Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 28, 2016

ஆட்டோக்காரர்.. ஆட்டோக்காரர்... நாலு தெரிந்த ரூட்காரர்!


பயணிகளைத் தான் ஆட்டோ ஓட்டுனர் தேடுவர்; ஆனால், வித்தியாசமாக, சேலம் ரயில் நிலையத்தில், பயணிகளில் பலர், ஒரு ஆட்டோ ஓட்டுனரை தேடுகின்றனர். அவர் தான், பாபு என்ற, 81 வயது, 'இளைஞர்!'

காலில் விளையாட்டு வீரர்கள் அணியும் ஷூ, தலையில் தொப்பி என்று, 'டிப் டாப்'பாக இருக்கிறார், பாபு.
குறைந்த வாடகை; நாமே கொடுத்தாலும், நியாயமான கட்டணத்தை விட கூடுதலாக ஒரு ரூபாய் கூட வாங்க மறுப்பது; எவ்வளவு நேரம் காத்திருக்க சொன்னாலும், காத்திருப்பு கட்டணம் வாங்க மாட்டார், அசாத்திய பொறுமை, தன்னையும், வாகனத்தையும் சுத்தமாக வைத்திருக்கும் பாங்கு, யாரையும் மரியாதையுடன் அழைத்து பேசும் பண்பு, கடைசி வரை உழைத்து பிழைக்க வேண்டும் என்ற மாண்பு... இவையெல்லாம் தான், அவரை தேட வைக்கும் காரணிகள்.
சேலத்தில் பிறந்து, வளர்ந்தவரான பாபு, குடும்ப சூழ்நிலை காரணமாக சிறுவயதிலேயே வேலைக்கு சென்றார். குடும்பத்தை காப்பாற்ற எல்லாவிதமான கடினமான வேலைகளையும் பார்த்தவர், சேலத்தில் எப்போது ஆட்டோ அறிமுகமாயிற்றோ அப்போது முதல், 50 ஆண்டுகளுக்கும் மேல் ஆட்டோ ஓட்டி வருகிறார்.

ஒருமுறை, இவரது ஆட்டோவில் பயணி ஒருவர் ஆறு சவரன் தங்க நகையை தவறவிட்டு விட்டார். அன்று, சவாரிக்கு கூட போகாமல், காவல் நிலையத்தின் உதவியுடன் சம்பந்தப்பட்ட பெண்ணை தேடிப்பிடித்து நகையை ஒப்படைத்த பிறகே நிம்மதி அடைந்துள்ளார்.
சேலத்திற்கு ரயில் ஏறவோ அல்லது இறங்கியோ தனியாக வரும் பெண் பயணிகளின் பாதுகாவலர் இவரே! எந்த நேரமாக இருந்தாலும், பாபுவிடம் சொல்லி விட்டால் போதும், அவரே பொறுமையாக காத்திருந்து, ரயில் ஏற்றிவிடுவார் அல்லது பத்திரமாக அழைத்து வருவார்.

இதே போல துணை இல்லாத நோயாளிகளை மருத்துவமனைக்கு அழைத்துப் போவது, பள்ளிக்கூட குழந்தைகளை பாதுகாப்பாக அழைத்து வருவது எல்லாம் இவருக்கு விருப்பமான விஷயங்கள்.
இதன் காரணமாக, இவரது ஆட்டோ ஓய்வின்றி, ஓடிக் கொண்டே இருக்கும். மனைவியை இழந்த நிலையில், இரு மகள்களையும் நல்ல முறையில் திருமணம் முடித்து, செட்டில் செய்தபின், இப்போதுதான் சொந்த ஆட்டோ வாங்கி ஓட்டுகிறார். மேலும், தன்னால் முடிந்த உதவியாக, ஏழைப் பிள்ளைகளுக்கு நோட்டு, பேனா வாங்கிக் கொடுக்கிறார்.

'என் தொழிலை ரொம்ப நேசிக்கிறேன்; இத்தொழில் மூலம், தினமும் புதுப்புது ஆட்களை பார்க்கலாம், பேசலாம். இயற்கையை ரசிக்கலாம், நல்ல விஷயங்களை பகிர்ந்து கொள்ளலாம். விடுமுறை, விசேஷம் என்று வீட்டில் இருப்பது எல்லாம் எனக்கு பிடிக்காது; ஓடிக்கிட்டே, உழைச்சுக்கிட்டே இருக்கணும். இதுவரை, உடலில் எந்த நோயும் இல்லை; பார்வையும் தெளிவாக இருக்கு; மூணு வேளையும் பசிக்குது; அப்புறம் என்ன சோம்பல் வேண்டிக்கிடக்கு...' என்கிறார்.
வாய்ப்பு, வசதி இல்லை என்று வீட்டிலும், மரத்தடியிலும், வேலை வாய்ப்பு அலுவலகங்களிலும் முடங்கிக்கிடக்கும் இளைஞர்களே... பாபுவிடம் பேசிப் பாருங்கள்... உங்கள் வாழ்க்கையை நிச்சயம் புரட்டிப் போடும்
.
பாபுவின் மொபைல் எண்: 98941 62112.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.