Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 25, 2016

'மேயர் பதவியே வேண்டாம்...!' -தெறித்து ஓடும் அ.தி.மு.க மாஜிக்கள்


உள்ளாட்சித் தேர்தலில் இனி மேயர் பதவி,  கவுன்சிலர்கள் மூலமாகவே தேர்வு செய்யப்படும் என சட்டசபையில் சட்டத் திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. ' நேரடித் தேர்தல் என்றால் ஒரு மரியாதை இருக்கும். ஆனால் கவுன்சிலராக நிற்க வார்டுகளைப் போய்த் தேடுவதா?' என அலறுகின்றனர் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள்.

சட்டமன்றத் தேர்தலில் சீட் கிடைக்காத முன்னாள் அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், முன்னாள் எம்.பிக்கள் என பலரும் மேயர் பதவிக்கான சீட்டை எதிர்பார்த்திருந்தனர். 'கட்சித் தலைமை தங்களை மேயர் வேட்பாளராக அறிவிக்கும்' என அதிகார மையங்களையும் வலம் வந்தனர். இந்நிலையில், நேரடி மேயர் தேர்தல் முறையை ரத்து செய்யும் சட்டத் திருத்த மசோதாவை கொண்டு வந்து நிறைவேற்றிவிட்டார் முதல்வர் ஜெயலலிதா. இனி வார்டு கவுன்சிலர் தேர்தலில் வெற்றி பெற்ற ஒருவர்தான் மேயராக முடியும் என்ற நிலை உருவானதால், ' எம்.பி, எம்.எல்.ஏ, மந்திரியாக இருந்துவிட்டு, வார்டுகளைத் தேடி அலைவது கவுரவக் குறைச்சலாக இருக்கும்' என பல முன்னணி நிர்வாகிகள் ஒதுங்கிவிட்டனர். இதனால், கடந்தமுறை கவுன்சிலராக நின்று வெற்றி பெற்ற பலரும், மேயர் கனவுகளை நோக்கி காய்களை நகர்த்தி வருகின்றனர்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய அ.தி.மு.கவின் சீனியர் ஒருவர், " அமைச்சருக்கு அடுத்தபடியாக மேயர் பதவி என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. 'மாநகரத்தின் தந்தை' என்ற அடைமொழியோடு, அமைச்சருக்கு இணையாக மாவட்டத்திற்குள் வலம் வர முடியும். கட்சியின் எந்தக் கூட்டமாக இருந்தாலும், தனி முக்கியத்துவம் கிடைக்கும். கட்சிக்காரர்களும் தேடி வருவார்கள். இந்தத் தேர்தலில் கட்சித் தலைமை எம்.எல்.ஏ சீட் கொடுக்காவிட்டாலும், எங்களை மேயர் பதவிக்கு முன்னிறுத்தும் என நம்பிக் கொண்டிருந்தோம். இப்போது அதற்கும் தடை போட்டுவிட்டார்கள். எம்.பி, எம்.எல்.ஏ என தேர்தலில் நின்றுவிட்டு, இப்போது சிறிய வார்டுகளைத் தேடிப் போய் நிற்பதை அவமானமாகப் பார்க்க வேண்டியிருக்கிறது. ஒருவேளை தேர்தலில் போட்டியிட்டு வென்றாலும், மேயர் பதவி கிடைக்குமா என்பதும் நிச்சயமில்லை.

தோற்றுப் போய்விட்டால் அதைவிடக் கேவலம் வேறு எதுவும் இருக்க முடியாது. அதனால், உள்ளாட்சித் தேர்தலில் கட்சி அறிவிக்கும் நபருக்கு வேலை செய்தாலே போதும் என்ற மனநிலைக்கு வந்துவிட்டோம். தவிரவும், யாருக்கு கவுன்சிலர் சீட் என்பதை மாவட்டச் செயலாளர்தான் முடிவு செய்வார். தங்களுக்கு வேண்டப்பட்டவரை முன்னிறுத்தி வெற்றி பெறுவதைத்தான் அவரும் விரும்புவார். எங்களுக்கு முக்கியத்துவம் கிடைக்காமல் இருப்பதே நல்லது என்று நினைக்கிறோம். நகராட்சி, பேரூராட்சித் தலைவர்களுக்கு நேரடித் தேர்தல் நடக்கும் என அறிவித்திருக்கிறார் அமைச்சர் வேலுமணி. கவுன்சிலர் பதவிக்கு நிற்பதைவிடவும், நகராட்சி சேர்மன் பதவியே எவ்வளவோ பரவாயில்லை என்ற மனநிலையில்தான், முன்னணி நிர்வாகிகள் பலரும் இருக்கிறார்கள்" என அசர வைத்தார் அவர்.

'வணக்கத்திற்குரிய மாநகர மேயர்' என்ற வார்த்தையைக் கேட்டாலே தெறித்து ஓடுகின்றனர் அ.தி.மு.கவின் முன்னாள் அமைச்சசர்கள். 

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.