Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 10, 2016

ஊனுக்கு ஊன்?-சிறுகதை


‘என்னங்க இப்படியே உட்கார்ந்திருந்தா எப்படி? போனது போகட்டும். ஆக வேண்டியதைப் பாருங்க…’

‘ம்…இன்னும் என்ன ஆக வேண்டியது? அதுதான் கட்டிக் காத்த மானம் முழுவதும் காற்றாடுதே! வெளியிலே தலைகாட்ட முடியலை. எவனைப் பார்த்தாலும், ‘உன் பொண்ணு ஓடிப் போயிட்டாளாமே’ன்னுதான் கேட்கிறான். கேவலம்…எவ்வளவு பெரிய அவமானத்தைத் தலையில் கட்டிவிட்டுப் போயிட்டாள்! ‘அப்பா எனக்கு இந்தப் பையன் மேல் இஷ்டமில்லே’ன்னு சொல்லிட்டா நான் என்ன கட்டாயப்படுத்தவா போறேன்? அட, கல்யாணத்தன்னிக்குக் காலையில் கூடச் சொல்லியிருக்கலாமே? ‘ஓகோ’ன்னு ஒரு லட்சம் ரூபாய் செலவழிச்சு கல்யாண ஏற்பாடுகளைச் செஞ்சேன். விடிந்தால் தாலி கழுத்திலே ஏறியிருக்கும். ராத்திரி பார்த்தால் பெண்ணைக் காணோம்! என்ன நடக்கணும்? நீ போசாமல் என் வயிற்றெரிச்சலைக் கிளப்பாமல் உள்ளே போ மரகதம்’

நீண்ட நேரம் பேசியதால் சோமசுந்தரத்தின் நெஞ்சு படபடவென ஏறி இறங்கியது.

நினைக்க நினைக்க நினைவே கசப்பாகி உடல் முழுவதும் பரவிய வேகத்தில், அவர் விழிக்கடையில் நீர் தேங்கியது.

எவ்வளவு பாசமாய் வளர்த்த பெண்! இந்தப் பெண் பிறக்க வேண்டுமென்று அவர் தவம் கிடந்து அறுபடை வீட்டிற்கெல்லாம் சென்று எவ்வளவு நோன்புகளை மேற்கொண்டிருப்பார்! ஊருக்கே பெரிய மனிதன். லட்சுமி தேவியின் பூரண கடாட்சம் பொலிவுற்றுத் திகழ்ந்த வீட்டில், துள்ளி விளையாடப் பிள்ளைச் செல்வம் இன்றி அன்று தவித்ததை விட, வளர்த்த பெண் இன்று வஞ்சகம் செய்துவிட்டு ஓடிப் போன தன்மை அவர் உள்ளத்தை வாள் கொண்டு அறுத்தது.

நடந்தது இதுதான்!

‘ஓகோ’ எனத் தன் ஒரே பெண்ணின் திருமணத்திற்உ ஏற்பாடு செய்திருந்தார் சோமசுந்தரம். ஊரடைத்த பந்தல், எங்கு பார்த்தாலும் வண்ண விளக்குகள், மாவிலைத் தோரணத்தின் மந்தகாச சிரிப்பு. பன்னீரின் மெதுவான வாசனை…இந்த மயக்கத்தில் பெருமை பொங்க வீட்டை வளைய வந்து மருமகனை மகிழ்வோடு அழைக்கக் காத்திருந்தார் அவர்.

வைதேகி – அவள்தான் கொள்ளை அழகு. மகளின் விருப்பம் போல் டாக்டருக்குப் படிக்க வைத்தார் சோமசுந்தரம். கண்ணை இமை காப்பதுபோலப் பெண்ணைக் காத்தார். மருத்துவத் துறையிலேயே மருமகனைத் தேர்ந்தெடுப்பதுதான் தன் மகளின் விருப்பமாக இருக்கும் என்ற எண்ணத்தில் அழகான இளைஞனாக, அறிவில் சிறந்தவனாக அலைந்து திரிந்து சுந்தரத்தைத் தேர்ந்தெடுத்தார் அவர்.

