள் சட்டத்தில் ஐகோர்ட்டு கொண்டு வந்த சட்டத்திருத்தத்தை எதிர்த்து கடந்த ஜூன் 1-ந்தேதி முதல் தமிழகம் முழுவதும் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில், சென்னை ஐகோர்ட்டில் இன்று (திங்கட்கிழமை) முற்றுகை போராட்டத்தை நடத்துவதற்கு தமிழகம் முழுவதிலும் இருந்து வக்கீல்கள் சென்னை வருகின்றனர்.

ஏற்கனவே ஐகோர்ட்டுக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் வக்கீல்கள் போராட்டத்தை கைவிட வேண்டும். அவ்வாறு செய்யவில்லை என்றால், சம்பந்தப்பட்ட வக்கீல்கள் வக்கீல் தொழிலில் இருந்து இடைநீக்கம் செய்யப்படுவார்கள் என்று அகில இந்திய பார் கவுன்சில் எச்சரிக்கை செய்து உத்தரவிட்டிருந்தது.

இடைநீக்கம்

இந்த நிலையில், தமிழகம் முழுவதும் 105 வக்கீல்களை, வக்கீல் தொழிலில் இருந்து இடைநீக்கம் செய்து அகில இந்திய பார் கவுன்சில் நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

அந்த உத்தரவில், தமிழகத்தில் வக்கீல்கள் நீதித்துறையின் கண்ணியத்துக்கு களங்கம் ஏற்படுத்தும் செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை தொழிலில் இருந்து இடைநீக்கம் செய்தால், அவர்களது குடும்பம் பாதிக்குமே என்று வருத்தம் ஏற்பட்டது. ஆனாலும், அவர்களது செயல்கள் சகித்துக்கொள்ள முடியாத அளவுக்கு சென்று விட்டது. எனவே, தமிழகம் முழுவதும் 105 வக்கீல்களை, வக்கீல் தொழிலில் இருந்து இடைநீக்கம் செய்து உத்தரவிடப்படுகிறது’ என்று கூறப்பட்டுள்ளது.

கடுமையான நடவடிக்கை

மேலும் அந்த உத்தரவில், சென்னை ஐகோர்ட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்போவதாக போராட்டக் கூட்டுக்குழு தலைவர் திருமலைராஜன் அறிவித்துள்ளார். போராட்டத்தின்போது, தலைமை நீதிபதி உள்ளிட்ட அனைத்து நீதிபதிகளையும் ஐகோர்ட்டுக்குள் நுழைய விடாமல் தடுக்க உள்ளதாகவும் கூறியுள்ளார்.

அவர் மட்டுமல்ல, அவருடன் சேர்ந்து இந்த முற்றுகை போராட்டத்தில் ஈடுபடும் வக்கீல்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். வக்கீல் தொழிலின் புனிதம் மற்றும் மாண்பை காப்பாற்ற அந்த வக்கீல்கள், வக்கீல் தொழிலில் இருந்து உடனடியாக நீக்கப்படுவார்கள். அவர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கை விசாரணை டெல்லியில் மட்டுமே நடைபெறும். எனவே முற்றுகை போராட்டத்தில் ஈடுபடும் வக்கீல்களை வீடியோவில் படம் பிடித்து அனுப்பி வைக்கும்படி, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலுக்கு உத்தரவிடப்படுகிறது’ என்றும் கூறப்பட்டுள்ளது.

யார் யார்?
வக்கீல் தொழிலில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள 105 வக்கீல்களில் முக்கியமான சிலர் பெயர் விவரம்:

போராட்டக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் திருமலைராஜன், இணை ஒருங்கிணைப்பாளர் சிவசுப்பிரமணியன், திருச்சி சகாபூதீன், வி.சீனிவாசன், திருப்பூர் சிவபிரகாசம், திருநெல்வேலி ராஜேஸ்வரன், சென்னை ஐகோர்ட்டு வக்கீல் சங்கத்தின் செயலாளர் அறிவழகன், பார் கவுன்சில் முன்னாள் உறுப்பினர் வேல்முருகன், சென்னை ஐகோர்ட்டு பெண் வக்கீல் சங்கத்தின் தலைவர் எஸ்.நளினி, எழும்பூர் பார் கவுன்சில் தலைவர் சந்தன்பாபு, மதுரை முத்து அமுதநாதன், கடலூர் கே.ராஜூ, வேலூர் சுதாகர், தேனி முத்துராமலிங்கம், வாஞ்சிநாதன், தஞ்சாவூர் நல்லதுரை, கோவை தண்டபாணி உள்ளிட்டோர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.