'தி.மு.க முன்னணி நிர்வாகிகள் யாரும் தொலைக்காட்சி விவாதங்களில் பங்கெடுக்கக் கூடாது' என அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது அறிவாலயம். ' நமது தரப்பு நியாயத்தை எப்படிச் சொல்வது?' எனக் குமுறுகின்றனர் உடன்பிறப்புகள்.
தொலைக்காட்சி விவாதங்களில் தி.மு.கவின் வழக்கறிஞர்கள், மாநில நிர்வாகிகள் உள்ளிட்ட சிலர் தினம்தோறும் பங்கெடுப்பது வழக்கம். கட்சி மீது வைக்கப்படும் அவதூறுகளுக்கு எதிராக, இவர்கள் கொந்தளிப்பது நாள்தோறும் நடந்து கொண்டு வருகிறது.
இந்நிலையில், ' விவாதங்களுக்கு நம்மை அழைக்கிறார்கள். அங்கு யார் பேசினாலும், நிகழ்ச்சியை நடத்துகிறவர்கள் நம் மீதே அவதூறு செய்கிறார்கள். தி.மு.கவை குற்றம் சொல்வதிலேயே நேரத்தைச் செலவிடுகிறார்கள். என்றோ நடந்த சம்பவங்களை எல்லாம் நேற்று நடந்தது போல பேசுகிறார்கள். இதனால் கட்சிக்குக் கெட்ட பெயர் வருகிறது. நாம் செல்வதால் மட்டும்தான், தொலைக்காட்சிகளின் டி.ஆர்.பி ரேட்டிங் எகிறுகிறது. இனி கழகத்தின் சார்பில் விவாதங்களில் யாரும் பங்கெடுக்கக் கூடாது' என தடை விதித்திருக்கிறார் கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி.
இதுபற்றி நம்மிடம் பேசிய தி.மு.க மாநில நிர்வாகி ஒருவர், " ஒரு தொலைக்காட்சியில் விவாதத்திற்கு அழைத்தார்கள் என நாள் முழுக்க உட்கார்ந்து குறிப்புகளைத் தயார் செய்து கொண்டிருந்தேன். நிகழ்ச்சி தொடங்குவதற்கு அரை மணி நேரம் முன்னதாக, இப்படியொரு அறிவிப்பைக் கொடுத்திருக்கிறார் ஆர்.எஸ்.பாரதி. இதனால் என்ன பயன் என்று தெரியவில்லை. விவாதங்களில் தி.மு.க சார்பில் பிரதிநிதிகள் இல்லாவிட்டால், எங்கள் மீதான களங்கத்தை எப்படித் துடைக்க முடியும்?
தஞ்சை, அரவக்குறிச்சியில் தேர்தலை ரத்து செய்துவிட்டார்கள். தஞ்சையில் பணம் கொடுத்ததாக புகாருக்கு ஆளானாவர் அ.தி.மு.க வேட்பாளர். அவர் மீது நடவடிக்கை எடுக்காமல் தேர்தலை தள்ளி வைத்திருக்கிறார்கள். அரவக்குறிச்சியில் தி.மு.க சார்பில் போட்டியிடும் கே.சி.பழனிச்சாமி பெரும் செல்வந்தர். அவருடைய சென்னை வீட்டில் கைப்பற்றப்பட்ட ஓரிரு கோடிகளை வைத்துக் கொண்டு, அ.தி.மு.க பிரமுகர் அன்புநாதனோடு ஒப்பிட்டுப் பேசுகிறார்கள். இது எப்படிச் சரியாகும்? இதுபற்றியெல்லாம், தொலைக்காட்சி விவாதங்களில் பேசினால்தான், மக்கள் நம்மீது நம்பிக்கை வைப்பார்கள். ஒரேயடியாக, விவாதங்களுக்கு தடை போடுவது சரியா?" எனக் கொந்தளித்தார்.
அறிவாலயம் என்ன செய்யப் போகிறது?


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.