Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 18, 2016

தனபாலை தாக்க முயற்சியா...? கோட்டையை அலறவைத்த திமுக எம்.எல்.ஏ.க்கள்!


திமுக தலைவர் கருணாநிதிக்கு சட்டப்பேரவையில் சிறப்பு இருக்கை ஒதுக்கும் விவகாரத்தில் வாக்குவாதம் முற்றி, திமுக எம்.எல்.ஏ.க்கள், பேரவைத் தலைவர் தனபாலைத் தாக்க முயன்றதாக பரவிய தகவல் கோட்டை  வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

நேற்று(வியாழன்) தமிழக சட்டப்பேரவைக்கூட்டம் ஆளுநர் உரையுடன் தொடங்கியது. ஆளுநர் உரைக்குப் பின்னர் நேற்றைய சட்டமன்றக் கூட்டம் நிறைவு பெற்றது. அதன் பின்னர்,  'கூட்டத்தொடரை எத்தனை நாட்களுக்கு நடத்துவது?' என்று முடிவு செய்யும் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் பேரவைத்தலைவர் தனபால் தலைமையில் நடைபெற்றது. அதில்,திமுக சார்பில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உட்பட நான்கு பேர் கலந்துகொண்டனர். அரைமணிநேரம் வரை நடைபெற்ற இந்தக் கூட்டத்திலிருந்து பாதியிலேயே திமுக உறுப்பினர்கள் வெளியேறினர்.

இது குறித்து, தலைமைச் செயலக வட்டாரத்தினர், "வரும் புதன்கிழமை  ஆளுநர்  உரை மீதான விவாதம் நடைபெறுகிறது. அதற்கு அடுத்த நாள் வியாழன் அன்று முதல்வர் ஜெயலலிதா பதில் உரை நிகழ்த்துகிறார். முதல்வரின் பதிலுரைக்கு முன்பாக எதிர்க்கட்சித் தலைவரை பேரவையில் பேச அனுமதிக்க வேண்டும் என்று, திமுக சார்பில் வலியுறுத்தப்பட்டது. இந்தக் கோரிக்கையை பேரவைத்தலைவர்  தனபால் ஏற்றுக்கொள்ளவில்லை.மேலும், திமுக உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்பட்ட அறை குறித்தும், பேரவையில் ஒதுக்கப்படவேண்டிய இருக்கை குறித்தும் தாங்கள் விடுத்த கோரிக்கைகளை ஏற்க வேண்டும் என அலுவல் ஆய்வுக்  கூட்டத்தில் வலியுறுத்தினர். இதற்கு உரிய பதில் கிடைக்காததால் அதிருப்தி அடைந்த திமுக உறுப்பினர்கள், அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் இருந்து  பாதியிலேயே வெளியேறினர்." என்று கூறினர்.

இந்தப் பிரச்னை குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பேரவைத்தலைவர் தனபால், " அவை மரபுப்படி இருக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.இருக்கைகளை ஒதுக்குவது பேரவைத்தலைவரின் உரிமை.எனவே அதை விவாதிக்க இயலாது" என்று  தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், திமுக எம்.எல்.ஏ.க்கள் இன்று ( காலை வெள்ளி) சட்டமன்றக்கூட்டம் தொடங்கி முடிந்ததும், 10.30 மணியளவில் பேரவைத்தலைவர் தனபால் அறையை முற்றுகையிட்டனர். அங்கு அவரிடம், இருக்கைகள் மற்றும் அறை ஒதுக்கீடு தொடர்பாக கோரிக்கை வைத்து  வாதிட்டனர். திமுக உறுப்பினர்கள் மொத்தமாக வந்து தன்னிடம் இவ்வாறு பேசி வாதிடுவார்கள் என்பதை தனபால் எதிர்பார்க்கவில்லை. அதனால் அவர்களிடம் என்ன ரியாக் ஷன் காட்டுவது என்று தெரியாமல் பேரவைத்தலைவர்  திக்குமுக்காடி நின்றுள்ளார்.

இதனையடுத்து திமுகவினர் விடாமல்  அவரிடம் தொடர்ந்து, திமுக தலைவர் கருணாநிதிக்கு முதன்மை வரிசையில் இருக்கை வசதி செய்து தரவேண்டும் என்றும், பலம் பொருந்திய எதிர்க்கட்சியாக திமுக இருப்பதால் பெரிய அளவிலான அறை வசதி செய்து தரவேண்டும் என்றும், முதல்வர் ஜெயலலிதா ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்து பேசும் அன்று எதிர்க்கட்சி தலைவரையும் முதலில் பேச அனுமதி வழங்கவேண்டும் என்றும் கூறி கடுமையாக வாதிட்டனர்.

அப்போது திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் உள்ளிட்ட சில உறுப்பினர்கள், பேரவைத்தலைவர் மற்றும் பேரவைச் செயலாளர் ஆகியோருடன் மிகக் கடுமையாக வார்த்தைகளை கொட்டி வாக்குவாதம் செய்துள்ளனர். ஒருகட்டத்தில், ஆபாச வார்த்தைகளும் அங்கே பரிமாறிக் கொள்ளப்பட்டதாகவும் தெரிகிறது. இது கைகலப்பு ஏற்படும் நிலைக்கு இட்டுச் சென்று, தனபாலை திமுக உறுப்பினர்கள் சிலர் அடிக்க பாய்ந்ததாகவும்,  இதனால் நிலைமை கட்டுக்கடுங்காமல் செல்வதைக் கண்ட மூத்த திமுக உறுப்பினர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் சமாதானம் செய்து  இரு தரப்பையும் அமைதிப்படுத்தியதாகவும், அதனைத் தொடர்ந்தே ஒருவழியாக   திமுக உறுப்பினர்கள் கடும் கோபத்தோடு பேரவைத்தலைவர் அறையைவிட்டு வெளியே வந்ததாகவும் கோட்டை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. .

இந்தத் தகவல் காட்டுத் தீ போல தலைமைச் செயலக வட்டாரத்தில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.