Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 10, 2016

தென்மேற்கு பருவமழை... இப்போதே சுதாரித்த தமிழக முதல்வர்!


கடந்த ஆண்டு பெய்த வடகிழக்கு பருவமழையால் சென்னை மட்டுமின்றி தமிழகத்தில் பல மாவட்டங்கள் பாதிப்பு அடைந்த நிலையில், தற்போது, ஆங்காங்கே  பெய்து வரும் தென்மேற்கு பருவமழையால் சேதம் ஏற்படுவதை தடுக்க உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்திலும், கேரளாவிலும் தற்போது தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளது. சென்னை உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தமிழகத்தில் இந்த ஆண்டில் தென்மேற்கு பருவமழை 4 முதல் 6 சதவீதம் கூடுதலாக பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆராய்ச்சி மையம் கூறி இருக்கிறது. தமிழ்நாட்டில் சில இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 9 செ.மீ. மழை கொட்டியது. புதன்கிழமை 6.5 செ.மீ. மழை பதிவாகி இருந்தது.

கடந்த ஆண்டு தமிழகத்தில் பெய்த வடகிழக்கு பருவமழையால் நவம்பர், டிசம்பர் மாதங்களில் கொட்டிய கனமழையால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் கடலூர் உள்ளிட்ட சில மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. சென்னையில் செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்பட்டதால் ஆயிரக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின. மக்கள் உறைவிடங்களை இழந்து பல இன்னல்களைச்  சந்தித்தனர். தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததே இந்த சேதத்திற்குக் காரணம் என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியிருந்தன.

இந்த நிலையில், கடந்த ஆண்டை போல் இந்தாண்டு தென்மேற்கு பருவமழை காலத்தில் பாதிப்பு ஏற்படும் முன் மழையால் சேதம் ஏற்படுவதை தடுக்க உரிய முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டு உள்ளார். இதைத் தொடர்ந்து, மழையினால் சேதம் ஏற்படுவதைத் தடுக்க அதிகாரிகள் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். பெருநகர சென்னை மாநகராட்சியில் நேற்று முன்தினத்தில் இருந்து 1913 என்ற ‘ஹெல்ப் லைன்’ மீண்டும் தொடங்கப்பட்டு உள்ளது. மாநகராட்சி ஊழியர்கள் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், "மாநகராட்சியில் நிரந்தர கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் குறைகளை தெரிவித்து, பாதிப்பில் இருந்து நிவாரணத்தையும் தீர்வையும் பெற முடியும். மழைநீர் தேங்கினால் உடனடியாக அகற்றுவதற்காக 600 மோட்டார் பம்புகளை தயார் நிலையில் வைத்து இருக்கிறோம். இரவு 10 மணியில் இருந்து மறுநாள் காலை 6 மணி வரையில் இரவு நேரப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இரவில் அவர்கள் ஒவ்வொரு இடமாக சுற்றிப்பார்த்து, மரம் விழக்கூடிய இடங்கள், மழை நீர் தேங்கும் பகுதிகளை பார்வையிட்டு, கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிப்பார்கள்.

மரம் விழுந்துவிட்டால் 2 மணி நேரத்துக்குள் அதை அப்புறப்படுத்தி, அனைத்தையும் சரி செய்யக்கூடிய அளவில் திட்டமிட்டு இருக்கிறோம். இதற்காக மண்டலத்துக்கு 10 முதல் 15 மரம் வெட்டும் எந்திரங்களை தயாராக வைத்து இருக்கிறோம். ஒரு மண்டலத்துக்கு 2 ஜே.சி.பி. எந்திரம் என்ற வீதத்தில் 15 மண்டலங்களுக்கும் 30 ஜே.சி.பி. எந்திரங்கள் உள்ளன. அதுபோல ஒரு மண்டலத்துக்கு 4 படகுகள் என்ற வீதத்தில் 60 படகுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன. இவை தவிர ஒரு கால்வாய்க்கு 2 படகுகள் வீதம் நிறுத்தப்பட்டு உள்ளன. வெள்ளம் வடியாமல் இருக்கும் இடங்கள், வெள்ள நீரோட்டம் சரியாக இல்லாத இடங்கள், அடைப்புக்கு உள்ளான பகுதிகளை அலுவலர்கள் அடையாளம் கண்டு அவற்றை சரி செய்து வருகிறார்கள்.

வெள்ளம் வடியாமல் தேங்கி நின்றால் அதை அப்புறப்படுத்த ‘சூப்பர் சக்கர்’ என்ற நவீன எந்திரங்கள் தேவையான அளவில் நிறுத்தப்பட்டு உள்ளன. ஒரு மண்டலத்துக்கு 20 பேர் என்ற வீதத்தில் மாநகராட்சி அலுவலர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை மாநகராட்சியின் சுகாதாரத்துறை, துப்புரவுத்துறை, பொறியியல் துறை உள்பட 8 துறைகள், இந்த பணியில் நேரடியாக ஈடுபட்டு வருகின்றன" என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.