பெண் பார்க்க சுந்தரம் வரும் விஷயத்தை வைதேகியிடம் அவர் கூறியபொழுது, அவள் புன்னகைத்தது மெளனமாகி நின்றாளே தவிர, எதிர்ப்பொன்றும் தெரிவிக்கவில்லை. பார்க்க வந்த சுந்தரத்திடம் அவள் இதமாகப் பேசினாள்.அ வனை மகிழ்விக்க இனிமைக் குரலில் இசைகூட்டி எழில் காட்டி நின்றாள்.

சோமசுந்தரம் பெருமையில் பூரித்துப் போங்கினார். மகப்பேற்றுக்குத் தவம் கிடந்த தமக்கு வைதேகி பிறந்து மணம் செய்து கொண்டு வம்சத்தை விளங்க வைக்கப் போகிறாள் என்ற செய்தி அதிகபட்ச மகிழ்வை உண்டாக்கியது அவருக்கு.

மாப்பிள்ளை வீட்டார் எதிர்பார்த்ததற்கும் மேலாக தன் பணப் பெருமையைக் காட்ட, பணத்தை பணம் என்று பாராமல் கல்யாணச் செலவுகளுக்காக அள்ளி இறைத்தார்.

கல்யாணத்தன்று முதல் நாள் கூட வைதேகி மிக மகிழ்வாகத் தானிருந்தாள். பின் அவள் ஏன் ஓடிப் போனாள்? அதுதான் சோமசுந்தரத்திற்உப் புரியாத புதிராகிவிட்டது.

திருமணத்திற்குக்கூட, எதிர்ப்புத் தெரிவிக்காத வைதேகி – அன்று இரவு திடீரென ஏன் யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் மறைய வேண்டும்?

மரகதம் மருண்டாள். அழுது அழுது அவள் விழிகள் சிவப்பாயின. விருப்பமில்லாமல் திருமண ஏற்பாட்டைச் செய்து தன் ஆசை மகளை அனுப்பிவிட்டார் சோமசுந்தரம் என்பது அவள் கருத்து.

வைதேகி வீட்டை விட்டுச் சென்று ஒரு வாரம் ஒரு நிமிடமாய்ப் பறந்துவிட்டது.

எங்கு சென்றாளோ, எப்படித் தவிக்கின்றாளோ என சோமசுந்தரத்தின் உள்மனம் ஓலமிட்டாலும், அவரின் பெரிய மனிதத்தன்மை போலி வைராக்கியமாக மாறி அவர் உதட்டில் வசைகளாக நடமாடிக் கொண்டிருந்தன.

அந்த ஊரிலேயே சோமசுந்தரம் தான் பெரும் புள்ளி. ஊருக்கு நியாயம் வழங்குவதிலிருந்து, சிறு சிறு இல்லங்களில் நடக்கும் சாவுகளில்கூட அவர் கலந்துகொள்வது வழக்கம்.

மதிப்பும் மரியாதையுமாக வளைய வந்த அவர், கடந்த ஒரு வாரகாலமாக முடங்கிக் கிடந்தார் வீட்டில்.

வைதேகி ஓடக் காரணமென்ன?

வினாக்குறி விசுவரூபம் எடுத்து அவரையும், மரகதத்தையும் அலைகடலில் அகப்பட்ட துரும்பென அலைக்கழித்துக் கொண்டிருந்தது.

ஹாலிலுள்ள சோபாவில் அமர்ந்து, அர்த்தமற்ற சிந்தனைகளில் ஊறிக்கிடந்த சோமசுந்தரம் வாசலில் தபால்காரன் அழைக்கும் ஒலி கேட்டு எழுந்தார்.

‘சே! என்ன வேண்டிக்கிடக்கிறது?’ வேண்டா வெறுப்பாக எழுந்தவர், வாசலிலே சென்று, கீழே கிடந்த கடிதத்தைக் குனிந்து எடுத்தார்.

‘இது என்ன? வைதேகியின் எழுத்துபோல் இருக்கிறது?’ மயிர்க்கால்கள் குத்திட்டு நின்று உடம்பே சிலிர்த்தது.

