Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 6, 2016

மறந்துபோன கோடைக்கால திரவ உணவுகள்



நம் பெரியோர்கள் கோடைக்கால சூட்டின் தாக்கத்தை குறைக்க ஆங்காங்கு கிடைக்கும் பொருட்களை கொண்டே பல திரவ உணவுகளை தயாரித்து உண்டு வந்தனர். அவைகளையெல்லாம் நாம் இன்று மறந்து விட்டோம். அவற்றை பற்றி கீழ்வருமாறு பார்க்கலாம்.
நீராகாரம்: இரவு வடித்த சாதத்தில், அதன் வடித்த கஞ்சியையும், சுத்தமான தண்ணீரையும் சேர்த்து மூடி வைக்க வேண்டும். காலையில் அந்த சாதம் புளித்திருக்கும். அந்த சாதத்தை தண்ணீருடன் சேர்த்து லேசாக பிழிந்தபடி கரைக்க வேண்டும். சாதத்தின் மேலாக இருக்கும் தண்ணீரை வடித்து அடுத்து அதில் சிறிது உப்பு சேர்த்து வேண்டுமென்றால் கொஞ்சம் மோரும் சேர்த்து காலையில் குடிக்கலாம். இந்த தண்ணீரில் விட்டமின் சத்துக்கள் நிறைய இருப்பதுடன் உடலுக்கு தேவையான நல்ல பாக்டீரியாவை வளர்க்க இது உதவுகிறது. அதன் சாதத்தையும் உப்பு சேர்த்து சாப்பிடலாம். வியர்வையில் இழக்கும் உப்பு சத்துக்களை ஈடுகட்டவும், குடலை சுத்தப்படுத்தவும், உடலுக்கு குளிர்ச்சியளிக்கவும் இது உதவுகிறது.
மாங்காய் ரசம்: மாங்காய் வெயில் காலத்தில் காய்க்கும் ஒரு காய். இது உடலுக்கு மிகவும் நல்லது. நிறைய விட்டமின்கள் மற்றும் தாது உப்புக்கள் இதில் இருக்கிறது. மாங்காயுடன் ஏலக்காய், வெல்லம் மற்றும் கருப்பு உப்பு சேர்த்து தயாரிக்கப்படும் இந்த பானம் கோடைக்காலத்திற்கேற்ற சிறந்த பானமாகும். ஏலக்காய் சிறுநீரகத்தின் செயல்பாட்டை சீராக்கும். கருப்பு உப்பு வியர்வையில் இழக்கும் உப்பை மீட்டுத் தருகிறது. வெல்லம் இரும்பு சத்து மற்றும் பல நன்மைகளை உள்ளடக்கியது. மாங்காய்களை நன்கு கழுவி 10 முதல் 15 நிமிடங்கள் வேக வைக்க வேண்டும். வெந்த மாங்காயின் தோலை அகற்றி உள்ளிருக்கும் சதைப் பகுதியை பிரித்தெடுக்கவும். இத்துடன் வெல்லம் உப்பு மற்றும் ஏலக்காய் தூளை கலந்து மிக்சியில் அடித்து காற்று புகாத பாத்திரத்தில் போட்டு பிரிட்ஜில் வைத்துக் கொள்ளவும். வேண்டும் பொழுது ஒரு க்ளாஸ் தண்ணீரில் ஒரு டேபிள் ஸ்பூன் மாங்காய் விழுதை கலந்து சிறிது குளிர வைத்து பருகலாம்.
லஸ்ஸி அல்லது மோர்: தயிர் மற்றும் மோர் வெயில் காலத்திற்கு நல்லது. தயிரை நன்கு கடைந்து சர்க்கரை அல்லது வெல்லம் சேர்த்து அப்படியே சாப்பிடலாம். இத்துடன் ஏலக்காய் தூள், பன்னீர், குங்குமப்பூ சேர்த்தும் சாப்பிடலாம். தயிருடன் மாம்பழம், பப்பாளி பழம் சேர்த்து அரைத்தும் குடிக்கலாம். தயிரை நன்கு கடைந்து உப்பு மற்றும் சிறிதளவு மிளகுத்தூள் சேர்த்தும் குடிப்பது சுவையாக இருக்கும்.
தயிரை நன்கு கடைந்து அதிலிருந்து வெண்ணெயை எடுத்து விட வேண்டும். சிறிது பச்சை கொத்துமல்லி, கறிவேப்பிலை, வெட்டிய பச்சை மிளகாய், துறுவிய இஞ்சி சேர்த்து கொஞ்சமாக கடுகு தாளித்து மோராக குடிப்பது கோடைக்காலத்திற்கு அவசியமான, சுலபமாய் வீட்டில் தயாரிக்கக்கூடிய பானம். இதை அளவில்லாமல் தாகம் எடுக்கும் போதெல்லாம் குடிக்கலாம். தினமும் தொடர்ந்து குடிக்கும்போது வெப்பத்தினால் ஏற்படக்கூடிய நோய்களிலிருந்து பாதுகாப்பும், குடலை சுத்தப்படுத்தக்கூடியதாகவும், உடலின் நச்சுப் பொருட்களை வெளியேற்றக்கூடிய வகையிலும், நீர்மோர் உதவுகிறது.
நன்னாரி சர்பத்: நன்னாரி ஒரு சிறுநீரக டானிக். சிறுநீரகத்தின் செயல்பாட்டை சீராக்கி உடலின் நச்சுப் பொருட்களை வெளியேற்ற இது உதவுகிறது. நன்னாரி வேரை வாங்கிவந்து சர்க்கரை அல்லது வெல்லம் கலந்து நீரில் கொதிக்க விட்டு வடிகட்டி காற்று புகாத பாட்டிலில் வைத்துக் கொள்ள வேண்டும்.
வேண்டும் போது நன்னாரி கலவையுடன் சிறிதளவு எலுமிச்சை சாறு சப்ஜா விதை சேர்த்து தண்ணீரில் கலந்து குளிரவைத்து குடிக்கலாம். உடலுக்கு அதிக குளிர்ச்சியை கொடுக்கக் கூடிய சுலபமாய் தயாரிக்கக்கூடிய பானமாக இது இருக்கிறது

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.