Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 30, 2016

நூறு ரூபாய் தா!-சிறுகதை


சூளூரில் சாத்தப்பன் என்பவன் வசித்து வந்தான். இவன் வயலில் விளைந்த காய்கறிகளைப் பறித்து, ஒரு கோணியில் நிரப்பி தலையில் சுமந்துக் கொண்டு, சந்தையில் விற்பதற்கு சென்றான். பாதையில் ஒரு மாடு தறிகெட்டு ஓடி வந்து சாத்தப்பனை முட்ட வந்தது. பயத்தில் சாத்தப்பன் ஓட ஆரம்பிக்க... அவன் தலையிலிருந்த காய்கறி மூட்டை அங்கு மேய்ந்து கொண்டிருந்த கோழியின் மீது தற்செயலாக விழுந்து விட்டது. கோழி அந்த இடத்திலேயே இறந்துவிட்டது.
கோழிக்குச் சொந்தக்காரன், கெட்ட எண்ணம் கொண்ட கலகக்காரன். எப்போது யாரை சண்டைக்கு இழுக்கலாம் என்று காத்துக் கொண்டிருப்பான். வெறும் வாயை மெல்பவனுக்கு அவல் கிடைத்தால் சும்மா இருப்பானா? இதுதான் சரியான சந்தர்ப்பம் என்று சாத்தப்பனிடம் சண்டைக்குக் கிளம்பி விட்டான்.
""என் கோழியை சாகடித்து விட்டாய். அதற்கு நஷ்ட ஈடாக நூறு ரூபாய் கொடுத்தால்தான், உன்னை இந்த இடத்தை விட்டு நகர அனுமதிப்பேன்,'' என்று சண்டைக்கு வந்து விட்டான்.
சாத்தப்பன் அந்தக் கோழியின் விலையை தருவதாகக் கூறியும், அவன் ஒத்துக் கொள்ளவில்லை.
எனவே, இருவரும் நீதிபதியிடம் சென்றனர்.
கலகக்காரன் அநியாயமாக நடந்து கொள்கிறான் என்று நீதிபதிக்குப் புரிந்துவிட்டது. முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டும் என நினைத்தார்.
""ஆமாம், முப்பது ரூபாய் மதிப்புள்ள கோழிக்கு ஏன் நூறு ரூபாய் கேட்கிறாய்?'' என்று நீதிபதி கேட்டார்.
""இன்று இதன் மதிப்பு முப்பது ரூபாயாக இருக்கலாம். நாளானால் இது வளர்ந்து முட்டையிடும்; குஞ்சு பொரிக்கும். அந்தக் குஞ்சு வளர்ந்து அதுவும் முட்டையிடும். கோழிகள் பல பெருகும். அவ்விதம் கணக்குப் பார்த்துத்தான் நூறு ரூபாய் கேட்கிறேன்,'' என்றான் கலகக்காரன்.
""சரி உன் விருப்பப்படியே உனக்கு நூறு ரூபாய் கொடுக்கச் சொல்கிறேன். ஆமாம், அந்த ஓராண்டுக் காலத்தில் அந்தக் கோழிகளுக்கு எவ்வளவு தீனி செலவாகும்?''
""இந்த ஒரு கோழிக்கு தினமும் ஆழாக்கு தானியம். பின்னர் அதன் குஞ்சுகளின் குஞ்சுகளுக்கு என்று எல்லாம் மொத்தமாக ஒரு மூட்டை தானியம் செலவாகும்,''
""சரி நல்லது. நீ இப்போது என்ன செய்கிறாய்... இந்த ஓராண்டுக்கான தானியத்தை இந்த விவசாயியிடம் கொடுத்து விடு. அவரை உடனே உனக்கு நூறு ரூபாய் கொடுக்கச் சொல்கிறேன்,'' என்றார் நீதிபதி.
"ஒரு மூட்டை தானியத்தின் விலை நிச்சயம் நூறு ரூபாய்க்கு மேல் இருக்கும். ஒரு மூட்டை தானியத்தை கொடுத்து விட்டு, இவனிடம் நூறு ரூபாய் வாங்க வேண்டுமா?' என்று அதிர்ந்தான்.
""ஏன் மவுனமாக நிற்கிறாய்? நான் சொல்வது சரிதானே! சீக்கிரம் விவகாரத்தை முடி. எனக்கு வேறு வேலைகள் இருக்கிறது,'' என்று நீதிபதி அவசரப்படுத்தினார்.
""ஐயா... எனக்கு கோழியின் விலை முப்பது ரூபாயைக் கொடுத்து விட்டாலே போதும்,'' என்றான் கலகக்காரன்.
""இதை நீ முதலிலேயே வாங்கிக் கொண்டிருக்கலாமில்லையா? வீணாக என்னிடம் வழக்குக்கு வந்து என் நேரத்தையும் வீணாக்கி விட்டாய். அதனால், உனக்கு அபராதம் ஐம்பது ரூபாய் விதிக்கிறேன். அந்த ஐம்பது ரூபாயை கட்டிவிட்டுச் செல்,'' என்று நீதிபதி தீர்ப்பை கூறினார்.
என்னுடைய பேராசைக்கு இது தேவைதான் என்று நொந்துக் கொண்டான் கலகக்காரன்.
*** 

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.