Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 27, 2016

' ராஜினாமா செய்யுமாறு நிர்பந்திக்கப்பட்டாரா ஈ.வி.கே.எஸ்?' -சலசலக்கும் சத்தியமூர்த்தி பவன்


புதிய தலைவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவன். 'ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை நிர்பந்தப்படுத்தித்தான் ராஜினாமா கடிதத்தை வாங்கினார் ராகுல். புதிய தலைவருக்கான ரேஸில் திருநாவுக்கரசர், செல்லக்குமார், வசந்தகுமார் உள்பட பல பெயர்கள் அடிபடுகின்றன' என்கின்றனர் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ராஜினாமா செய்த விவகாரம் பத்து நாட்களுக்குப் பிறகே, வெளியுலகிற்கு தெரியவந்தது. அதுவரையில், ராஜினாமா கடிதம் கொடுத்தைப் பற்றி மீடியாக்கள் முன்பு இளங்கோவன் சொல்லவில்லை. " ஒருவேளை தன்னுடைய ராஜினாமா கடிதத்தை மேலிடம் பரிசீலனை செய்யும் என்று காத்திருந்தார் அவர். அவரது எதிர்பார்ப்பை ராகுல்காந்தி பூர்த்தி செய்யவில்லை. இனியும் வெளியில் சொல்லாமல் இருந்தால், தகவல் வேறு மாதிரி சென்றுவிடும் என்ற எண்ணத்திலேயே ராஜினாமா கடிதம் கொடுத்த விவகாரத்தை வெளியில் சொன்னார் ஈ.வி.கே.எஸ்" என்கிறார் காங்கிரஸ் மூத்த நிர்வாகி ஒருவர்.

மேலும் அவர் நம்மிடம், " வெளிநாட்டு சுற்றுப் பயணம் செல்வதற்கு முன்பாக, இளங்கோவனை அழைத்த ராகுல், ' தமிழ்நாட்டில் இருந்து வரக் கூடிய தகவல்கள் சரியானதாக இல்லை. புதிய தலைவரை நியமிக்க இருக்கிறோம். நீங்களாக பதவி விலகிவிட்டால் சரியானதாக இருக்கும். கடிதத்தைக் கொடுத்துவிடுங்கள்' என கூறியிருக்கிறார். ராகுலின் இந்த அதிரடியை இளங்கோவன் எதிர்பார்க்கவில்லை. தன்னிலை விளக்கமாக சிலவற்றைச் சொல்ல முன்வந்தார் இளங்கோவன். ' எதுவாக இருந்தாலும் சுற்றுப்பயணம் முடித்துவிட்டு வந்த பிறகு பேசிக் கொள்ளலாம்' என உறுதியாகக் கூறிவிட்டார். இதன்பின்னர், முகுல்வாஸ்னிக் மூலமாக ராஜினாமா கடிதம் கொடுக்குமாறு மேலிடம் அழுத்தமாகக் கூறிவிட்டது. வேறுவழியில்லாமல்தான், கடிதத்தை அனுப்பினார் இளங்கோவன். இதையடுத்து, சோனியா காந்தியை சந்திக்கவும் டெல்லியில் முகாமிட்டிருந்தார். அவரை சந்திக்கவும் இளங்கோவனுக்கு அனுமதி கிடைக்கவில்லை.

தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று, முடிவுகள் வந்த அன்றே அவர் ராஜினாமா செய்திருந்தால், இந்தக் கேள்வியே வந்திருக்காது. தேர்தலில் அவருடைய அணுகுமுறைகள் பற்றி தொடர்ச்சியாக ராகுல்காந்தியின் கவனத்திற்குப் புகார்கள் சென்றன. செய்யாறு விஷ்ணுபிரசாத், ஜோதிமணி விவகாரங்கள் வெளியில் தெரிந்த ஒன்று. இவர்களைத் தவிர, கட்சியின் சீனியர்கள் பலர் இளங்கோவனுக்கு எதிராக தொடர்ச்சியாக அதிருப்தி புகார்களை வாசித்தனர். எந்தப் பிரச்னை என்றாலும், சோனியாகாந்தியை சந்திக்க டெல்லியில் முகாமிட்டனர். குறிப்பாக, தேர்தலில் மாவட்டத் தலைவர்கள் 18 பேருக்கு சீட் கொடுத்தார் இளங்கோவன். ' தொகுதிக்குள் வெற்றி பெறக் கூடிய வேட்பாளர்களை நியமிக்காததால், தோல்வி அடைந்தோம். தன்னிச்சையாகவே எல்லா முடிவுகளையும் இளங்கோவன் எடுத்தார்' என தினம்தோறும் புகார்கள் சென்று கொண்டிருந்தன.

இளங்கோவனை மையமிட்டு எந்த சர்ச்சை வந்தாலும், அதைப் பற்றி உடனடியாக மேலிடத்தின் கவனத்திற்குக் கொண்டு சென்றனர். எல்லாம் ஒன்று சேர்ந்து பதவிப் பறிப்புக்கு காரணமாக அமைந்துவிட்டது. சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு 29-ம் தேதி டெல்லி திரும்புகிறார் ராகுல்காந்தி. அதற்குள் புதிய தலைவர் நியமிக்கப்பட்டாலும் ஆச்சரியம் இல்லை" என்றார்.

இந்நிலையில், நேற்று இளங்கோவன் ராஜினாமாவுக்கு எதிராக, மாவட்ட தலைவர்கள் பலர் அவரது வீட்டில் ஆலோசனை நடத்தியுள்ளனர். அவர்களிடம் பேசிய இளங்கோவன், ' கட்சியின் சீனியர்களை ஒருங்கிணைக்க முடியவில்லை. தலைமையின் முடிவுக்குக் கட்டுப்பட்டு, கட்சியை வளர்க்க உழைப்போம்' என பேசியுள்ளார்.

' புதிய தலைவராக யார் வந்தாலும், அவருக்கு எதிராக ஒரு கோஷ்டி உருவாவதை காங்கிரஸ் கட்சியில் யார் நினைத்தாலும் தடுக்க முடியாது.இதனால், உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் பாதிப்படையாமல் இருந்தால் சரி' என ஆதங்கப்படுகிறார் காங்கிரஸ் கட்சியின் மூத்த தொண்டர் ஒருவர். 

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.