Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 27, 2016

மயக்க மருந்து அதிகம் கொடுத்ததால் சிறுவன் பலி? உடலை வாங்க மறுத்து பெற்றோர் போராட்டம்


சென்னை அரசு பொது மருத்துவமனையில், எம்.ஆர்.ஐ., ஸ்கேன் எடுத்த போது உடல் நலம் பாதித்த சிறுவன், சிகிச்சை பலனின்றி இறந்தான். ஆனால், 'டாக்டர்கள் அளவுக்கு அதிகமாக மயக்க மருந்து கொடுத்ததே சிறுவனின் இறப்புக்கு காரணம்' எனக்கூறி உடலை வாங்க மறுத்து, பெற்றோர் மற்றும் உறவினர்கள் போராட்டம் நடத்தினர். பின், மூன்று டாக்டர்கள் மூலம், பிரேத பரிசோதனை நடத்தப்பட்டு உடல் ஒப்படைக்கப்பட்டது.
ஸ்கேன் பரிசோதனை:சென்னை, ஆவடி கொல்லு மேடு பகுதியைச் சேர்ந்தவர் இளையராஜா; இவரது மகன் கவியரசன், 4. இடது கை மூட்டில் பிரச்னை இருந்ததால், சென்னை அரசு பல்நோக்கு மருத்துவமனையில், பிளாஸ்டிக் அறுவைச் சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தான். பாதிப்புள்ள பகுதியில், எம்.ஆர்.ஐ., ஸ்கேன் எடுக்க டாக்டர்கள் பரிந்துரைத்தனர்.

அதே மருத்துவமனையில் ஸ்கேன் எடுக்கும் வசதி இருந்தாலும், மயக்கவியல் துறையுடன் இணைந்த, எம்.ஆர்.ஐ., எடுக்கும் வசதி, சென்னை ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் உள்ளதால், நேற்று முன்தினம், டாக்டர்கள் அங்கு அனுப்பி வைத்தனர்.
ஸ்கேன் எடுக்கும் போது, சிறுவன் அசையாமல் படுக்க வசதியாக, டாக்டர்கள் மயக்க மருந்து கொடுத்துள்ளனர். ஆனால், அடுத்த சில நிமிடங்களில், சிறுவனுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு, வலிப்பு ஏற்பட்டுள்ளது.

உடன், அரசு பொது மருத்துவமனை டாக்டர்கள் சிகிச்சை அளித்தும் முன்னேற்றம் இல்லாததால், நேற்று முன்தினம் மாலை, சென்னை, எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். அங்கு, டாக்டர்கள் குழு தீவிர சிகிச்சை அளித்தும், சிகிச்சைப் பலனின்றி கவியரசன் இறந்தான்.'மயக்க மருந்து அதிகமாக கொடுத்து, குழந்தையைக் கொன்று விட்டனர்; இறப்புக்கான காரணத்தைக் கண்டறிந்து, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். வெளி டாக்டர்களைக் கொண்டு பிரேத பரிசோதனை நடத்த வேண்டும்' எனக்கூறி, அவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் உடலை வாங்க மறுத்தனர்.

இதையடுத்து, அரசு பொது மருத்துவமனையில், சிறுவனின் மரணத்துக்கான காரணத்தைக் கண்டறியும், பிரேத பரிசோதனை நேற்று நடந்தது. கீழ்ப்பாக்கம், ஸ்டான்லி, அரசு பொது
மருத்துவமனையின், மூன்று டாக்டர்கள் முன்னிலையில், பிரேத பரிசோதனை நடத்தப்பட்டு, கவியரசனின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

15 நாட்களில் அறிக்கை:இதுகுறித்து, அரசு பொது மருத்துவமனை கண்காணிப்பாளர் ஷீலா கூறுகையில், ''பிரேத பரிசோதனை அறிக்கை கிடைக்க, 15 நாட்களாகும். அந்த அறிக்கை கிடைத்த பின்னரே, சிறுவனின் இறப்புக்கான சரியான காரணம் தெரிய வரும். சிகிச்சை குறைபாடு இருந்தால், சம்பந்தப்பட்டோர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.