Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 16, 2016

பெண்களை நிராகரித்த பழங்குடி திருவிழா! -ஊட்டியில்தான் இந்த விநோதம்


நீலகிரி, தோடர் இன மக்களின் பாரம்பர்யமான போஷ் வழிபாட்டுத் திருவிழாவை கடந்த வாரம் வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர். ' திருவிழா நாட்களில் பெண்களை நாங்கள் கோவிலுக்குள் அனுமதிப்பதில்லை' என அதிர வைக்கின்றனர் தோடர்கள்.

ஊட்டி மலையில், தோடர்கள் வசிக்கும் பகுதிகள் மந்து என்று அழைக்கப்படுகின்றன. ஒவ்வொரு மந்திலும் சுமார் இருபது குடும்பங்கள் வரை வசிக்கின்றன. நீலகிரி மலையில் மட்டும் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட தோடர்கள் பன்னெடுங்காலமாக வசித்து வருகின்றனர். முழுக்க விவசாயத்தை மட்டுமே நம்பி வாழ்க்கை நடத்தி வருகின்றனர். தமிழ்நாட்டில் உள்ள பழங்குடிகளில் மிகவும் செல்வச் செழிப்போடு வாழ்பவர்கள் என்று இவர்களைச் சொல்வது உண்டு. ஒவ்வொரு ஆண்டும் இயற்கைக்கு மரியாதை செலுத்தும் வகையில் போஷ் (Pois) எனப்படும் கோவில் திருவிழாவை கொண்டாடி வருகின்றனர். சுமார் ஐம்பது ஆண்டுகளாக இந்த விழா நடந்து வருகிறது என்கின்றனர்.

ஊட்டி, எப்பநாடு செல்லும் வழியில் புற்கள் மற்றும் மூங்கில்களால் வேய்ந்த அந்தக் குடிலில்தான் தோடர்களின் தெய்வம் அமைந்திருக்கிறது. நீண்டகாலமாக, கோவில் புனரமைப்பு நடக்காததால், இந்தமுறை சொந்தச் செலவில் கோவில் முகப்பை கற்களால் அலங்கரித்தும், மேற்கூரைக்கான புற்களை மேல் பவானி மற்றும் முக்குருத்தி பகுதிகளில் இருந்து கொண்டு வந்த கட்ட ஆரம்பித்தனர். சுமார் இரண்டு மாதங்களாக இதற்கான பணிகள் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை போஷ் திருவிழாவை நடத்தி முடித்துவிட்டனர். இந்த விழாவில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட தோடர்கள் பங்கேற்று, ஆடல் பாடல் என நாள் முழுக்க மகிழ்ச்சியோடு கொண்டாடியுள்ளனர்.





இதுகுறித்து நம்மிடம் பேசிய ஊட்டி தோடர் இனப்பழங்குடி ஒருவர், " ஐம்பது வருஷமா இயற்கை வழிபாடு நடத்திட்டு வர்றோம். கோவிலோட முகப்பில் நட்சத்திரம், சூரியன், நிலா, எருமைத் தலை, பூ என இயற்கையை குறிக்கும் வகையில் சின்னம் பொறிக்கப்பட்டிருக்கும். கோவில் சீரமைப்பு வேலைகளில் முழுக்க ஆண்கள் மட்டுமே ஈடுபட்டோம். பெண்களுக்கு இங்கே அனுமதியில்லை. திருவிழா நாளன்றும் பெண்களை கோவிலுக்குள் அனுமதிக்க மாட்டோம்.

எங்காவது தூரத்தில் நின்று அவர்கள் சாமி கும்பிட்டுக் கொள்ளலாம். எங்கள் பாட்டன்கள் இந்த முறையைக் கடைபிடித்து வந்தார்கள். ஏன் இப்படிச் செய்கிறார்கள் என்றும் தெரியாது. திருவிழா அன்னைக்கு சாமை, வெல்லம் கலந்த உருண்டையைத் தயாரித்து சாப்பிட்டு மகிழ்ந்தோம். இந்த வெல்லம் கலந்த சாமை உருண்டைதான் எங்களுக்கு பிரசாதம். அதன்பிறகு, எல்லோரும் ஒன்றுகூடி எங்களுடைய பாரம்பர்ய நடனத்தை ஆடிவிட்டுக் கிளம்பிவிட்டோம். இனி வரும் காலங்களில் மிகப் பிரமாண்டமாக திருவிழாவை நடத்தத் திட்டமிட்டிருக்கிறோம்" என்றார் மகிழ்ச்சியோடு.

'பெண்களை அனுமதிக்காத இப்படி ஒரு திருவிழா எதற்கு?' என்ற கேள்வியை எழுப்ப தோடர் பழங்குடிகளில் ஒருவர்கூட தயாராக இல்லை. பாரம்பர்ய வழக்கத்தை மீறுவது இயற்கைக்கு எதிரானது என நம்புகிறார்கள். ஊட்டியில் இப்படியும் ஒரு விநோதம்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.