வைதேகி எழுதியிருக்கிறாளோ?

வைதேகியை நேரில் பார்த்துவிட்டாற் போன்று ஒரு உணர்வு-

எவ்வளவு பெரிய அவமானத்தை உண்டாக்கி விட்டு ஓடியிருக்கிறாள்! அவள் கடிதத்தைக் கண்டா மனம் அலைபாய்கிறது.

இந்த மனம்தான் எப்படிப்பட்டது! பாசத்தை நிரப்பி, பழியை மறைக்கப் பார்க்கிறதே!

எந்த வைதேகியை நினைத்து உள்ளம் கசப்பால் நிரம்பிவிட்டது என்று ஒதுக்கியிருந்தாரோ… அந்த வைதேகியின் எழுத்தைப் போல் இருக்கிறது என்ற ஒரு சிறு எண்ணத்தில் அவரது உள்ளம்தான் எவ்வளவு பாசத்தால் நிரம்பி வழிகிறது!

விரல்கள் படபடக்க கடிதத்தைப் பிரித்து, அதன் மேல் விழிகளை ஓட்டினார்.

‘அன்புகெழுமிய அப்பா,

இக்கடிதத்தில் நீங்கள் வியப்புகளை அடுத்தடுத்து சந்திக்கக் காத்திருக்கிறீர்கள். என் மேல் நீங்கள் அதிகக் கோபமாக இருப்பீர்கள் என்பதை நான் அறிவேன்.

இக் கடிதத்தைப் படிக்கு முன் சென்றாண்டு நடந்த ஒரு நிகழ்ச்சியை நினைவு கூறுங்கள்.

பக்கத்துக் கிராமத்துப் பங்கஜத்தை உங்களுக்கு நினைவு வருகிறதா? என்னடா, இவளுக்கு எப்படி அவளைத் தெரிந்தது என்று வியக்கிறீர்கள், இல்லையா?

மேலே தொடர்வதற்கு முன் சோமசுந்தரத்தின் நெற்றியில் வரிகள் ஒன்று இரண்டு என அடுக்கிய வேகத்தில் அவர் நெற்றியில் வியர்வை முத்துக்கள் அரும்பின.

இது என்ன? யாருக்குமே தெரியாது என என்ணி மறைத்த ஒரு விஷயம் வைதேகிக்கு எப்படித் தெரிந்தது?

ஒன்றும் புரியாத நிலையில் மேலே தொடர்ந்தார் கடிதத்தை.

‘அப்பா,

ஒன்றும் தெரியாத அப்பாவிப் பெண்ணை, பணப் பெருமையைக் காட்டி இருபது வருடங்களுக்கு முன் மயக்கி அவள் பெண்மையை குலைத்தீர்கள். அதன் பலன் மங்கைக்கு தாயானாள் பங்கஜம்.

கடந்த கால நிகழ்ச்சிகள் கடகடவென சோமசுந்தரத்தின் மனத்திரையில் உருண்டன.

மங்கை பருவம் எய்தியதும் மணம் செய்யப் பங்கஜம் முயன்றாள். தகுந்த மணாளனைத் தேடி நாளும் குறித்தாள் திருமணத்திற்கு. இல்லையா அப்பா?

ஆனால் அப்பா, அந்த நாளை யோசித்துப் பாருங்கள். பிள்ளை இல்லையெனத் தவம் கிடந்து என்னைப் பெற்றேன் என்று கதை கதையாகக் கூறுவீர்களே, உங்கள் இச்சைக்கு இரையான ஒரு பெண்ணின் வயிற்றில் பிறந்த ஒரு பெண்ணை அவள் உங்களுடையவள் என்று நீங்கள் ஒத்துக் கொண்டால் – ஒரு வார்த்தை சொல்லியிருந்தால் அன்று மங்கையின் திருமனம் நின்றிருக்குமா? அவள் தற்கொலைதான் செய்து கொண்டிருப்பாளா?

