Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 15, 2016

நேர்மை!-சிறுகதை


இலுப்பூர் என்ற ஊரில் ராமன், சோமன் என்று இரு நண்பர்கள் இருந்தனர். இருவரும் ஓரளவு படித்திருந்த போதிலும், எவ்வித உத்தியோகமும் கிடைக்காமல், தம் ஊரில் ஏதேதோ வேலைகளைச் செய்து பிழைத்து வந்தனர்.
ராமன் தனக்குக் கிடைக்கும் வருமானம் போதாமல் போனதால் கோபம் கொண்டு அந்தக் கோபத்தைத் தன் மனைவி, மக்கள் மீது காட்டி வந்தான். சோமனோ தனக்குக் கிடைத்ததைக் கொண்டு திருப்தி அடைந்து வாழ்க்கை நடத்தி வந்தான்.
ஒருநாள் ராமன், சோமனிடம், ""சோமா! நமக்கு திடீரென ஒரு புதையல் கிடைத்தால், எவ்வளவு நன்றாக இருக்கும்?'' என்று கேட்டான்.
""ராமா! இப்படியெல்லாம் நினைக்காமல் பாடுபட்டு நேர்மையாக இருந்து பணம் சேர்... அதுதான் நல்லது,'' என்றான் சோமன்.
சில நாட்களுக்குப் பிறகு ராமனும், சோமனும் ஏதோ ஒரு வேலையின் பொருட்டு, பட்டணத்திற்குக் கிளம்பினர். வழியில் ஒரு பை கிடந்ததைக் கண்ட ராமன் மகிழ்ச்சியுடன் அதனை எடுத்து வந்தான்.
அதில் ஐம்பது ஆயிரம் இருப்பது கண்டவன், ""ஆகா! என் அதிர்ஷ்டமே அதிர்ஷ்டம். இதனால் எவ்வளவு சந்தோஷப் படுகிறேன் தெரியுமா? கடவுளே என் நிலையைப் பார்த்து இதை எனக்குக் கொடுத்திருக்கிறார். இதை நாம் இருவரும் சமமாகப் பங்கிட்டுக் கொள்ளலாம்,'' என்றான்.
சோமனோ, ""வேண்டாம். இது யாரோ தொலைத்து விட்ட பணம். நாம் இப்பையை கிராம அதிகாரியிடம் ஒப்படைத்து விட்டால், அவர் விசாரித்து இதை <உரியவரிடம் சேர்த்து விடுவார். அதனால், பணம் உரியவரிடம் சேர்ந்து விடும். மற்றவர் பணத்துக்கு நாம் ஆசைப்படக் கூடாது. நாமே உழைத்துப் பணம் சம்பாதித்து கிடைத்ததைக் கொண்டு திருப்தியுடன் வாழ்வதுதான் நல்லது,'' என்றான்.
ராமனோ, ""முடியாது... எனக்கு கிடைத்ததை நான் ஏன் கொடுக்க வேண்டும்? வழியில் எனக்கு கிடைத்தது. இது யாருக்குச் சொந்தம் என்பதும் எனக்குத் தெரியாது. பணம் கிடைத்த போதும், நீயும் என்னுடன் இருந்தாய் அதனால் <உனக்கும் நான் பங்கு கொடுத்தே ஆக வேண்டும். அதனால், நீ பாதிப் பணத்தை வாங்கிக் கொள்,'' என்று இருபத்தைந்து ஆயிரத்தை அவனது பையில் திணித்தான். சோமன் பதில் பேசாமல் இருந்தான்.
ராமன் பட்டணத்திற்கு சென்று தன் மனைவிக்கும், குழந்தைகளுக்கும் துணிகளை வாங்கினான். சோமன் எதுவும் வாங்கவில்லை.
இந்த சம்பவம் நிகழ்ந்த ஒரு மாதத்திற்கு பின் சோமன், ராமனிடம் சென்று, ""ராமா எனக்கு பட்டணத்தில் உத்தியோகம் கிடைத்துவிட்டது. நான் அதை ஏற்கப் போகிறேன்,'' என்றான்.
அதை கேட்டு ராமன் ஆச்சரியப்பட்டு, ""உனக்கு எப்படி இந்த வேலை கிடைத்தது?'' என்று கேட்டான்.
சோமனும், ""நீ கண்டெடுத்த பணத்தில் எனக்கு பாதி பணத்தை கொடுத்தாயே நினைவில் இருக்கிறதா? அதோடு என் மனைவி கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்து வைத்திருந்த இருபத்தைந்து ஆயிரத்தை சேர்த்து, நம் கிராம அதிகாரியிடம் கொடுத்து நடந்தைக் கூறினேன். மீதமுள்ள இருபத்தைந்து ஆயிரத்தை நானே சம்பாதித்து அவரிடம் கொடுத்து விடுவதாகவும் கூறினேன். அந்த அதிகாரியும் நான் சொன்னதை கேட்டு மகிழ்ந்து போனார்.
அவரும் விசாரித்து அந்த பணப்பை நம் ஊரில் காய்கறி வியாபாரம் செய்யும் நல்லசாமியின் பணம் என அறிந்து, அவனிடம் ஒப்படைத்து என்னைப் பற்றிச் சொன்னார். நல்லசாமிக்கு அரசாங்கப் பொக்கிஷ அதிகாரியைத் தெரியும். அரசாங்க பொக்கிஷத்தில் தினமும் லட்சம் ரூபாய்க்குக் குறையாமல் வரவு வந்து கொண்டே இருக்கு. அதற்குக் கணக்கு எழுதி நாணயமாய் காத்து வர ஒருவன் தேவை என அவர் நல்லசாமியிடம் கூறினார். நல்லசாமி என்னைப் பற்றியும், நான் நேர்மையுடன் பணத்தை கிராம அதிகாரியிடம் ஒப்படைத்ததை பற்றியும் விவரமாகக் கூறி என்னைச் சிபாரிசு செய்ததால் எனக்கு இந்த உத்தியோகம் கிடைத்தது,'' என்றான்.
""அப்படியானால் என்னை விட்டு விட்டு நீ மட்டும் பட்டணத்திற்குப் போகப் போகிறாயா?'' என்று பெருமூச்சு விட்டவாறே கேட்டான் ராமன்.
சோமனும், ""இல்லை, உன்னையும் கூட்டிக்கொண்டுதான் போகப் போகிறேன். நல்லசாமியிடம் உன்னைப் பற்றிக் கூறி உன் ஏழ்மைதான் உன்னை ஆசைகொள்ளச் செய்கிறது என்றும், உன்னை அவனது வியாபாரத்தில் கூட்டாளியாகச் சேர்த்துக் கொள்ளும்படியும் கூறினேன். அவனும் அதற்கு சம்மதித்தான். எனவே, நீயும் என்னோடு கிளம்பு,'' என்றான்.
""சோமா! நேர்மையாக நடந்தால் நிச்சயம் நல்ல பலன் என்பதை உணர்ந்தேன். இனி உன்னைப் போலவே நானும் நடக்கிறேன்,'' என்றான் ராமன்.
இரு நண்பர்களும் பட்டணத்திற்குப் போய் தம் வேலைகளைச் செய்து கொண்டு சுகமாக வாழ்ந்தனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.