Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 9, 2016

7 பேர் விடுதலை... வைகோ மெளனம்..! - மதுரை சிறையில் நடந்தது என்ன?


முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட ஏழு பேரின் விடுதலைக்கான வாகனப் பேரணி, நாளை மறுநாள் வேலூரில் இருந்து சென்னையை நோக்கி நடைபெற உள்ளது. 'இந்தப் பேரணியில் பங்கேற்பது குறித்து வைகோ இதுவரை வாய் திறக்கவில்லை. அவரது கோரிக்கைக்கு நாங்கள் செவிசாய்க்க மறுத்ததுதான் காரணம்' என்கின்றனர் பேரணி அமைப்பாளர்கள்.

ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் சிறையிலடைக்கப்பட்டிருக்கும் ஏழு பேரின் விடுதலைக்காக, தமிழக அரசின் அனுமதியோடு, வாகனப் பேரணி ஒன்று வேலூரில் இருந்து கிளம்ப இருக்கிறது. 'பேரறிவாளன் உள்பட சிறையில் இருக்கும் ஏழு பேரும் மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்யப்பட வேண்டும்' என்பதை வலியுறுத்தி, பா.ம.க நிறுவனர் ராமதாஸ், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் குரல் கொடுத்து வருகின்றனர்.

திரையுலகில் இருந்தும் நடிகர்கள் சத்யராஜ், ரோகிணி, விஜய்சேதுபதி, கலையரசன் ஆகியோரும் இயக்குநர்கள் ராம், வெற்றிமாறன், ரஞ்சித், நவீன் ஆகியோர் பேரறிவாளனின் விடுதலைக்காகக் குரல் கொடுத்துள்ளனர். ஆனால், இதுவரையில் வாகனப் பேரணிக்கு ஆதரவாக ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ தரப்பில் இருந்து எந்தக் கருத்துக்களும் வெளியாகவில்லை. ' தமது கட்சி ஈழத் தமிழர்களுக்கு ஆதரவானது எனச்சொல்லும் வைகோ, பேரறிவாளன் விடுதலைக்கான பேரணி குறித்து மவுனம் சாதிப்பது ஏன்?' என்ற கேள்வி, புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் வலுவாக எழுந்துள்ளது.

இதுபற்றி நம்மிடம் பேசிய பேரணி ஒருங்கிணைப்பாளர் ஒருவர், " ம.தி.மு.கவின் தொண்டர்கள் பலரும் எங்களைத் தொடர்பு கொண்டு, ' பேரணியில் பங்கேற்க ஆவலாக இருக்கிறோம். வைகோ ஏன் அமைதியாக இருக்கிறார் என்று தெரியவில்லை' என ஆதங்கப்படுகின்றனர். தேர்தல் நேரத்தில் விஜயகாந்தை முதல்வராக்க, ஊர் ஊராகப் பிரசாரம் செய்த வைகோ, ஏழு பேரின் விடுதலைக்காக ஒரு வார்த்தைகூடப் பேச மறுப்பதைப் பற்றி ம.தி.மு.க தொண்டர்களே வேதனைப்படுகின்றனர்.

இந்தப் பேரணியில் அவரை முன்னிலைப்படுத்தாமல் இருப்பதைப் பெரிய குற்றமாக பார்க்கிறார். நாங்கள் திரு.வைகோவிடம் மட்டுமல்ல, அனைத்துக் கட்சி நண்பர்களிடமும் தெளிவாக ஒன்றைச் சொல்லிவிட்டோம். ' இந்தப் பேரணி என்பது அரசியல் கலப்பில்லாமல் நடக்க வேண்டும். எந்தக் கரைவேட்டிக்கும் இங்கு இடமில்லை' என உறுதியாகச் சொல்லிவிட்டோம். மனிதாபிமான அடிப்படையில் தமிழர்கள் ஒன்றுகூட வேண்டும் என்றுதான் வேண்டுகோள் வைக்கிறோம். இதை வைகோ விரும்பவில்லை.

கடந்த வாரம் மதுரை மத்தியச் சிறையில், இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட ரவிச்சந்திரனை சந்தித்துப் பேசியிருக்கிறார் வைகோ. அவரிடம், ' இந்த அரசிடம் கோரிக்கை வைத்தால் எடுபடாது. நான் உண்ணாவிரதம் இருக்கிறேன். போராடினால்தான் இந்த அரசு கேட்கும்' எனச் சொல்லியிருக்கிறார். அதற்குப் பதிலளித்த ரவிச்சந்திரன், ' இதுவரையில் நீங்கள் நடத்திய போராட்டங்களுக்கு அரசு எந்தமாதிரியான விளைவைக் காட்டியிருக்கிறது? முதல்வரின் அனுமதியோடுதான் வாகனப் பேரணி நடக்கிறது. பேரறிவாளன் என்ன சொல்கிறாரோ, அதன்படி நடக்கவே விரும்புகிறோம். போராட்டம், ஆர்ப்பாட்டம் என்று அரசின் கோபத்தை அதிகப்படுத்தாமல் இருந்தாலேபோதும் என்று நினைக்கிறோம்' எனத் தெளிவாகச் சொல்லிவிட்டார். இந்தப் பதிலை வைகோ எதிர்பார்க்கவில்லை.

தவிர, முன்பொருமுறை ராம்ஜெத்மலானி ஏழு பேரின் விடுதலைக்காக ஆஜராக வந்தபோதும், வைகோவிடம் சில மனக்கசப்புகள் ஏற்பட்டன. அவர் எங்களிடம், ' நான் இந்த வழக்கைப் பார்த்துக் கொள்கிறேன். வேறு யாரும் தலையிட வேண்டாம்' எனச் சொல்ல, ' என் மகன் உள்பட ஏழு பேரின் விடுதலைக்காக பல வழக்கறிஞர்கள் எங்களுக்காக உதவியுள்ளனர். அவர்களை ஒதுக்கி வைத்துவிட்டு எப்படிச் செயல்பட முடியும்?' என வேதனைப்பட்டார் அற்புதம் அம்மாள். இதையெல்லாம் கணக்கு போட்டுத்தான், நாங்கள் அவரைப் புறக்கணிப்பதாக நினைத்துக் கொள்கிறார். அதைப் பற்றி எங்களுக்குக் கவலையில்லை. எங்கள் பேரணிக்கு அரசியல் சாயம் பூசப்படுவதை நாங்கள் விரும்பவில்லை. ஏழு பேரின் விடுதலை ஒன்றையே குறிக்கோளாக நினைத்துக் கொண்டு பேரணியின் வெற்றிக்காக இரவு பகலாக உழைத்துக் கொண்டிருக்கிறோம்" என்றார் விரிவாக.

'தேர்தல் அரசியலுக்கும் மனிதாபிமான விடுதலைக்கான குரலுக்கும் உள்ள வித்தியாசத்தை வைகோ எப்போது உணர்ந்து கொள்ளப் போகிறார்?' என ஆதங்கப்படுகின்றனர் பேரணி அமைப்பாளர்கள். 

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.