Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 23, 2016

காதல் கலப்பு திருமணம்: 8 ஆண்டுகளுக்கு பிறகு மருமகளை கொலை செய்த மாமனார், மாமியார் கைது


காதல் கலப்பு திருமணம் செய்த தனியார் வங்கியின் மேலாளர் மனைவியை கழுத்து அறுத்துக் கொலை செய்த வழக்கில், மாமனார், மாமியார் கைது செய்யப்பட்டனர்.

 நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டைச் சேர்ந்தவர் சந்தோஷ் (30). இவருக்கு வேலூர் சத்துவாச்சேரியைச் சேர்ந்த சுமதியுடன் (29) கல்லூரியில் படிக்கும்போது காதல் ஏற்பட்டு கடந்த 2008-ஆம் ஆண்டு இருவரும் பதிவு திருமணம் செய்து கொண்டனர்.

 பின்னர், இருவரும் கோவையில் வசித்து வந்தனர். இந்த நிலையில், சுமதியின் வீட்டார் சம்மதத்துடன் வேலூர் மாவட்டத்தில் 2012-இல் திருமண வரவேற்பு நடத்தப்பட்டது. இதையடுத்து கடந்த நான்கு ஆண்டுகளாக நாமக்கல் தில்லைபுரம் பிள்ளையார் கோயில் தெருவில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.

 நாமக்கல்லில் உள்ள தனியார் வங்கியில் துணை மேலாளராகப் பணியாற்றிவந்த சந்தோஷ், கடந்த 20 நாள்களுக்கு முன்பு கிளை மேலாளராகப் பதவி உயர்வு பெற்று ஒசூருக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.

 இதற்கிடையே, அண்மையில் சந்தோஷின் குடும்பத்தினர் சமாதானமடைந்து, வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தனர். இதன்படி, கடந்த 16-ஆம் தேதி திருப்பதியில் வரவேற்பு நிகழ்ச்சி நடத்தி, தாலி கட்டிக் கொள்வதற்காக தாலிக் கொடி செய்யப்பட்டது. இந்தத் தாலிக்கொடி கீழே விழுந்து உடைந்ததால் அந்த விழா ஒத்திவைக்கப்பட்டு, ஜூன் 23-ஆம் தேதி வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

 இந்த நிலையில், கடந்த 20-ஆம் தேதி பகல் 2 மணிக்கு சந்தோஷின் தாய் மாதேஸ்வரி, சுமதியைப் பார்ப்பதற்காக வந்துள்ளார். அவர் சென்றபின் மாலை 3 மணிக்கு சந்தோஷ் மனைவி சுமதியை செல்லிடப்பேசியில் பலமுறை அழைத்துள்ளார். ஆனால், அழைப்பு ஏற்கப்படவில்லை. இதனால், சந்தேகமடைந்த சந்தோஷ், நாமக்கல்லில் தன்னுடன் வங்கியில் பணியாற்றிய நண்பர்களிடம் வீட்டுக்குச் சென்று பார்க்குமாறு கூறினார். அவர்கள் வந்து பார்த்தபோது, படுக்கையில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் சுமதி கொலை செய்யப்பட்டுக் கிடந்தார்.

 இதுகுறித்து நாமக்கல் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், சந்தோஷின் தாய் மாதேஸ்வரி வந்துசென்ற பிறகே சுமதி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

 இதையடுத்து, சந்தோஷின் தாய் மாதேஸ்வரி (52), மாமனார் ராஜாமணி என்ற பழனிவேல் (55), சந்தோஷ் ஆகியோரிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். இதில்,  மருமகள் சுமதியை கொலை செய்ததாக மாமனார், மாமியார் இருவரும் ஒப்புக் கொண்டனர்.

 இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:

 சந்தோஷ் வேறு ஜாதியைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டதை அவரது குடும்பத்தினர் ஏற்றுக் கொள்ளவில்லை.

மேலும், திருமணம் முடிந்து 8 ஆண்டுகள் ஆன நிலையில் குழந்தை இல்லாததால், அவருக்கு வேறு திருமணம் செய்ய முடிவு செய்தனர். ஆனால், அதற்கு சந்தோஷ் சம்மதிக்கவில்லை. இதனால், சுமதி இருந்தால் சந்தோஷுக்கு வேறு இடத்தில் திருமணம் செய்து வைக்க முடியாது என்பதால், சுமதியைக் கொலை செய்ததாகத் தெரிவித்தனர்.

 இந்தக் கொலையைத் திசை திருப்புவதற்காக சுமதி கழுத்தில் அணிந்திருந்த, 5 பவுன் நகை, செல்லிடப்பேசிகளை பழனிவேல் எடுத்து வந்துள்ளார் என போலீஸார் தெரிவித்தனர்.

 இதையடுத்து மாதேஸ்வரி, பழனிவேல் இருவரையும் கைது செய்த போலீஸார், நாமக்கல் குற்றவியல் நீதித் துறை நடுவர் நீதிமன்றம் எண் 1-இல் ஆஜர்படுத்தினர். நீதிபதி மோகனாம்பாள் இருவரையும் 15 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து இருவரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.