Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 15, 2016

'தேர்தலில் நிற்க பணம் வாங்கினேனா?' -மனம் திறந்த விஜயகாந்த்


'தேர்தலில் நிற்க பணம் வாங்கினேனா?' -மனம் திறந்த விஜயகாந்த்சட்டமன்றத் தேர்தல் படுதோல்விக்குப் பிறகு, தே.மு.தி.கவை சீரமைக்கும் வேலைகளில் தீவிரமாக இருக்கிறார் விஜயகாந்த். ' கட்சியின் அடிமட்ட நிர்வாகிகள் சந்திப்பு, தொடர் சுற்றுப்பயணம் என புதிய உற்சாகத்தோடு வலம் வர இருக்கிறார் கேப்டன்' என்கின்றனர் தே.மு.தி.க நிர்வாகிகள்.  

மக்கள் நலக் கூட்டணியோடு சட்டமன்றத் தேர்தலில் அணி சேர்ந்த தே.மு.தி.க,  2.5 சதவீத வாக்குகளை மட்டுமே வாங்கியது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஐந்து சதவீத வாக்குகளோடு இருந்த கட்சி, இவ்வளவு குறைவான வாக்குகளை வாங்கும் என விஜயகாந்த் எதிர்பார்க்கவில்லை. மாநிலம் முழுவதும், போட்டியிட்ட 104 தொகுதிகளிலும் கட்சிக்கு ஏற்பட்ட பின்னடைவை சரி செய்யும் முயற்சியில் இறங்கியிருக்கிறது தே.மு.தி.க தலைமை. நேற்று கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தின் வட்ட, பகுதிக் கழக பிரதிநிதிகளைச் சந்தித்துப் பேசினார் விஜயகாந்த். இந்தக் கூட்டத்தில், தலைமை நிலையச் செயலாளர் பார்த்த சாரதி மற்றும் இளங்கோவன் ஆகியோர் மட்டும் இடம் பெற்றிருந்தனர். இளைஞரணி தலைவர் சுதீஷ் மற்றும் பிரேமலதா ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.  

இதுபற்றி நம்மிடம் பேசிய தே.மு.தி.க மாநில நிர்வாகி ஒருவர், " மாவட்டச் செயலாளர்களைத் தவிர்த்து இந்தக் கூட்டம் நடத்தப்பட்டது. அவர்கள் பங்கேற்றால், ' அடிமட்ட நிர்வாகிகள் கருத்துச் சொல்ல பயப்படுவார்கள்' என்பதால், வட்ட, பகுதி பிரதிநிதிகளுக்கு மட்டுமே அழைப்பு அனுப்பப்பட்டது. சுமார் மூன்றரை மணி நேரம் பொறுமையாக அமர்ந்து கருத்துக்களைக் கேட்டார் கேப்டன். பலரும், 'மக்கள் நலக் கூட்டணியோடு நாம் சேர்ந்ததை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. கட்சித் தொடங்கிய காலங்களில் எட்டு சதவீத வாக்குகளோடு வலிமையாக இருந்தோம். இப்போது 2.5 சதவீத அளவுக்கு வாக்குகள் குறைந்து போகக் காரணமே, தேர்தலில் நிற்பதற்காக பணம் வாங்கிவிட்டோம் என்ற பிரசாரம் மக்கள் மத்தியில் தீவிரமாகப் போய்ச் சேர்ந்துவிட்டதுதான் காரணம். தி.மு.க, அ.தி.மு.கவுக்கு மாற்றாக நாம் நிற்கிறோம் என்பது மக்கள் மத்தியில் சரியாகச் சென்று சேரவில்லை. ' அ.தி.மு.கவின் வெற்றிக்காகத்தான் நிற்கிறோம்' என மக்கள் நம்பிவிட்டார்கள்.  கட்சியின் மாவட்ட நிர்வாகிகளும், தேர்தலின் கடைசி நாட்களில் கைக்காசை செலவு செய்யாமல் ஒதுங்கிவிட்டார்கள். இதனால், பல பூத்துகளில் ஆட்களே இல்லாத நிலைமை ஏற்பட்டுவிட்டது' என விவரித்தனர்.

  அவர்களுக்கு பதில் அளித்துப் பேசிய விஜயகாந்த், 'நாம் தோற்றுப் போனதற்கு இது மட்டும்தான் காரணமா? நமது ஓட்டுக்கள் எல்லாம் எங்கே போனது? தேர்தலில் நிற்பதற்காக பணம் வாங்கிவிட்டோம் என்று வரும் தகவல்கள் பொய்யானது. நான் யாரிடமும் பணம் வாங்கவில்லை. மக்கள் நலக் கூட்டணியோடு இணைந்ததற்குக் காரணம், மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதற்காகத்தான். இதனால் நமக்கு பெரிய அளவில் இழப்பு ஏற்படவில்லை. மீண்டும் நாம் வருவோம். இப்படியொரு கூட்டணி வைத்தது தவறான முடிவு எனச் சொல்கிறீர்கள். அந்த நேரத்தில், மக்களின் நலன் கருதி எடுக்கப்பட்ட முடிவுதான் அது. உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு நமது பலத்தைக் காட்டுவோம். நாம் இழந்த செல்வாக்கை வரும் தேர்தல்களில் மீட்டெடுப்போம்'  என உறுதியான குரலில் பேசினார்.

இதையடுத்து, வரும் நாட்களில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அடிமட்ட நிர்வாகிகளை சந்தித்துப் பேச இருக்கிறார் கேப்டன். மாநிலம் முழுவதும் தீவிர சுற்றுப் பயணம் செல்லவும் முடிவு செய்திருக்கிறார்" என்றார் விரிவாக.

பீனிக்ஸ் பறவையாக தே.மு.தி.க உயிர்த்தெழுமா? என எதிர்பார்ப்போடு காத்துக் கிடக்கிறார்கள் தே.மு.தி.க தொண்டர்கள். 

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.