Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 18, 2016

மரணத்தில் முடிந்த மோதல்: சர்ச்சையில் ஐ.என்.டி.யூ.சி தலைவர் காளன்!


காங்கிரஸின் தொழிற்சங்கப் பிரிவான ஐ.என்.டி.யூ.சியின் மூத்த துணைத் தலைவர் நஞ்சப்பன் நேற்று இறந்துவிட்டார். ' தேர்தலில் அ.தி.மு.கவை ஆதரித்தது தொடர்பாக, தலைவர் காளனுடன் ஏற்பட்ட மோதலின் முடிவில் நஞ்சப்பன் இறந்துவிட்டார். அவர் மரணம் இயற்கையானது அல்ல' என அதிர வைக்கின்றனர் தொழிற்சங்க நிர்வாகிகள். 
சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல்கள் வரும்போதெல்லாம் சுயமாக முடிவெடுக்கும் அளவுக்கு அதிகாரம் வாய்ந்த தொழிற்சங்கமாக ஐ.என்.டி.யூ.சி இருக்கிறது. காரணம், காங்கிரஸ் கட்சியின் எந்த செயல்திட்டமும் இந்த அமைப்பைக் கட்டுப்படுத்தாது என்பதுதான். இதன்காரணமாக, கடந்த சில தேர்தல்களில் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு கொடுத்து வந்தார் தலைவர் காளன். இதற்கு ஐ.என்.டி.யூ.சி அமைப்பின் சில நிர்வாகிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 
ஐ.என்.டி.யூ.சி அமைப்பின் அமைப்புச் செயலாளர் முனுசாமி, இதுபற்றி நம்மிடம் விரிவாகப் பேசினார்.
" மிகுந்த வேதனையாக இருக்கிறது. இறந்து போன நஞ்சப்பனுக்கு 65 வயதுதான் ஆகிறது. அகில இந்திய சிமெண்ட் சம்மேளனத்தின் பொதுச் செயலாளராகப் பதவி வகித்தவர். நாற்பதாண்டு கால அனுபவம் மிக்க தொழிற்சங்கவாதியாக இருந்தார். அவருக்கு குடிப்பழக்கமோ, அசைவ உணவுப் பழக்கமோ கிடையாது. சென்னைக்கு வரும்போதெல்லாம் அலுவலகத்தின் மேல்மாடியில்தான் தங்குவார். கடந்த 12-ம் தேதி தொழிற்சங்க கூட்டம் நடந்து கொண்டிருந்தது.
அப்போது காளன், மதுரை கோவிந்தராஜ், கட்டட சங்கத் தலைவர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட சிலர், நஞ்சப்பனோடு தகராறு செய்து கொண்டிருந்தனர். ' கட்சி எங்களைக் கட்டுப்படுத்தாது. அ.தி.மு.க.வுக்கு ஆதரவு கொடுத்தால் உனக்கென்ன? நாங்கள் தேர்தல் வேலை பார்க்கக் கூடாது என்று சொல்வதற்கு நீ யார்? போயா வெளியே..' என கடுமையாகச் சத்தம் போட்டுள்ளனர். இதன்பிறகு, காளன் தூண்டுதலில் கருப்பையா, தங்கராஜ் உள்ளிட்டவர்கள் நன்றாகக் குடித்துவிட்டு வந்து நஞ்சப்பனோடு சண்டை போட்டுள்ளனர். அப்போது ஏற்பட்ட தகராறில் நஞ்சப்பன் மயங்கி விழுந்துவிட்டார். மூன்று மணி நேரம் கழித்துதான் அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். நஞ்சப்பன் இயற்கையான முறையில் சாகவில்லை. அவரது மரணத்தில் சந்தேகம் உள்ளது" என கொந்தளித்தவர், 
"வரும் காலங்களில், ' கட்சித் தலைமை என்ன முடிவெடுக்கிறதோ, அதையே தொழிற்சங்கமும் பின்பற்ற வேண்டும்' என தொழிற்சங்கத்தின் 254-வது பொதுக்குழுவில் முடிவெடுத்துள்ளனர். இதனை காளன் உள்ளிட்ட சிலர் விரும்பவில்லை. ' அகில இந்திய பொதுக்குழு தீர்மானத்தைக் கடைபிடிக்க வேண்டும்' என நஞ்சப்பன் வலியுறுத்தியதன் விளைவாகத்தான், மரணத்தை நோக்கித் தள்ளப்பட்டார். 'இனி வரும் காலங்களில் காளனுக்கு எதிராக யாரும் பேசக் கூடாது' என்ற நோக்கத்தில் சில நிர்வாகிகள் செயல்படுகின்றனர். நஞ்சப்பன் மரணம் தொடர்பாக, சோனியா காந்தி, ராகுல்காந்தி, மாநிலத் தலைவர் இளங்கோவன் ஆகியோருக்குப் புகார் மனு அனுப்பியுள்ளேன். கட்சித் தலைமை விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறேன்" என்றார் வேதனையோடு.
நஞ்சப்பன் மரணத்திற்கு காரணம் என்று சொல்லப்படும் ஐ.என்.டி.யூ.சி தலைவர் காளனிடம் பேசினோம்.
" என் மீது புகார் கொடுப்பது யார்? முனுசாமியா? யார் அவர்? அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டு இது" என்றதோடு முடித்துக் கொண்டார். 
அடுத்த மாதம் 2-ம் தேதி தன்னுடைய பிறந்தநாளைக் கொண்டாட இருந்த மூத்த தொழிற்சங்கவாதி நஞ்சப்பன் இறந்துவிட்டார். கோவை, மதுக்கரையில் உள்ள அவரது இல்லத்தில் ஏராளமான தொழிலாளர்கள் குழுமியுள்ளனர். ' இந்த விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தி, நஞ்சப்பன் மரணத்திற்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என அவர்கள் வலியுறுத்துகின்றனர். 
என்ன செய்யப் போகிறது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி? 

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.