Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 1, 2016

சென்னையில் 25 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் ! - பொருத்தும் பணி தொடங்கியது


சென்னையில் அடுத்தடுத்து நடந்து கொண்டிருக்கும் படுகொலைகளால் பொதுமக்கள் பெரும் பீதிக்கு ஆளாகியுள்ளனர். போதுமான ரோந்து  போலீசார் பணியில் இல்லை என்ற குற்றச்சாட்டுகள் முன் வைக்கப் பட்டாலும், நகரின் பிரதான இடங்களில் சிசிடிவி (கண்காணிப்பு) கேமராக்கள் இல்லையென்பதும்  ஒரு குற்றச்சாட்டாக இருக்கிறது.

பல கொலை, கொள்ளை சம்பவங்களில் சிசிடிவி காட்சிப் பதிவுகளுக்குப் பதில் சம்பவத்தை வேடிக்கைப் பார்க்கும் பொதுமக்கள் எடுக்கும் கேமரா செல்போன் காட்சிகளே சமூக வலைதளங்களில் பரவி போலீசாரின் வழக்குக்கு உதவியாக இருக்கிறது.

கள்ளக்காதல், ஒருதலைக்காதல், நிலப் பஞ்சாயத்து, குடும்பப் பிரச்னை, ரசிகர் மன்றத் தகராறு, விளையாட்டில் மோதல், சூதாட்டத் தகராறு, டாஸ்மாக் கடையில் சண்டை இப்படி பல விஷயங்கள் கொலைக்கான காரணங்களாக இருந்தாலும் பெரும்பாலும் அவை  நடப்பது, வீதி முனைகளில்தான், அதுவும் பிரதான சாலைகளில்தான் என்பதும் அதிர்ச்சி கலந்த வேதனை.

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கொலை செய்யப்பட்ட சுவாதி வழக்காகட்டும், அண்மையில் கோயம்பேடு பகுதியில் டாஸ்மாக் கடையில் காரில் வந்து கொள்ளையடித்துச்  சென்ற சம்பவமாகட்டும் இரண்டிலுமே போதுமான 'தெளிவுப் பதிவு' போலீஸ் கைகளில் இல்லை. சுவாதி கொலை வழக்கில் சிசிடிவி பதிவே இல்லை.

பொதுமக்களுக்கு நம்பிக்கையூட்டும் விதமாகவும், பல வழக்குகளுக்கு உதவியாகவும் இருக்கக் கூடிய ஒரே விஷயமாக தற்போது சிசிடிவி பதிவை மட்டுமே நம்ப வேண்டியுள்ள நிலை உள்ளது.
சென்னையின் மையப் பகுதிகளில் 'உருப்படியாக வேலை செய்யக் கூடிய வகைகளில் காமிராவைப் பொருத்துங்கள்' என்று  தொடர்ச்சியாக வந்த உத்தரவைத் தொடர்ந்து, அதற்கான வேலையில் போலீசார் வேகம் காட்டத் தொடங்கியுள்ளனர்.

சோதனை முயற்சியாக, இரவிலும் பளிச் என காட்சிகளை பதிவு செய்யக் கூடிய கண்காணிப்பு கேமராக்களை நிறுவும் பணி நேற்று நள்ளிரவு முதல் சென்னையில் தொடங்கியுள்ளது.

இந்த கேமரா எப்படி இயங்கும் என்று போலீஸ் ஏரியாவில் விசாரித்தபோது, "இந்த வகை கேமராக்கள் சூரிய மின் சக்தியில் இயங்கக் கூடியவை. சிட்டி போலீஸ் கமிஷனர் அறையில் இருந்தபடி இதைக்  கண்காணிக்க முடியும். அதேபோன்று முக்கிய மண்டல காவல் அதிகாரிகள், அந்தந்த காவல் மாவட்ட அதிகாரிகள் அறையில் இருந்து கொண்டு இதைக்  கண்காணிக்க முடியும். அதற்கேற்ற வகையில் இந்த காமிராவின் தொடர்பு பிணைக்கப்பட்டுள்ளது" என்றனர்.

சென்னையின்  25 முக்கிய இடங்களை முதற்கட்டமாக தேர்வு செய்து, இத்தகைய கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகின்றன. அவைகளை முன்பு போல் நிறுவியதோடு விட்டு விடாமல் இரண்டு நாளைக்கு ஒரு முறை, அதில் ஏதேனும் பழுது ஏற்பட்டுள்ளதா என்று கவனித்துத்  தீர்வு காணவும் கமிஷனர் டி.கே.ராஜேந்திரன் அறிவுறுத்தி உள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.