Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 29, 2016

'தயவு செய்து என்னை மன்னித்து விடுங்கள்..!'- வினுப்பிரியா பெற்றோரிடம் கைகூப்பிய சேலம் எஸ்.பி


தற்கொலை செய்து கொண்ட இளம்பெண் வினுப்பிரியாவின் படத்தை ஆபாசமாக சித்தரித்து ஃபேஸ்புக்கில் வெளியிடப்பட்டிருந்த படத்தை அழிக்க கோரி புகார் கொடுக்க வந்த பெற்றோரை காவல்துறையினர் அலட்சியப்படுத்தியதற்காக கைகூப்பி மன்னிப்பு கேட்டுக் கொண்ட சேலம் மாவட்ட எஸ்பி அமித்குமார் சிங், சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டம், இளம்பிள்ளை பகுதியை சேர்ந்தவர் வினுப்ரியா (20). இவரது படத்தை மார்ஃபிங் செய்து ஆபாசமான படங்களோடு இணைத்து ஃபேஸ்புக்கில் சிலர் வெளியிட்டுள்ளனர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த வினுப்ரியாவின் பெற்றோர் சித்தரிக்கப்பட்ட மகளின் ஆபாச படத்தை அழிக்க கோரி சேலம் எஸ்.பி. அமித்குமார்சிங்கிடம் புகார் மனு கொடுத்துள்ளனர்.

அவர் சங்ககிரி டி.எஸ்.பி. கந்தசாமியிடம் கொடுக்க சொல்லியிருக்கிறார். டி.எஸ்.பி. கந்தசாமியிடம் பெற்றோர் புகார் கொடுக்க சென்றபோது அவரோ, மகுடஞ்சாவடி இன்ஸ்பெக்டர் விவேகானந்தனிடம் கொடுக்க சொல்லியிருக்கிறார். அங்கு சென்றபோது இன்ஸ்பெக்டர் விவேகானந்தனோ, சேலம் சைபர் க்ரைமில் கொடுக்க சொல்லியிருக்கிறார். அவர்களோ, இதை உடனே அழிக்க முடியாது. 10, 15 நாட்கள் ஆகும் என்று கூறியிருக்கிறார்கள். அதோடு, மகளை ஆபாசமாக சித்தரித்து ஃபேஸ்புக்கில் வெளியிடப்பட்ட படத்தை அழிக்க வேண்டி காவல்துறையினருக்கு 2 ஆயிரம் பணமும், ஒரு செல்ஃபோனும் லஞ்சமாகக் கொடுத்துள்ளார் வினுப்பிரியாவின் தந்தை. இதனால் மனமுடைந்த வினுப்பிரியா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.



இந்த நிலையில், அலட்சியமாக செயல்பட்ட காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கும் வரை உடலை வாங்க மாட்டோம் என்று வினுப்பிரியாவின் பெற்றோர் மருத்துவமனை வளாகத்திலேயே போராட்டம் நடத்தினர். இந்நிலையில், சேலம் மாவட்ட கலெக்டர் சம்பத்தை நேரில் சந்தித்து புகார் அளித்தனர். அப்போது, அலட்சியமாக செயல்பட்ட காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இதைத் தொடர்ந்து, சேலம் மாவட்ட எஸ்பி அமித்குமார் சிங், வினுப்பிரியாவின் பெற்றோரை சந்தித்தார். அப்போது, தயவு செய்து என்னை மன்னித்து விடுங்கள் என்று கைகூப்பி கேட்டுக் கொண்டார்.

மேலும், வினுப்பிரியா விவகாரத்தில் அலட்சியமாக செயல்பட்ட காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், நீங்கள் (பெற்றோர்கள்) குறிப்பிட்டுள்ள காவலர்களை சஸ்பெண்ட் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எஸ்பி அமித்குமார் சிங் உறுதி அளித்தார்.

எஸ்பி அமித்குமார் சிங்கின் உறுதிமொழியை ஏற்றுக் கொண்ட பெற்றோர், போராட்டத்தை கைவிட்டு வினுப்பிரியா உடலை பெற்றுக் கொள்ள சம்மதித்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எஸ்பி அமித்குமார் சிங், "வினுப்பிரியா விவகாரத்தில் குற்றவாளியை பிடிக்கும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். பெண்கள் பாதிப்பு குறித்த புகாரை எப்படி கையாள்வது என்பது தொடர்பாக காவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட இருக்கிறது" என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.