Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 20, 2016

31 மணி நேரத்தில் 20-25 சிசேரியன்...டாக்டரா? கட்டிங் மாஸ்டரா? மருத்துவர்களை வதைக்கும் அரசு!


அரசு மருத்துவமனைகளில் போதிய மருத்துவர்கள் இல்லாத காரணத்தால் இருக்கும் மருத்துவர்களைக் கொண்டே சிகிச்சை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. இந்தப் பணிச்சுமையால் மருத்துவர்கள் உடல் மற்றும் உளவியல் ரீதியிலான பாதிப்புக்கு ஆளாகின்றனர் என்கிறது மருத்துவர் தரப்பு. அரசு மருத்துவமனைகளில் பணியாற்றக்கூடிய மருத்துவர்களின் நெருக்கடி நிலையைப் பற்றிப் பேசுகிறார் மருத்துவரும் செயற்பாட்டாளருமான ரமேஷ்...

‘‘தமிழகத்தில் மொத்தம் 20 அரசு மருத்துவக் கல்லூரிகளும், 15 தனியார் மருத்துவக் கல்லூரிகளும் இருக்கின்றன. இக்கல்லூரிகளிலிருந்து ஆண்டுக்கு 5 ஆயிரம் இளநிலை மருத்துவர்கள் வெளிவருகின்றனர். அரசு மருத்துவமனைகளில் ஆண்டுக்கு ஆயிரம் இளநிலை மருத்துவர்களுக்கான தேவை இருக்கிறது. ஆக, தேவைக்கு அதிகமான அளவில் இளநிலை மருத்துவர்கள் இருக்கிறார்கள். ஆனால், இதயநோய், மகப்பேறு, சிறுநீரகவியல் போன்ற மருத்துவத் துறைகளுக்கான சிறப்பு மருத்துவர்களுக்குதான் இங்கு தட்டுப்பாடு நிலவுகிறது.

2015ம் ஆண்டு அரசு மருத்துவமனைகளுக்கு 500 மகப்பேறு மருத்துவர்களுக்கான தேவை இருந்தது. ஆனால், மகப்பேறு மருத்துவம் படித்து வெளியே வந்தவர்கள் 50க்கும் குறைவானவர்களே. இப்படி ஒவ்வொரு துறையிலும் தேவைக்கும் குறைவானவர்கள்தான் படித்து முடித்திருக்கிறார்கள். இதனால் கடும் ஆள் பற்றாக்குறை நிலவுகிறது.இந்நிலை மிகவும் அபாயகரமானது. ஏனெனில், ஆண்டுக்கு 500 பேர் தேவைப்படக்கூடிய சிகிச்சைகளை ஆட்கள் பற்றாக்குறை காரணமாக 50க்கும் குறைவானவர்களைக் கொண்டு மேற்கொள்ள வேண்டியிருக்கிறது.

இதனால் ஒவ்வொரு மருத்துவரும் அதிக நேரம் பணியாற்ற வேண்டிய கட்டாயத்துக்கு உட்படுத்தப்படுகின்றனர். எனது மனைவி மகப்பேறு மருத்துவராக திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். காலை 7 மணிக்கு பணிக்குச் சென்றால் அடுத்த நாள் மதியம் 2 மணி வரைக்கும் அவரது பணி நீடிக்கும். அதாவது, 31 மணி நேரம் தொடர்ச்சியாக பணியாற்ற வேண்டிய இக்கட்டான சூழல். இந்த 31 மணி நேரத்தில் சராசரியாக 20-25 சிசேரியன் வரை செய்தாக வேண்டிய கட்டாயம் அவருக்கு இருக்கிறது.

ஒரு மருத்துவர் மூன்று சிசேரியனுக்கு மேல் செய்தாலே அதன் தரம் குறையும் என்பதுதான் உண்மை. இப்படி இருக்கையில் உறக்கமே இல்லாமல் 20க்கும் மேற்பட்ட சிசேரியன்கள் மேற்கொள்ளும்போது எப்படி முழு கவனத்துடன் செயல்பட முடியும்?இந்தியாவில் பொதுமக்களின் சராசரி  வாழ்நாள் 70 வயது. மருத்துவர்களின் வாழ்நாளோ 56 வயதுதான். பணிச்சுமை  காரணமாக சரியான நேரத்துக்கு உணவு, உறக்கம் இல்லாததால் மருத்துவர்களின்  ஆயுள் குறைவாக இருக்கிறது.

பணிச்சுமை அதிகம் என்கிற சூழலிலும்,  மருத்துவர்களுக்கான ஊதியம் மிகவும் குறைவாகவே இருக்கிறது. தனியார் மருத்துவமனைகளோடு ஒப்பிடுகையில் அரசு மருத்துவமனையில் அதிக நேரம் அதிக சிகிச்சைகள் மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. இருந்தும் தனியாரை விட குறைவான ஊதியமே வழங்கப்படுகிறது. இதைக் கணக்கில் கொண்டே பல மருத்துவர்கள் வேலையை விட்டு விலகி விடுகின்றனர். அது பணியிலிருப்பவர்களுக்கு மேலும் சுமையைக் கொடுக்கிறது.

இந்த நிலைக்குக் காரணம் மருத்துவக் கல்லூரிகளில் சிறப்பு மருத்துவத் துறைப் படிப்புக்கான இடங்கள் குறைவான அளவிலேயே ஒதுக்கப்பட்டிருக்கின்றன. அனைத்துத் துறைகளுக்கும் சேர்த்து தமிழ்நாட்டில் சிறப்பு மருத்துவப் படிப்புக்கு 1,200 இடங்களும், உயர் சிறப்பு மருத்துவத்துக்கு 250 இடங்களும்தான் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. இதனால்தான் ஆண்டுக்கு 10 இதய நோய் மருத்துவர்கள், 8 சிறுநீரக மருத்துவர்கள், 6 ரத்த நாள சிகிச்சை மருத்துவர்கள் என சொற்ப மருத்துவர்களே வெளிவருகின்றனர். 7 கோடி பேர் வாழும் தமிழ்நாட்டில் இவ்வளவு குறைவான எண்ணிக்கையில் சிறப்பு மருத்துவர்களைக் கொண்டு என்ன செய்ய முடியும்?

இளநிலை மருத்துவர்களுக்கு 6 மாதப் பயிற்சி வழங்கி துறை சார்ந்த சிகிச்சைகளை மேற்கொள்ளச் சொல்கிறார்கள். ஒரு துறை சார்ந்து படித்து வரும் மருத்துவர் இடத்தில், 6 மாதம் பயிற்சி பெற்ற இளநிலை மருத்துவரைக் கொண்டு நிரப்புவது எந்த முறையில் சரியானதாக இருக்கும்? இளநிலை மருத்துவர்களால் அவசரக் கட்டத்தை கையாள முடியாது.

இதனால் நிறைய தவறுகள் நடக்க வாய்ப்பிருக்கிறது. சிறப்பு மற்றும் உயர் சிறப்பு மருத்துவப் படிப்புக்கான இடங்கள் அதிகரிக்கப்பட வேண்டும். மேலும், முதுநிலைப் படிப்பை ஊக்குவிப்பதற்கான திட்டங்களை கொண்டு வர வேண்டும். தனியார் அளவுக்கு இல்லாவிட்டாலும் மத்திய அரசு வழங்கும் அளவுக்காவது மருத்துவர்களுக்கான ஊதியம் வழங்கப்பட வேண்டும்’’ என்கிறார் டாக்டர் ரமேஷ்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.