Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 9, 2016

குற்றாலத்தில் கொட்டுது தண்ணீர்... ஆனால், குளிக்க தடா..! (வீடியோ)


நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் சீசன் களைகட்ட துவங்கியுள்ளது. அருவிகளில் பேரிரைச்சலுடன் தண்ணீர் கொட்டுவதால், சுற்றுலாப்பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

நெல்லை மாவட்டம், குற்றாலத்தில் உள்ள அருவிகளில் வழக்கமாக ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் சீசன் களை கட்டும். தென்மேற்குப் பருவ மழையின் காரணமாக கேரளாவில் மழை பெய்யும்போது, குற்றால மலைப்பகுதிகளிலும் மழைப்பொழிவு இருக்கும்.



அத்துடன் குற்றாலம் மற்றும் அதனைச் சுற்றிலும் உள்ள பகுதிகளில் சாரல் மழையுடன் இதமான சூழல் இருக்கும் என்பதால், நாட்டின் பல்வேறு இடங்களிலும் இருந்தும் சுற்றுலாப்பயணிகள் வருவார்கள்.



இந்த ஆண்டு, கேரளாவில் தென்மேற்குப் பருவமழை நாளை தொடங்கும் என எதிபார்க்கப்படுவதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது. ஆனால், அதற்கு முன்பாகவே நெல்லை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை பெய்வதால், குற்றாலத்தில் உள்ள பிரதான அருவி, ஐந்தருவி போன்றவற்றில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது.



மெயின் அருவி எனப்படும் பிரதான அருவியில், குளிப்பதற்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் உள்ள பாதுகாப்பு ஆர்ச்சையும் தாண்டி தண்ணீர் கொட்டுகிறது. இதனால் அந்த அருவியில் சுற்றுலாப்பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இதே போல், ஐந்தருவியில் உள்ள ஐந்து கிளைகளிலும் இரைச்சலுடன் தண்ணீர் அதிகமாக கொட்டுகிறது. காடுகளில் உள்ள காய்ந்த மரங்கள், பாறைகள் போன்றவை தண்ணீருடன் உருட்டி வரப்படுவதால், இந்த அருவியிலும் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு அனுமதிக்கப்படவில்லை.

அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு...

நெல்லை மாவட்டம் முழுவதும் பரவலாக பெய்து வரும் மழை காரணமாக, அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்து உள்ளது. அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். மலிப்பகுதியில் பெய்து வரும் மழை காரணமாக, 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையின் நீர்மட்டம் ஒரேநாளில் 3 அடி உயர்ந்து 67 அடியானது.


அணைக்கு 2,102 கன அடி தண்ணீர் வந்துகொண்டு இருக்கிறது. 156 அடி உள்ள சேர்வலாறு அணைக்கு நீர்வரத்து அதிகம் இருப்பதால் ஒரே நாளில் 6 அடி உயர்ந்து, 85 அடியை எட்டியது. நெல்லை மாவட்டத்தில் அதிகபட்சமாக பாபநாசத்தில் 3 செ.மீ மழை பதிவாகி உள்ளது. 

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.