Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 14, 2016

அமெரிக்காவை அதிரச் செய்த ஐஎஸ் தீவிரவாதி.! முன்னாள் மனைவி சொல்லும் அதிர்ச்சி தகவல்


அமெரிக்காவை அதிரச் செய்த ஐஎஸ் தீவிரவாதி.! முன்னாள் மனைவி சொல்லும் அதிர்ச்சி தகவல்அமெரிக்காவில் விடுதியில் புகுந்து 50 பேரை சுட்டுக்கொன்ற வாலிபர் ஐ.எஸ். அமைப்பைச் சேர்ந்தவர் என்ற திடுக்கிடும் தகவல் தெரிய வந்துள்ளது. தீவிரவாதி பற்றி முன்னாள் மனைவி அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தின் ஆர்லாண்டோ நகரில் உள்ள ‘பல்ஸ்’ ஓரினச்சேர்க்கையாளர் இரவு விடுதியில் நேற்று முன்தினம் அதிகாலையில் மர்மநபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 50 பேர் கொல்லப்பட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர் அந்த வாலிபரை சுட்டுக் கொன்றனர். அமெரிக்காவின் மத்திய புலனாய்வு போலீஸான எப்.பி.ஐ. நடத்திய விசாரணையில், விடுதியில் தாக்குதல் நடத்தியவர் உமர் மாதீன் (29) என்பதும், அவர் ஆப்கானிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த பெற்றோருக்கு பிறந்தவர் என்பதும் தெரியவந்தது. அவர், புளோரிடா மாகாணத்தின் போர்ட் செயின்ட் லூசி நகரில் வசித்து வந்ததையும் காவல்துறையினர் உறுதிப்படுத்தினர்.

மேலும் மத்திய புலனாய்வு காவல்துறையினர் நடத்திய விசாரணையில், இங்கிலாந்தின் ஜி4எஸ் செக்யூரிட்டி என்னும் தனியார் நிறுவனத்திற்காக உமர் மாதீன் 2007ம் ஆண்டு முதல் காவல் அதிகாரியாக பணிபுரிந்தது தெரியவந்தது. துப்பாக்கியை கையாளும் அதிகாரம் அவருக்கு அளிக்கப்பட்டு இருந்தது. அவரைப் பற்றி சந்தேகம் எழுந்ததால் 2 முறை மத்திய புலனாய்வு காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தினர். முதல் விசாரணை பணியில் சேர்ந்தபோது நடத்தப்பட்டது. அப்போது அவருக்கு தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்பு இருக்கிறதா? என்று விசாரித்தனர். ஆனால், அவரைப் பற்றிய எந்த தவறான பின்னணியையும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதேபோல் 2013ம் ஆண்டும் உமர் மாதீனின் பின்னணி குறித்து மீண்டும் புலனாய்வு காவல்துறையினர் விசாரணை நடத்தினர். சிரியா நாட்டில் செயல்படும் ஐ.எஸ். இயக்கத்தினருடன் அவருக்கு தொடர்பு இருக்கிறதா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

2014ம் ஆண்டு அமெரிக்காவை சேர்ந்த மனோர் முகமது அபு சல்ஹா என்ற நபர் சிரியாவில் தற்கொலை படைத் தாக்குதலில் ஈடுபட்டார். அவருடன் உமர் மாதீனுக்கு தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் புலனாய்வு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். எனினும் உமர் மாதீன் குறித்து எந்த பின்னணியும் கண்டறியப்படவில்லை. இந்த நிலையில், பணியின்போது தான் வைத்திருந்த ஜி4எஸ் நிறுவனத்தின் துப்பாக்கி எதையும் அவர் தாக்குதல் நடத்துவதற்கு பயன்படுத்தினாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. எனினும் இது தொடர்பாக எந்த தகவலும் உறுதிப்படுத்தப்படவில்லை.

இதற்கிடையே, உமர் மாதீன் சிதோரோ யூசுபி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டதும், அடுத்த 4 மாதத்தில் அவரை விவாகரத்து செய்த தகவலும் வெளியாகி உள்ளது. இதுபற்றி சிதோரோ யூசுபி கூறுகையில், "எனக்கும் உமர் மாதீனுக்கும் 2009ல் திருமணம் நடந்தது. அவர், எப்போதும் கொந்தளிப்பான மனநிலையில் இருப்பார். எதையும் வெறுப்புணர்வுடன் பார்ப்பார். அடிக்கடி என்னை அடித்து உதைத்து கொடுமைப்படுத்துவார். இல்லை என்றால் கடுமையாக திட்டுவார். அவருடைய சித்ரவதையை என்னால் தாங்க முடியவில்லை. இதனால்தான் எனது குடும்பத்தினர் அவரிடம் இருந்து விவாகரத்து பெற்றுத் தந்தனர்" என்றார்.

இதற்கிடையே இரவு விடுதியில் 50 பேரை சுட்டுக்கொன்ற உமர் மாதீன் ஐ.எஸ். அமைப்பைச் சேர்ந்தவர் என்பதை அமெரிக்க புலனாய்வு காவல்துறையினர் நேற்று உறுதி செய்தனர். ஆர்லாண்டோ இரவு விடுதி தாக்குதலுக்கு ஐ.எஸ். அமைப்பும் பொறுப்பு ஏற்றுக் கொண்டு உள்ளது. இது பற்றிய அறிவிப்பை ஐ.எஸ். அமைப்பின் அல்பயான் குழுவின் வானொலி வெளியிட்டது. ஆர்லாண்டோ சம்பவத்தை தொடர்ந்து அமெரிக்கா முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பு பணியிலும் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.