Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 17, 2016

கண்களின் அழகை பராமரிக்க எளிய வழிமுறைகள்


கண்ணில் நீர் வடிதல், சிவந்துபோதல், கோடுகள், கண் இமை உதிர்தல், சுருக்கங்கள் என்று பலருக்கும் கண்களே வயோதிகத்தின் வாசலாய் அமைந்துவிடுகின்றன.

திடீரென உடல் எடை குறைதல், தூக்கமின்மை, வேளாவேளைக்குச் சரியாகச் சாப்பிடாமல் இருப்பது, சத்துக் குறைபாடு, தரமில்லாத மேக்கப், வெயிலில் அதிகம் அலைவது போன்ற காரணங்களால் கண்கள் பாதிக்கப்படுகிறன.

கண்களைச் சுற்றி இருக்கும் தோல் மிகவும் மென்மையானது. நீர் வடிதல், சிவந்து போதல், வீக்கம், தூக்கமின்மை இவைதான் கண்ணில் வரும் கருவளையத்திற்கு மிக முக்கியக் காரணங்கள்.

பகல் தூக்கத்தைக் காட்டிலும் இரவு 8 மணி நேரத் தூக்கம் அவசியம் தேவை. பச்சை உருளைக்கிழங்கின் சாற்றை எடுத்துக் கண்களுக்குக் கீழே தடவலாம். வெள்ளரிக்காயை நறுக்கி, மூடிய கண்களின் மேல் வைத்து சிறிது நேரம் ஓய்வு எடுப்பதன் மூலம் கண்களின் சோர்வு நீங்கி, குளிர்ச்சி அடைந்து கருவளையங்கள் மறையும்.

பன்னீரைப் பஞ்சில் தோய்த்து இரவு தூங்கும்போது கண் இமை மீது வைத்துக்கொள்வதால் கருமை நீங்கி, கண்கள் பளிச்சென்று இருக்கும். கண்ணின் கீழே அதிகச் சுருக்கம் இருப்பதாக நினைப்பவர்கள் ஐலைனரோடு கீழ் இமையில் பென்சிலும் உபயோகித்தால் சுருக்கங்கள் தெரியாமல் இருக்கும்.

விளக்கெண்ணெய் மற்றும் நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் அகில் எண்ணெய் ஆகிய இரண்டையும் சம அளவு கலந்து கண்களின் மேல் போட்டு வர, வறட்சி நீங்கி, இமை மற்றும் புருவத்திலும் முடி நன்றாக வளரும்.

கண்களின் அழகை அம்சமாகக் காட்டுவது புருவங்கள்தான். சிலருக்குப் புருவத்தில் முடியே இருக்காது. நிறமும் குறைவாக இருக்கும். தினமும் கரிசலாங்கண்ணி, விளக்கெண்ணெயைத் தலா ஐந்து சொட்டுகள் எடுத்து, சூடு செய்து, நெல் உமித் தூளை ஒரு சிட்டிகை கலந்து, புருவத்தில் மசாஜ் செய்யலாம்.

அரை மணி நேரத்திற்குப் பின்பு வெதுவெதுப்பான நீரில் துடைத்துவிட வேண்டும். வாரம் மூன்று முறை இப்படிச் செய்வதன் மூலம் புருவத்தில் முடி கருகருவென வளரும்.

கண்களுக்குக் கீழும் புருவங்களுக்கு மேலும் வட்ட வடிவில் மசாஜ் செய்தால், அந்த இடங்களில் ரத்த ஓட்டம் அதிகரித்து, கண்களின் கீழ் உள்ள கோடுகள் மற்றும் சுருக்கங்கள் மறைவதுடன், சோர்வு, நீங்கிப் புத்துணர்வு கிடைக்கும்.

கண்களுக்கு முன் கட்டை விரலை வைத்து அருகிலும், தொலைவிலும் விரலை நகர்த்தி மாற்றி மாற்றிப் பார்க்க வேண்டும். இதுபோல் தினமும் 15 முறை செய்ய வேண்டும்.

முகத்திற்கு முன்பு இரண்டு கைகளில் ஒன்றை மேல் நோக்கியும் மற்றொன்றைக் கீழ் நோக்கியும் வைத்து, இரண்டு கைகளையும் திரும்பத் திரும்பப் பார்க்க வேண்டும்.

தொடர்ந்து இந்தப் பயிற்சியில் ஈடுபடும்போது, கண்களில் புத்துணர்வு கிடைப்பதை உணரலாம். 20 முறை கண்களை மூடி இருட்டை உணர்வதன் மூலம் கண்களுக்கு நல்ல பயிற்சி அளிக்க முடியும்.

கண்ணில் உள்ள விழி வெண் படலம் (கார்னியா), விழித்திரை நன்றாகச் செயல்படுவதற்கு வைட்டமின் ‘ஏ’ அவசியம். வைட்டமின் ‘ஏ’ நிறைந்த கேரட், முருங்கைக் கீரை போன்ற கீரை வகைகள், மீன், மீன் எண்ணெய், ஈரல், முட்டை, பால் ஆகியன கண்ணுக்கு மிகவும் நல்லது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.