Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 20, 2016

இக்கட்டான நிலையில் பிரதமர்!


தமிழக முதல்வர் ஜெயலலிதா, செவ்வாயன்று, டில்லியில், பிரதமர் மோடியை சந்தித்து, தமிழக நலத்திட்டங்களுக்காக மனு அளிக்க வந்திருந்தார்.

மாலையில், பிரதமரை சந்திக்க நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. அன்று காலை துணை சபாநாயகரும், அ.தி.மு.க., - எம்.பி.,யுமான தம்பிதுரை, தானும், முதல்வருடன் பிரதமர் இல்லத்திற்கு வருவதாகவும், அதற்கான, அனுமதி வேண்டும் என, பிரதமர் அலுவலகத்தில் கேட்க, உடனே, அனுமதி வழங்கப்பட்டது.டில்லி ரேஸ் கோர்ஸ் சாலையில், பிரதமர் இல்லம் உள்ளது. இந்த சாலையில் உள்ள, 5ம் எண் பங்களாவில், பிரதமரின் அலுவலகம் செயல்படுகிறது. 7ம் எண் பங்களாவில் பிரதமர் வசிக்கிறார். இதைத் தவிர, 9ம் எண்ணுள்ள பங்களாவும் உள்ளது. தாற்காலிகமாக மோடி இங்கு தங்கியுள்ளார். மாலையில், முதல்வர் இந்த பங்களாவிற்கு வர, அவருடன் அதிகாரிகள், தம்பிதுரை ஆகியோரும் வந்தனர். ஒரு சில நிமிடங்கள் பிரதமரைச் சந்தித்த பின், அதிகாரிகள் வெளியேறி, வேறு அறையில் அமர்ந்து கொண்டனர்; துணை சபாநாயகர் தம்பிதுரையும் அவர்களோடு அமர்ந்து கொண்டார்.முதல்வரும், பிரதமரும் தனி ஆலோசனை மேற்கொண்டனர். அதற்கு முன்னதாக பிரதமர், தன் செயலரிடம், 'துணை சபாநாயகர் எங்கே அமர்ந்திருக்கிறார்?' என கேட்டார். 'மற்ற தமிழக அதிகாரிகளுடன் அமர்ந்து உள்ளார்' என, பதிலளித்தார். அவர், 'துணை சபாநாயகர் ஆயிற்றே... அவர் எப்படி அதிகாரிகளுடன் உட்கார முடியும்; பார்லிமென்ட் சம்பிரதாயப்படி அவருக்கு தனி மரியாதை அளிக்க வேண்டுமே... எதற்காக அவர் இப்படி இங்கு வந்து, அதிகாரிகளுடன் உட்கார வேண்டும்' என பிரதமர் மோடி கேட்டார்.'சார்... தமிழக அரசியல் நிலை உங்களுக்குத் தெரியும். துணை சபாநாயகராக இருந்தாலும், மேடத்தோடு அவர் வரவில்லை என்றால், அவருக்கு தான் பிரச்னை என, கழக அரசியலில் சம்பிரதாயத்திற்கு இடமில்லை' என பதிலளித்தாராம் அந்த அதிகாரி!

கன்னடம் கற்கிறார் நிர்மலா!

மொழி தெரியாத மாநிலத்திற்கு, பெரிய பதவியில் வருபவர்கள், 'உங்கள் மொழியை விரைவில் கற்றுக் கொள்கிறோம்' என, பதவியேற்கும் போது சொல்வர்; பத்திரிகைகளும் இதை பெரிதுபடுத்துவர். ஆனால், விரைவில் இந்த உறுதிமொழி மறக்கப்படும். 'ஏதோ ஆர்வக் கோளாறில் சொல்லி விட்டார் அந்த தலைவர்' என, மக்களும் மறந்து விடுவர். ஆனால், பா.ஜ.,வின் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அப்படிப்பட்டவர் கிடையாது. இவர் தமிழகத்தைச் சேர்ந்தவர்; இவர் கணவர் ஆந்திராவைச் சேர்ந்தவர். சென்ற முறை தெலுங்கு தேசம் உதவியுடன், ஆந்திராவிலிருந்து ராஜ்யசபா எம்.பி.,யாகி, மத்திய அமைச்சரானார் நிர்மலா. இவருக்கு தெலுங்கு தெரியும்; ஆனால், இந்த முறை தெலுங்கு தேசம் உதவ மறுத்து விட, கர்நாடகாவிலிருந்து எம்.பி., ஆகியுள்ளார். 'கர்நாடகா நலனுக்காக பார்லிமென்டில் செயல்படுவேன்' என, எம்.பி.,யாக தேர்ந்தெடுக்கப்பட்ட அன்று உறுதியளித்தார். முதலில், அந்த மாநில மொழியான கன்னடத்தைக் கற்றுக் கொள்ள வேண்டும். உடனே, அதற்கான வேலையில் இறங்கினார் நிர்மலா. டில்லியில் உள்ள கன்னட பள்ளியின் ஆசிரியர் ஒருவரை அழைத்து தனக்கு கன்னடம் சொல்லித் தருமாறு கேட்டுக் கொண்டார்; அந்த ஆசிரியரும் மகிழ்ச்சியோடு ஒப்புக் கொண்டார். வெளியே டூர் போகும் நாட்களைத் தவிர்த்து, டில்லியில் இருக்கும்போதெல்லாம், தினமும் கன்னடம் கற்று வருகிறார் நிர்மலா சீதாராமன். குறைந்த காலத்தில், நாற்பதுக்கும் மேற்பட்ட வார்த்தைகளைக் கற்றுக் கொண்டு விட்டாராம். பார்லிமென்டில் காவிரி பிரச்னை குறித்து விவாதம் நடந்தால், யாருக்கு ஆதரவாகக் குரல் கொடுப்பார் நிர்மலா?- சொந்த மாநிலமான தமிழகத்திற்கா... எம்.பி.,யாக தேர்ந்தெடுக்கப்பட்ட கர்நாடகாவிற்கா?நிர்மலா கன்னடம் கற்றுக் கொள்வதை பாராட்டும் பா.ஜ., - எம்.பி.,க்கள், 'மஹாராஷ்டிராவிலிருந்து எம்.பி., ஆகியுள்ள சிதம்பரம், மராத்தி கற்றுக் கொள்வாரா?' என, கேள்வி எழுப்புகின்றனர்.

