Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 9, 2016

' பணிவுக்குப் பெயர் போனது பன்னீர் மட்டுமல்ல! ' -வைத்தியைத் தேடி பதவி வரும் மர்மம்


ஒரத்தநாடு வைத்திலிங்கத்திற்கு அடுத்தடுத்து கிடைக்கும் முக்கியத்துவத்தால், அதிர்ந்து போயிருக்கிறார்கள் சீனியர்கள். ' பணிவுக்குப் பெயர் போனது பன்னீர்செல்வம் மட்டுமல்ல. வைத்தியின் விசுவாசத்திற்குக் கிடைக்கும் பரிசுதான் இது' என்கின்றனர் தஞ்சை மாவட்ட அ.தி.மு.கவினர்.

சட்டமன்றத் தேர்தலில் ஒரத்தநாடு தொகுதியில் தி.மு.க வேட்பாளரிடம் தோற்றுப் போனார் வைத்திலிங்கம். ஆனால், அடுத்து வந்த நாட்களில் அ.தி.மு.கவின் ராஜ்யசபா வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதை கட்சியின் சீனியர்கள் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. கடந்த ஆட்சியின் இறுதி வாரங்களில் சீனியர்கள் சிலர் மீது அதிரடியான விசாரணைகளை கார்டன் நடத்திய போதும், வைத்தியின் மீது பெரிதாக எந்தப் புகாரும் வரவில்லை. தற்போது அ.தி.மு.கவின் முக்கிய நிர்வாகிகளை மாற்றி அமைத்து ஜெயலலிதா உத்தரவிட்டிருக்கிறார். இந்தப் பட்டியலில், கோகுல இந்திரா உள்பட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலருக்கு கல்தா கொடுக்கப்பட்ட போதிலும், தேர்தலில் தோற்றுப் போன வைத்திலிங்கம் அமைப்புச் செயலாளராகவும் தஞ்சை தெற்கு மாவட்டச் செயலாளராகவும் நீடிக்கிறார்.

இதுபற்றி நம்மிடம் பேசிய தஞ்சை மாவட்ட அ.தி.மு.க சீனியர் ஒருவர், " அ.தி.மு.கவில் எவ்வளவு சீனியர்கள் கோலோச்சினாலும், அம்மாவின் குட்புக்கில் வைத்திக்கு தனி இடம் உண்டு. சட்டசபைத் தேர்தல் வெற்றிக்காக அவர் காட்டிய அவசரமே தோல்விக்குக் காரணமாகிவிட்டது. நேற்று கட்சிக்காரர் ஒருவரிடம் பேசிய வைத்தி, ' தேர்தலில் முதல் வெற்றித் தொகுதியாக ஒரத்தநாடு இருக்க வேண்டும் என்பதற்காக, வாக்கு எண்ணிக்கை மையங்களில் அதிகப்படியான அலுவலர்களை நியமிக்குமாறு கலெக்டரிடம் கூறினேன். அவரும், அதற்குத் தகுந்தமாதிரி நிறைய அலுவலர்களை நியமித்தார்.

முதல் வெற்றிச் செய்தியாக ஒரத்தநாடு இருந்தால், அம்மா மகிழ்ச்சியடைவார் என்பதற்காகத்தான் இப்படிச் செய்தேன். வாக்கு முடிவில் ஒரத்தநாட்டில் தி.மு.க முன்னிலை, மூன்றாயிரம் ஓட்டு வித்தியாசத்தில் தி.மு.க வெற்றி என்ற செய்தி வெளியாகிவிட்டது. ஒரத்தநாடு மக்கள் இப்படிச் செய்வார்கள் என நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை' என வேதனைப்பட்டார். இருப்பினும், அவர் காட்டிய விசுவாசத்திற்குப் பரிசாகத்தான் அம்மா, ராஜ்யசபா எம்.பி ஆக்கினார். கட்சியில் எவ்வளவோ சீனியர்கள் களையெடுக்கப்பட்டாலும், அம்மா, சின்னம்மாவிடம் அவர் காட்டும் விசுவாசம்தான், தொடர் பதவிகள் கிடைப்பதற்குக் காரணம்" என்றார்.

" சட்டமன்றத் தேர்தலில் தோல்வி அடைந்த நேரத்தில் மிகுந்த கவலையோடு இருந்தார் வைத்தி. கட்சி பதவியை அம்மா பறித்துவிடுவார் என்று பயந்து கொண்டிருந்தார். அதற்குத் தகுந்தார்போல, முன்னணி நிர்வாகிகள் பலரும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுவிட்டார்கள். ஆனால், வைத்திக்கு மட்டும், கட்சிப் பதவி, எம்.பி பதவி என அடுத்தடுத்த பதவிகளைக் கொடுத்திருக்கிறார் அம்மா. ஓ.பி.எஸ்ஸுக்கு அடுத்தபடியாக, மிஸ்டர்.பணிவு பட்டத்திற்குத் தகுதியானவர் வைத்தி. தஞ்சாவூரில் ஒருகாலத்தில் கோலோச்சிய அய்யாறு வாண்டையாரை, கட்சி மேலிடம் கட்டம் கட்டிய பிறகு, வெளிச்சத்திற்கு வந்தார். அந்த இடத்தை இப்போது வரையில் தக்க வைத்துக் கொண்டிருக்கிறார். காரணம். மன்னார்குடியின் முக்கிய வாரிசுகளிடம் அவர் இணக்கமாக இருப்பதுதான்.

தேர்தலில் சீட் கிடைத்த அடுத்த நொடியில், மன்னார்குடி வாரிசுகளின் ஆசிர்வாதத்தோடுதான் தேர்தல் வேலையே பார்க்கக் கிளம்புகிறார். அந்தளவுக்கு அதிகார மையங்களிடம் சரிசமமாக நடந்து கொள்கிறார். இப்போது அவரைப் பார்த்து ஜூனியர் அமைச்சர்கள் பாடம் கற்றுக் கொள்கிறார்கள். வைத்தி அளவுக்குக் கட்சியில் கோலோச்சியவர்கள் இருந்திருக்கிறார்கள். வைத்தி அளவுக்கு அவர்களுக்கு முக்கியத்துவம் கிடைத்ததில்லை. இப்போதைக்கு கார்டனின் குட்புக்கில் இருக்கிறார். அவ்வளவுதான்" என்கிறார் அ.தி.மு.க தலைமைக் கழக நிர்வாகி ஒருவர்.

கார்டனைப் பொறுத்தவரையில், ஒருவருக்கு ஒரேநாளில் பூச்சூடி மகுடம் சூட்டுவதும், அன்று மாலையே பதவியில் இருந்து தூக்கப்படுவதும் புதிதல்ல. ' வைத்திக்கு கிடைக்கும் மரியாதை இன்னும் எவ்வளவு காலத்திற்கு?' என்ற பொறுமல்களும் சீனியர்களிடம் அதிகமாகவே இருக்கிறது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.