Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 23, 2016

தமிழகத்தில் குழந்தை கடத்தலை தடுக்க இரண்டே போலீஸார்: பீதியில் வசிக்கும் தெருவோர மக்கள்


மனிதனின் அடிப்படைத் தேவை களில் ஒன்றான வீடு இல்லாமல் வானமே கூரையாக தமிழகத்தில் லட்சக்கணக்கான மக்கள் தெரு ஓரங்களில் வசிக்கின்றனர்.

சென்னையைப் பொறுத்தவரை வடசென்னையில் ஏராளமானோர் தெருவோரத்தில் வசிப்பதைக் காணலாம். இவர்களில் பெரும் பாலானோர் கூலி வேலைக்கு செல் பவர்கள். அவர்களது குழந்தை கள் சாலையோரத்திலேயே சாப் பிட்டு, அங்கேயே தூங்குகின்றன. வேலைக்குப் போய்விட்டு திரும் பும் பெற்றோர், களைப்பில் இரவு நேரத்தில் அயர்ந்து தூங்கி விடுகின்றனர்.

இந்தச் சூழ்நிலை களை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தும் கடத்தல்காரர்கள் குழந்தைகளை கடத்துகின்றனர். குழந்தைகளைத் கடத்துவது பல ஆண்டுகளாக நடந்தாலும், கடந்த ஓராண்டில் இது அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை மட்டும் 271 குழந்தைகள் காணாமல் போயுள்ளன. சென்னையில் மட்டும் 58 குழந்தைகள் காணாமல் போயுள்ளன.

கடத்தலுக்கான காரணம்

குழந்தைகள் கடத்தலைத் தடுக்க உத்தரவிட வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தை நாடிய எக்ஸ்னோரா இன்டர்நேஷனல் அமைப்பின் நிறுவனர் எம்.பி.நிர்மல் ‘தி இந்து’விடம் கூறும் போது, “குழந்தை இல்லாத பல தம்பதிகள் தத்தெடுப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர். அதற்கு ஏராளமான சட்ட நடைமுறைகள் உள்ளன. அதைப் பலரும் விரும்புவதில்லை. அப்படிப்பட்டவர்களை அணுகி, கடத்திய குழந்தைகளை விற்று காசாக்குகின்றனர்.

குழந்தையைக் கடத்துபவர்கள் பிச்சையெடுப்பதைத் தொழிலாகக் கொண்டிருந்தால் கடத்தப்படும் குழந்தைகளையும் பிச்சையெடுக்கச் செய்கிறார்கள். உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் குழந்தைகளின் உடல் உறுப்புகளுக்கான தேவை இருப்பதால் அதற்காகவும் குழந்தையைக் கடத்துகிறார்கள்.

பாலியல் தொழிலுக்காக பெண் குழந்தைகளைக் கடத்தி, அவர் களை 10 வயதிலே போதைக்கு அடிமையாக்கி விபசாரத்தில் ஈடுபடுத்தும் கொடுமையும் நடக்கிறது. இப்படி குழந்தைகள் கடத்தலுக்கான காரணங்களை சொல்லிக் கொண்டே போகலாம். ஏழைக் குழந்தைகள் கடத்தப்படும்போது அவர்களது பெற்றோருக்காக குரல் கொடுக்க யாரும் இல்லை. அதனால்தான் ஏழைக் குழந்தைகளைக் குறிவைத்து கடத்துகின்றனர்” என்றார்.

தனி துறை தேவை

குழந்தை கடத்தல் தடுப்பில் போலீஸாரின் பணி குறித்து மாற்றம் இந்தியா அமைப்பின் இயக்குநர் நாராயணன் கூறும்போது, “தமிழக சிபிசிஐடி போலீஸாரில் மனித கடத்தல் தடுப்புப் பிரிவு என்று ஒரு பிரிவு உள்ளது. இதில் ஒரே ஒரு டிஎஸ்பி மற்றும் காவல் ஆய்வாளர் என மொத்தம் 2 அதிகாரிகள் மட்டுமே உள்ளனர். இந்த 2 பேரை மட்டும் வைத்து, தமிழ்நாட்டில் எத்தனை குழந்தை கடத்தல்களை தடுக்க முடியும்?.

கடந்த 5 ஆண்டுகளில் 14 ஆயி ரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் காணாமல் போயுள்ளதாக காவல் துறையினரே தெரிவிக்கின்றனர். எனவே, மனித கடத்தல் தடுப்புக் கென தனி துறையை தமிழக அரசு உருவாக்க வேண்டும்” என்றார்.

பெண் குழந்தைகள்

கடந்த 2011 முதல் 2015-ம் ஆண்டு வரை தமிழகம் முழுவதும் 14,716 குழந்தைகள் கடத்தப்பட்டுள்ளனர். இவர்களில் பெண் குழந்தைகள் மட்டும் 9,660 பேர். கடத்தப்பட்ட குழந்தைகளில் 14,174 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள 542 குழந்தைகள் காணாமல் போன வழக்குகளில் 535-ஐ போலீஸார் விசாரித்து வருகின்றனர். 7 வழக்குகளில், அந்த குழந்தைகளை கண்டுபிடிக்க முடியவில்லை. அதனால், அந்த 7 வழக்குகளையும் போலீஸார் முடித்து வைத்துவிட்டனர்.

முதலிடத்தில் சென்னை

குழந்தைகள் கடத்தல் அதிகம் நடைபெறும் மாவட்டங்களில் சென்னை முதலிடத்தில் உள்ளது. கடந்த 2011 முதல் 2015-ம் ஆண்டு வரை சென்னையில் மட்டும் 2,586 குழந்தைகள் கடத்தப்பட்டுள்ளனர். மேற்கண்ட தகவல்கள் அனைத்தும் தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் அண்மையில் தெரிவித்துள்ளவை.

காசு பணம் வேண்டாம்..

கடந்த பிப்ரவரி மாதம் சென்னை வால்டாக்ஸ் சாலையில், பெருமாள் லட்சுமி தம்பதியினர் சாலையோர நடைபாதையில் படுத்து தூங்கியபோது, தங்களது 9 மாத பெண் குழந்தை சரண்யாவை பறிகொடுத்தனர். இதுகுறித்து தாய் லட்சுமி கூறும்போது, “கடந்த 10 ஆண்டுகளாக வால்டாக்ஸ் சாலையில்தான் வசித்து வருகிறோம். எனது கணவர் குடிகாரர். நான் வீட்டு வேலை செய்து எனது 3 குழந்தைகளையும் காப்பாற்றி வந்தேன். கடந்த பிப்ரவரி மாதம், எனது கடைசி குழந்தையை முந்தானையில் முடிச்சு போட்டுவிட்டு தூங்கிக்கொண்டிருந்தேன். நள்ளிரவில் சேலையை அறுத்துவிட்டு குழந்தையை தூக்கிச் சென்றுவிட்டனர். எனக்கு அரசு சார்பில் காசு பணம் எதுவும் தர வேண்டாம். குழந்தையை கண்டுபிடித்து தந்தால் போதும்” என்றார் கண்ணீர்மல்க.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.