Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 20, 2016

தே.மு.தி.க. நிர்வாகிகள் போர்க்கொடி: கட்சி விவகாரங்களில் தலையிட பிரேமலதாவுக்கு திடீர் எதிர்ப்பு?


தமிழக சட்டசபை தேர்தலில் மக்கள் நலக்கூட்டணியுடன் சேர்ந்து போட்டியிட்ட விஜயகாந்தின் தே.மு.தி.க. 104 இடங்களில் களம் இறங்கியது.

ஆனால் தே.மு.தி.க.வுக்கு ஒரு இடத்தில் கூட வெற்றி கிடைக்கவில்லை.

2006-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் முதன் முதலாக போட்டியிட்ட தே.மு.தி.க. 234 தொகுதிகளில் நின்று ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே வென்றது. 2011 தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் சேர்ந்து 41 இடங்களில் போட்டியிட்டு 29 இடங்களில் வெற்றி பெற்றது.

ஆனால் இந்த தடவை தே.மு.தி.க. அனைத்து தொகுதிகளிலும் தோல்வியைத் தழுவியதுடன் டெபாசிட்டுகளையும் பறி கொடுத்தது. மேலும் அந்த கட்சியின் வாக்கு சதவீதம் 7.88 சதவீதத்தில் இருந்து 2.40 சதவீதமாக சரிந்தது. 5.48 சதவீதம் வாக்குகளை தே.மு.தி.க. இழந்தது.

குறிப்பாக வட மாவட்டங்களில் தே.மு.தி.க.வுக்கு கடும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம். வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், சேலம் ஆகிய 10 மாவட்டங்களில் தே.மு.தி.க.வுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த 10 மாவட்டங்களில் உள்ள சுமார் 100 தொகுதிகளில் 8 தொகுதிகளில் மட்டுமே அ.தி.மு.க., தி.மு.க.வுக்கு அடுத்தப்படியாக மூன்றாவது இடத்தை பிடிக்க முடிந்தது. மற்ற தொகுதிகளில் தே.மு.திக. 4-வது இடத்துக்கு தள்ளப்பட்டது. பா.ம.க.வை விட தே.மு.தி.க.வுக்கு வட மாவட்டங்களில் பலத்த அடி விழுந்தது.

இத்தகைய நிலை ஏற்பட்டது ஏன்? அதற்கு முக்கிய காரணம் என்ன? என்று தே.மு.தி.க. நிர்வாகிககளை அழைத்து விஜயகாந்த் ஆலோசனை நடத்தி வருகிறார்.

விஜயகாந்திடம் கருத்து தெரிவித்த பெரும்பாலான நிர்வாகிகள், தி.மு.க.வுடன் கூட்டணி வைக்காததால் தான் தே.மு.தி.க.வுக்கு படுதோல்வி ஏற்பட்டது என்று விளக்கம் அளித்தனர். சில நிர்வாகிகள் மக்கள் நலக்கூட்டணியில் இருந்து தே.மு.தி.க. உடனே விலக வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.

நேற்று நடந்த ஆலோசனையின்போது, “தே.மு.தி.க. தொண்டர்கள் மத்தியில் தி.மு.க.வுடன் கூட்டணி ஏற்படும் என்ற மனப்பான்மை ஏற்பட்டிருந்தது. ஆனால் கூட்டணி ஏற்படாததால் தே.மு.தி.க. தொண்டர்கள் சோர்ந்து விட்டனர்” என்று நிர்வாகிகள் தெரிவித்தனர். அவற்றை விஜயகாந்த் கவனமாக கேட்டுக்கொண்டார்.

இந்த நிலையில் தே.மு.தி.க. நிர்வாகிகளில் ஒரு தரப்பினர் பிரேமலதாவுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி இருப்பதாக தெரிய வந்துள்ளது. பிரேமலதா எடுத்த சில முடிவுகள்தான் தே.மு.தி.க. வீழ்ச்சிக்கு வழிவகுத்து விட்டதாக அவர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

எனவே உள்ளாட்சி தேர்தலின்போது, கூட்டணி தொகுதி பங்கீடு, வேட்பாளர்கள் போன்ற விவகாரங்களில் பிரேமலதா தலையீடு இருக்கக் கூடாது என்று வலியுறுத்தியுள்ளனர். இது விஜயகாந்திடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அதே சமயத்தில் அந்த நிர்வாகிகள், பிரேமலதாவுக்கு பதில் சண்முக பாண்டியனை அரசியலுக்கு அழைத்து வருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். சண்முக பாண்டியன் ஏற்கனவே ஒரு படத்தில் நடித்துள்ளார்.

தற்போது அவர் “தமிழன் என்று சொல்” என்ற படத்தில் நடித்து வருகிறார். எனவே சண்முக பாண்டியன் வருகை தங்களுக்கு கைகொடுக்கும் என்று தே.மு.தி.க. நிர்வாகிகள் எதிர்பார்க்கிறார்கள்.

ஆனால் சண்முக பாண்டியனை அரசியலுக்கு கொண்டு வருவது பற்றி விஜயகாந்த் இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.