Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 16, 2016

தேடப்படும் குற்றவாளி விஜய் மல்லையா... நீதிமன்றம் அதிரடி உத்தரவு!



வங்கிகளில் பெற்ற கடனை திருப்பி செலுத்தாமல், இந்தியாவில் இருந்து தப்பி லண்டன் சென்றுள்ள தொழிலதிபர் விஜய் மல்லையாவை, அறிவிக்கப்பட்ட (தேடப்படும்) குற்றவாளியாக மும்பையிலுள்ள சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச்சட்ட சிறப்பு நீதிமன்றம் அறிவித்து உள்ளது.

இந்திய வங்கிகளில் 9 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் கடன் பெற்றுவிட்டு அதை திருப்பி செலுத்தாமல் இந்தியாவைவிட்டு லண்டன் சென்று தங்கியுள்ளார் தொழிலதிபர் விஜய் மல்லையா. சில வழக்குகளிலும் விஜய் மல்லையாவுக்கு எதிராகக் கைது ஆணைகளை நீதிமன்றங்கள் பிறப்பித்துள்ளன.

ஐ.டி.பி.ஐ. வங்கியிடம் இருந்து ரூ.900 கோடியை கடனாக வாங்கிக் கொண்டு திரும்பச் செலுத்தாத விவகாரத்தில், விஜய் மல்லையாவுக்கு எதிராக சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கு விசாரணையில் மல்லையா நேரில் ஆஜராகாததால், அமலாக்கத் துறையின் கோரிக்கையை ஏற்று அவருக்கு எதிராக பிணையில் வெளிவர முடியாத பிடியாணையை மும்பை சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்தது.

லண்டனில் தற்போது இருக்கும் விஜய் மல்லையாவை, இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பும்படி அந்நாட்டு அரசுக்கு மத்திய அரசு கோரிக்கை விடுத்தது. ஆனால், அந்தக் கோரிக்கையை இங்கிலாந்து அரசு நிராகரித்ததுடன், விஜய் மல்லையாவை நாடு கடத்தும்படி கோரிக்கை விடுத்தால் பரிசீலிக்கத் தயார் எனவும் அறிவித்தது.

இதையடுத்து, மும்பையில் உள்ள சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச்சட்ட (பி.எம்.எல்.ஏ.) சிறப்பு நீதிமன்றத்தில் விஜய் மல்லையாவை தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கக் கோரி குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 82வது பிரிவின் கீழ் அமலாக்கத் துறை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், காசோலை மோசடி உள்பட பல்வேறு வழக்குகளில் விஜய் மல்லையாவுக்கு எதிராகக் கைது உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு நிலுவையில் உள்ளன என்றும், சட்டவிரோதப் பணப்பரிவர்த்தனை வழக்கிலும் அவர் தேடப்படுகிறார் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மனு, மும்பையில் உள்ள பி.எம்.எல்.ஏ. சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி பி.ஆர்.பாவ்கே முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி பாவ்கே, ''அமலாக்கத் துறையின் மனு ஏற்கப்படுகிறது; விஜய் மல்லையா தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்படுகிறார்" என்று உத்தரவிட்டார்.

இதன்மூலம், விஜய் மல்லையாவை எங்கு வைத்து வேண்டுமானாலும் கைது செய்ய காவல்துறைக்கு முழு சுதந்திரம் கிடைத்துள்ளது. மேலும், விஜய் மல்லையா தலைமறைவுக் குற்றவாளியாகக் கருதப்பட்டு, அவருக்குச் சொந்தமான அனைத்து சொத்துகளையும் அமலாக்கத் துறையால் முடக்க முடியும். அதேபோல், பிரிட்டனில் இருக்கும் விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு திருப்பி அனுப்புவதற்கும் நீதிமன்றத்தின் அறிவிப்பு உதவிகரமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.