பணப் பெருமை, போலி கெளரவம் – இவை உங்கள் கண்களை மறைத்தன.

நியாயம், தீர்க்க நீங்களே சென்றீர்கள். ‘அப்பன் பெயர் தெரியாத பெண், வேசி பெற்ற மகள்’ எனப் பிள்ளை வீட்டார் திட்டியதற்குத் தலை அசைத்த போது உங்கள் மனச் சாட்சியைக் குழிதோண்டிப் புதைத்தீர்கள்.

பங்கஜம், பாவம். வைரமுடைய அவள் நெஞ்சிலிருந்து மங்கைக்குத் தந்தை நீங்கள் தான் என்ற வார்த்தை உரத்து வந்ததா?

உங்கள் போலிக் கெளரவத்தை மூடி மறைக்க அவள் தன் பெண்மையையே பலி கொடுத்தாள். அவளுக்குத் தெரியும், பணக்கார சகவாசம் என்ன செய்யுமென்று.

அப்பா,

பன்னீர் மணக்க, பால் மணக்க எனக்கு மணமேடை அமைத்தீர்களே! எனக்கு அதில் பன்னீர் மணக்கவில்லை. மங்கையின் கண்ணீர் மணத்தது. அப்பா எனக்கு விருப்பமான ஒரு ஆண் மகனுக்கு என்னைத் திருமணம் முடித்துப் பார்க்க ஆசை கொண்ட நீங்கள் உங்கள் உதிரத்தில் மங்கைக்கு வாழ்வு தர முன் வரவில்லை. அது ஏன்?

பணப் பெருமை, பெரிய மனுஷ தோரணை, இவை உங்களிடமிருந்த மனிதத்தன்மையையே பறித்துவிட்டன.

நான் ஓடிவிட்டேன், வாழ்க்கையை வெறுத்து. உங்களுக்கு அது அவமானம் தந்திருக்கும். நீங்கள் மானமிழந்து கூனிக் குறுகி அமர்ந்திருப்பீர்கள். ஊர் உங்களைத் தூற்றும். உங்கள் பெண் ஓடிவிட்டாள் என்று. இது போதும் மங்கைக்கு நான் செய்யும் கைம்மாறு.

அப்பா நான் கிறிஸ்துவக் கன்னியர் மடத்தில் சேர்ந்து விட்டேன். இத்தோடு என் புகைப்படத்தையும் இணைத்திருக்கிறேன். இனி நான் வெறும் வைதேகி அல்ல; வைலட் வைதேகி. ஆமாம். நான் சிஸ்டராகிவிட்டேன்’

சோமசுந்தரத்தின் விழிகள் குளமாயின. கண்ணீரின் இடையில் கடைசி வரிகளை அவர் உதடுகள் மீண்டும் மீண்டும் படித்தன.

‘அப்பா! நீங்கள் செய்த குற்றத்திற்குத் தண்டனைதான் என் செய்கை. நான் இப்படிச் செய்யாவிட்டால் உங்கள் குற்றத்திற்குத் தண்டனை கிடைத்திருக்காது. நீங்களும் தவற்றை உணர்ந்திருக்க மாட்டீர்கள். அப்பா, பல்லுக்குப் பல், கண்ணுக்குக் கண், உதிரத்திற்கு உதிரம், ஊனுக்கு ஊன் – இது இப்பொழுது உங்களுக்குப் புரியும். விதி என் மூலம் உங்களிடம் விளையாடட்டும்.

என்னை மன்னியுங்கள்.

உங்கள் அன்பு மகள்

வைதேகி.’

நீண்ட பெருமூச்சொன்று அவர் நெஞ்சுக் கூட்டைக் கிழித்துக் கொண்டு வெளிவந்தது.

ஆம். அவர் மகளை எப்படி மன்னிப்பது? உடல் சோர, அக்கவரிலுள்ள படத்தைக் கையில் எடுத்துப் பார்த்தார்.

சிஸ்டர் உடையில் வைதேகி ‘வயலட்’டாகி புன்னகை பூத்துக் கொண்டிருந்தாள் அங்கே!

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.