Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 10, 2016

பதவி ஏற்பு விழாவை புறக்கணித்த என்.ஆர்.காங்கிரஸ்... இது புதுச்சேரி கலாட்டா!


புதுச்சேரியில் இன்று கூடிய 14-வது சட்டசபைக் கூட்டத்தில் புதிய எம்.எல்.ஏக்கள் பதவியேற்றுக் கொண்டனர். பதவியேற்பு நிகழ்ச்சியில் முக்கிய எதிர்க்கட்சியான என்ஆர். காங்கிரஸ் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தது.

நடந்து முடிந்த புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ்-திமுக கூட்டணி 17 தொகுதிகளிலும், என்.ஆர். காங்கிரஸ் 8 தொகுதிகளிலும், அதிமுக 4 தொகுதிகளிலும், சுயேச்சை ஒரு இடத்தையும் பிடித்தது. காங்கிரஸ் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து கடந்த 6-ம் தேதி நாராயணசாமி தலைமையிலான அமைச்சரவை பதவியேற்றது. இந்நிலையில் இன்று காலை 9.30 மணிக்குக் கூடிய சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் காங்கிரஸ் கட்சியின் 15 எம்.எல்.ஏக்களும், திமுகவின் இரண்டு எம்.எல்.ஏக்களும்,  அதிமுகவின் நான்கு எம்.எல்.ஏக்கள் மற்றும் மாஹேயைச் சேர்ந்த சுயேச்சை எம்.எல்.ஏ. பேராசிரியர் ராமச்சந்திரன் ஆகியோரும் பதவி ஏற்றுக் கொண்டனர்.

ஆனால் முக்கிய எதிர்க்கட்சியான என்.ஆர்.காங்கிரஸ் இந்தப் பதவியேற்பு விழாவில் பங்கேற்காமல் புறக்கணித்தது. மேலும் அந்த நேரத்தில் கட்சி அலுவலகத்தில் பூஜை செய்துவிட்டு எம்.எல்.ஏக்கள் கூட்டத்தை நடத்தினார் அக்கட்சியின் தலைவர் ரங்கசாமி. பின்னர் பதவியேற்பு விழா முடிந்ததும் ரங்கசாமி உள்ளிட்ட எட்டு எம்.எல்.ஏக்களும் தற்காலிக சபாநாயகரான வி.பி.சிவக்கொழுந்து அறையில் உறுதிமொழி எடுத்துக்கொண்டு பதவியேற்றுக் கொண்டனர்.



பதவியேற்பு விழாவை புறக்கணித்தது ஏன் என ரங்கசாமியிடம் பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு, “எங்களுக்கு உகந்த நேரத்தில்தான் நாங்கள் பதவியேற்க முடியும்” என்றவர் “எதிர்க்கட்சித் தலைவர் யார் என்பது அப்போது அமரும்போது தெரியும்” என்றார். மேலும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க நீங்கள் அனுமதி கேட்டிருப்பதாக தகவல்கள் வெளிவருகிறதே என பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு, 'ஆமாம் உண்மைதான்' என்று பதில் அளித்துவிட்டுக் கிளம்பிச் சென்றார்.

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்திருந்தால் என்.ஆர்.காங்கிரஸ் வெற்றி பெற்றிருக்கும். ஆனால் கடந்த சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி வைத்து வெற்றி பெற்றவுடன் அதிமுகவை கழற்றிவிட்டு சுயேட்சை ஆதரவுடன் ஆட்சியைக் கைப்பற்றியவர் ரங்கசாமி என்பதால் இந்த முறை ஜெயலலிதா கூட்டணிக்கு சம்மதிக்கவில்லை. ரங்கசாமியும் ஆட்சியைப் பறிகொடுத்தார். இந்நிலையில் தற்போது தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க இவர் முயற்சி செய்வது புதுச்சேரி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தொடர்ந்து சட்டப்பேரவை கூட்டம் மீண்டும் 11 ம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறும் என்றும், அன்றைய தினம் புதுச்சேரி சட்டப்பேரவைக்கான தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்தல்  நடக்கும் என்றும் தற்காலிக சபாநாயகர் அறிவித்தார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.