Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 26, 2016

ரியோ ஒலிம்பிக்கிற்கு தகுதி: 36 ஆண்டுகளுக்குப் பின் இந்தியாவுக்கு கிடைத்த பெருமை!


ஆண்களுக்கான ஹார்மோன் அதிகமாக சுரப்பதாக கூறி, தடைக்கு உள்ளான இந்திய தடகள வீராங்கனை டூட்டி சந்த், ரியோ ஒலிம்பிக்கில் 100 மீட்டர் ஓட்டத்தில் பங்கேற்கத் தகுதிப் பெற்றுள்ளார். ரியோ ஒலிம்பிக்கிற்கு தகுதிப் பெற்றுள்ள 99வது இந்தியர் டூட்டி சந்த் ஆவார்.

கடந்த 2014ம் ஆண்டு, சர்வதேச தடகள சம்மேளனத்தின் விதிமுறைகளை விட அதிகமாக  டூட்டி சந்தின் உடலில் ஆண்களுக்கான ஹார்மோன் சுரப்பதாக கூறி,  அகில இந்திய தடகளச் சங்கம் அவருக்கு போட்டிகளில் பங்கேற்கத்  தடை விதித்தது. 'டூட்டி சந்த் பெண் அல்ல. அவரது உடலில் ஆண்தன்மை அதிகமாக இருப்பதாக' குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இதனால் டூட்டி சந்தால், கடந்த 2015 ம் ஆண்டு நடந்த காமன்வெல்த் போட்டியில் பங்கேற்க முடியவில்லை. உடலாலும் மனதாலும் அவர் சோர்ந்து போனார். எனினும் ஸ்விட்சர்லாந்தில்  உள்ள சர்வதேச விளையாட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதில் டூட்டி சந்துக்கு ஆதரவாக தீர்ப்பளிக்கப்பட்டது.

தடையை விதித்த இந்திய தடகளச் சங்கம், டூட்டி சந்துக்கு தடையில் இருந்து மீள எவ்வித உதவியையும் செய்யவில்லை.  தடை நீக்கப்பட்டதும் அதனை வரவேற்றதோடு நிறுத்திக் கொண்டது. தடை நீக்கப்பட்டதையடுத்து 20 வயதாகும் டூட்டி சந்த், மீண்டும் கடுமையான பயிற்சிகளில் ஈடுபட்டார். ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிப் பெற வேண்டுமென்பதே அவரது ஒரே இலக்காக இருந்தது.

சந்தித்த சவால்களுக்கு பதிலளிக்கும் விதத்தில், தற்போது  ரியோ ஒலிம்பிக் போட்டிக்கும் டூட்டி சந்த் தகுதிப் பெற்று சாதித்துள்ளார். கஜகஸ்தானின் அல்மாதி நகரில் நடந்த கோஸ்நோவ் நினைவு தடகளப் போட்டியில், 100 மீட்டர் ஓட்டத்தில், இலக்கை 11.30 வினாடிகளில் கடந்ததையடுத்து, ஒலிம்பிக் போட்டிக்கு டூட்டி சந்த் முன்னேறியுள்ளார். ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிப் பெற 100 மீட்டர் ஓட்டத்தை, 11.32 வினாடிகளுக்குள் கடக்க வேண்டும். டூட்டி சந்த் 11.30 வினாடிகளில் ஓடியது தேசிய அளவிலான சாதனையும் கூட.

36 ஆண்டுகளுக்குப் பின்... 

கடந்த 1980 ம் ஆண்டு மாஸ்கோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் மகலிர் 100 மீட்டர் தூர ஓட்டப் போட்டியில் இந்தியா சார்பில் பி.டி. உஷா பங்கேற்றார். அவருக்குப் பின், அதாவது 36 ஆண்டுகளுக்குப் பின்னர், தற்போது டூட்டி சந்த் அப்போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்கும் வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளார்.

ஒலிம்பிக்கிற்கு தகுதிப் பெற்றது குறித்து டூட்டி சந்த் கூறுகையில், ''இந்திய மக்கள் எனக்காக நடத்திய பிரார்த்தனைதான் என்னை ஒலிம்பிக்கிற்கு முன்னேற வைத்துள்ளது. எனக்கு உதவி செய்த அத்தனை பேருக்கும் நன்றி '' என தெரிவித்துள்ளார்.

ஒலிம்பிக் போட்டியை பொறுத்தவரை ஆண்கள் மற்றும் மகளிர் 100 மீட்டர்  ஓட்டம்தான் ஹைலைட். உலகக் கோப்பை கால்பந்து இறுதி ஆட்டத்துக்கு இணையாக கருதப்படும் உச்சகட்டப் போட்டி இது. கோடிக்கணக்கான ரசிகர்கள் தொலைக்காட்சியில் காண்பார்கள். அதன் இறுதிச் சுற்றுக்கு தகுதிப் பெறும் சவால் நிறைந்த பணி  டூட்டிக்கு காத்திருக்கிறது. ஒலிம்பிக் போட்டியில் வெற்றிபெற டூட்டிக்கு வாழ்த்துக்கள்!

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.