Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 25, 2016

என்.எஸ்.ஜி.யில் சேர இந்தியாவிற்கு ஆதரவு இல்லை! -சீனா திட்டவட்டம்


அணு ஆயுத பரவல் தடை சட்டத்தில் கையெழுத்திடாத வரை, என்.எஸ்.ஜி.யில் சேர இந்தியாவிற்கு ஆதரவு இல்லை என சீனா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
.
48 நாடுகளை உள்ளடக்கிய என்.எஸ்.ஜி. (அணுசக்தி வழங்கும்) கூட்டமைப்பில் சேருவதற்கு இந்தியா தீவிரமாக முயன்று வருகிறது. அணுசக்தி வணிகத்தில் ஈடுபடவும், அணு தொழில்நுட்ப ஏற்றுமதி செய்யவும் இந்த குழுமத்தில் இந்தியா சேர வேண்டியது அவசியம் ஆகிறது. இதில் சேர இந்தியா விண்ணப்பம் அளித்துள்ளது. இதேபோன்று பாகிஸ்தானும் விண்ணப்பித்துள்ளது.

இந்தியாவின் இந்த முயற்சிக்கு அமெரிக்கா, பிரிட்டன், மெக்ஸிகோ உள்ளிட்ட நாடுகள் பகிரங்கமாக ஆதரவு தெரிவித்துள்ளன. ஆனால், அணு ஆயுதப்பரவல் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திடாததால் இந்தியாவை என்.எஸ்.ஜி.யில் சேர்ப்பதற்கு சீனா, பிரேஸில், ஆஸ்திரியா, அயர்லாந்து, துருக்கி, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில், தென்கொரிய தலைநகர் சியோலில் என்.எஸ்.ஜி. நாடுகளின் 2 நாள் ஆண்டுக் கூட்டம் வியாழக்கிழமை தொடங்கியது. இதில், என்.எஸ்.ஜி.யில் இந்தியாவை சேர்ப்பது தொடர்பாக முக்கியமாக விவாதிக்கப்பட்டது.

இந்தியாவும், பாகிஸ்தானும் உரிய விதிகளை பின்பற்றாத வரை அவ்விரு நாடுகளையும் அணுசக்தி வினியோக நாடுகள் குழுவில் இணைக்க ஆதரவு வழங்க முடியாது என இக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய சீனக் குழுவின் தலைவர் வாங் குன் தெரிவித்தார்.


அணுஆயுத பரவல் தடை சட்டத்தில் கையெழுத்திடாத நாடுகளை என்.எஸ்.ஜி.யில் இணைப்பது குறித்து உறுப்பு நாடுகள் மத்தியில் கருத்து வேறுபாடு நிலவுவதாகவும், அதனால் இக்குழுவில் இந்தியாவை இணைக்க வேண்டும் என்ற விண்ணப்பம் இக்கூட்டத்தில் பரிசீலிக்கப்படாது என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், என்.எஸ்.ஜி.யில் இணைய வேண்டுமென்றால், இந்தியா முதலில் அணுஆயுத பரவல் தடை சட்டத்தில் கையெழுத்திடும் என நம்புவதாகவும், அதுவரை இந்த விவகாரம் தொடர்பாக இந்தியாவுடன் ஆலோசிக்கப் போவதில்லை எனவும் அவர் தெரிவித்து உள்ளார்.

முன்னதாக, தாஷ்கண்ட் நகரில் சீன அதிபர் க்சி ஜின்பிங்-ஐ சந்தித்த பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவின் கோரிக்கைக்கு சீனா ஆதரவு தெரிவிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டிருந்தார்.

ஆனாலும், இன்று நடைபெற்ற கூட்டத்தில் இந்தியாவுக்கு இடம் அளிப்பது தொடர்பாக எந்தவித முடிவும் எடுக்கப்படாமலேயே கூட்டம் முடிவடைந்துள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.