Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 14, 2016

48 வயது விவசாயிக்கு 3-வது திருமணம்: 3 ஏக்கர் நிலத்துக்காக 14 வயது சிறுமி விற்பனை


தேன்கனிக்கோட்டை அருகே 48 வயது விவசாயி 3-வதாக 14 வயது சிறுமியை திருமணம் செய்து கொண்ட சம்பவம் குறித்து விசாரணை நடத்த அமைக்கப்பட்ட குழுவினர் அந்த மலைக்கிராமத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்த உள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகாவில் கொட்ட மஞ்சு மலைப்பகுதி உள்ளது. இங்கு ஏராளமான மலைக்கிராமங்கள் உள்ளன. இதில் கோடாங்கியூர் மலைக்கிராமத்தை சேர்ந்தவர் மாதப்பன் (வயது 48). விவசாயி. இவரது முதல் மனைவி இவரை விட்டு பிரிந்து சென்று விட்டார். இவரது இரண்டாவது மனைவி இவருடன் வாழ்ந்து வருகிறார்.

இந்த நிலையில் இவர் 3-வதாக அதே மலைக்கிராமத்தை சேர்ந்த உளி வீரப்பா மகள் முனியம்மாவை (14) கடந்த வாரம் திருமணம் செய்து கொண்டார். முனியம்மாவை திருமணம் செய்ய அவரது தந்தைக்கு விவசாயி மாதப்பன் 3 ஏக்கர் நிலத்தை கொடுத்தார். இந்த தகவல் அந்த கிராமத்துக்கு சென்று வந்த ஒருவர் மூலம் கிருஷ்ணகிரி மாவட்ட குழந்தைகள் குழும தலைவர் வின்சென்டிற்கு தெரிய வந்தது. அவர் இன்று ஒரு குழுவை அனுப்பி அங்கு விசாரணை நடத்த உள்ளார். இந்த சம்பவம் குறித்து அவர் கூறியதாவது:-

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள கொட்ட மஞ்சு மலைப் பகுதியில் உள்ள கிராமங்களில் சர்வ சாதாரணமாக குழந்தைகள் திருமணம் நடந்து வருகிறது. ஏற்கனவே 9 குழந்தைகளுக்கு திருமணம் நடந்து உள்ளது. தற்போது முனியம்மா என்ற 14 வயது சிறுமிக்கும், விவசாயி மாதப்பனுக்கும் கடந்த வாரம் திருமணம் நடைபெற்று உள்ளது, மாதப்பனுக்கு இது 3-வது திருமணம் ஆகும்.

குழந்தை திருமணம் நடைபெற்ற அந்த மலைக்கிராமத்துக்கு சென்று விசாரணை நடத்த ஒரு குழுவை அமைத்து உள்ளோம். இந்தக் குழுவினர் அந்த மலைக்கிராமத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்துவார்கள். விசாரணை முடிந்ததும் இது குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு மற்றும் அதிகாரிகளிடமும் புகார் செய்வோம். குழந்தை திருமணம் நடைபெற்ற குழந்தைகளை மீட்டு அவர்களை தொடர்ந்து படிக்க வைப்பதா அல்லது வேறு என்ன செய்வது என்பது குறித்து பின்னர் முடிவு செய்யப்படும்.

மலைக்கிராமங்களில் வறுமை காரணமாக வசதியாக உள்ள நில அதிபர்கள், விவசாயிகள் நிலத்தை பெண்ணின் தந்தை அல்லது தாயாருக்கு கொடுத்து திருமணம் செய்வது தொடர் கதையாக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

தற்போது திருமணம் முடிந்து உள்ள முனியம்மா 8-ம் வகுப்பு வரை படித்து உள்ளார். ஏற்கனவே இவர் நாமக்கல்லில் உள்ள பஞ்சு மில்லில் 3 ஆண்டுகள் ஊழியராகவும் வேலை பார்த்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.