June 6, 2016
தவறான வாட்ஸ்அப் தகவலால் ஏமாந்த இளைஞர்கள்
ராணுவத்துக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர் என்று பரப்பப்பட்ட வாட்ஸ்அப் தகவலால் நாகையில் இளைஞர்கள் குவிந்தனர். பின்னர் இது தவறான தகவல் என தெரிந்ததும் அவர்கள் ஏமாற்றத்துடன் ஊர் திரும்பினர்.
ராணுவத்துக்கு ஆள்சேர்ப்பு
நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று அதிகாலை சுமார் 3 மணியில் இருந்து இளைஞர்கள் கூட்டம், கூட்டமாக வந்து கொண்டிருந்தனர். சிறிது நேரத்தில் சுமார் 300-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் திரண்டனர். கலெக்டர் அலுவலகத்தில் எந்த முன்அறிவிப்புமின்றி இளைஞர்கள் கூடியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து அங்கு வந்த இளைஞர்களிடம் விசாரித்தபோது, அவர்கள் நாகையில் இன்று (நேற்று) நடைபெற உள்ள ராணுவ ஆள் சேர்ப்பு முகாமில் கலந்துகொள்ள வந்துள்ளதாக தெரிவித்தனர். நாகையில் நேற்று ராணுவத்துக்கு ஆள்சேர்ப்பு முகாம் நடைபெறும் என்று எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.
சமூக வலைதளமான வாட்ஸ்அப் மூலம் சிலர் தவறான தகவலை பரவவிட்டுள்ளனர். இதை நம்பி ஏராளமான இளைஞர்கள் நாகைக்கு வந்தது தெரியவந்தது. அந்த வாட்ஸ்அப் செய்தியில், தமிழ்நாட்டில் ராணுவத்துக்கு ஆட்களை தேர்வு செய்யும் முகாம் நடைபெறுகிறது எனவும், பெரம்பலூர், அரியலூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, காரைக்கால் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்களுக்கு நாகையில் ஜூன் 4-ந் தேதி முதல் 13-ந் தேதி வரையிலும், கோவை, திண்டுக்கல், நீலகிரி, சேலம், மதுரை, ஈரோடு, தருமபுரி, தேனி, நாமக்கல், கிருஷ்ணகிரி, திருப்பூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்களுக்கு தருமபுரியில் ஜூலை மாதம் 22-ந் தேதி முதல் 31-ந் தேதி வரையிலும், சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், வேலூர், கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, புதுச்சேரி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்களுக்கு புதுச்சேரியில் செப்டம்பர் 4-ந் தேதி முதல் 13-ந் தேதி வரையிலும் ஆள்சேர்ப்பு முகாம் நடைபெறும் என இருந்தது.
பழைய செய்தி
இந்த செய்தி கடந்த ஆண்டு “தினத்தந்தி” நாளிதழில் பிரசுரிக்கப்பட்ட செய்தி என தெரியவந்தது.
இதை தற்போது ராணுவத்துக்கு ஆள்சேர்ப்பு நடைபெறுவது போல் வாட்ஸ்-அப்பில் சித்தரித்து வெளியிடப்பட்டிருந்தது. இந்த செய்தி பழைய செய்தி என தெரிந்த உடன் நாகைக்கு வந்த ஏராளமான இளைஞர்கள் ஏமாற்றத்துடன் ஊர் திரும்பினர்.
மன உளைச்சல்
இதுகுறித்து ராமேஸ்வரத்தை சேர்ந்த விக்னேஸ்வரன் கூறியதாவது:-
வாட்ஸ்-அப் மூலம் வந்த செய்தியை பார்த்து உண்மை என நினைத்து பெரம்பலூர், அரியலூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர் புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் நாகை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தோம். ஆனால் கலெக்டர் அலுவலகத்தில் ராணுவத்திற்கு ஆள்சேர்ப்பு முகாம் நடப்பதற்கான ஏற்பாடுகள் எதுவும் செய்யப்பட வில்லை. இதனையடுத்து சந்தேகமடைந்த நாங்கள் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள ஊழியர்களிடம் விசாரித்தோம். அப்போது ராணுவத்திற்கு ஆள்சேர்ப்பு முகாம் இன்று நடைபெறவில்லை. கடந்த ஆண்டு இதே தேதியில் இங்கு நடைபெற்றது என தெரிவித்தனர். அதற்கு பின் தான் வாட்ஸ்-அப்பில் வந்த செய்தி பழைய செய்தி என்றும், இதை யாரோ விஷமிகள் வேண்டுமென்று அனுப்பி எங்கள் நேரத்தையும், பணத்தையும் விரயம் செய்து மிகுந்த மனஉளைச்சலை ஏற்படுத்தி உள்ளனர். இவர்கள் மீது காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தவறான வாட்ஸ்அப் தகவலால் ஏமாந்த இளைஞர்கள்
Reviewed by மறத்தமிழன்
on
June 06, 2016
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
June 06, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.