பிரதமர் மீது பாக்., மீடியா மோகம்!

இந்தியாவைப் பற்றி எப்போதுமே மட்டம் தட்டி பேசுவது தான் பாகிஸ்தான் மீடியாவிற்கு பழக்கம். சமீபத்தில், பிரதமர் மோடி, அமெரிக்கா சென்று, அங்கு பார்லிமென்டில் உரையாற்றினார். இந்த பேச்சைக் கேட்ட பாக்., 'டிவி' சேனல்கள், தங்களுடைய இந்தியா எதிர்ப்பு நிலையிலிருந்து, தலைகீழாக மாறி விட்டன.அனைத்து பாகிஸ்தான் செய்தி சேனல்களும், பிரதமர் மோடியின் உரை பற்றி, பெரும் விவாதம் நடத்தின. அதில் கலந்து கொண்ட அரசியல் விமர்சகர்கள் மற்றும் அரசியல்வாதிகள் என அனைவரும், மோடியை தலையில் துாக்கி வைத்து, ஆடாத குறை தான். அந்த அளவிற்கு பாராட்டு பிரதமருக்கு. 'என்னமாகப் பேசினார்... இவருடைய பேச்சைக் கேட்டு, 70 முறை எம்.பி.,க்கள் கை தட்டினர்' என, சொல்லும் பாகிஸ்தான் மீடியா, 'ஆறு நாட்களில், ஐந்து நாடுகள் சுற்றுப் பயணம் செய்து, ஓய்வெடுக்காமல் என்னமாய் உழைக்கிறார்' என, மோடியை பாராட்டு மழையில் நனைத்தது. 'நம்ம பிரதமர் நவாஸ் ஷெரீப்பும் இருக்கிறாரே தண்டத்திற்கு' என, பாக்., பிரதமரைக் கண்டனம் செய்தன பாக்., 'டிவி'க்கள்! இது மட்டுமல்ல, இதே அமெரிக்க பார்லிமென்ட், சில ஆண்டுகளுக்கு முன், மோடிக்கு அமெரிக்கா விசா தர மறுத்தது என்பதை சுட்டிக் காட்டிய பாக்., 'டிவி'க்கள், 'மோடியோடு, 'செல்பி' எடுத்துக் கொள்ள நிறைய எம்.பி.,க்கள் வரிசையில் நின்றனர்; இன்னொரு பக்கம், மோடியின் ஆட்டோகிராப்பிற்காக பெரும் கூட்டம்' என்று வர்ணித்தன. இதையெல்லாம் விட ஒரு படி மேலே போய், 'மோடி ஒரு, ராக் ஸ்டார்' எனவும் அழைத்தன. 'மோடி பிரதமராக பாகிஸ்தானுக்கு இருந்திருக்கக் கூடாதா' என பாக்., 'டிவி' செய்தியாளர்கள், ஏக்கத்தோடு கூறினர். அணு ஆயுத சப்ளை குழுவில் சேர, மோடியின் அதிரடி நடவடிக்கைகளைப் பாராட்டின பாக்., மீடியா. இந்த பாக்., மீடியா பாராட்டுதலை, தனக்கு சாதகமாக உ.பி., சட்டசபை தேர்தலில் பயன்படுத்திக் கொள்ள, பா.ஜ., தயாராகி விட்டது!

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.