Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 30, 2016

நான் எப்போதும் சாதாரண குடும்பத் தலைவிதான் கேரள முதல் – மந்திரியின் மனைவி கமலா டீச்சர்



கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் முற்போக்கு சிந்தனை கொண்ட அரசியல் தலைவர். நேர மேலாண்மையை சரியாக கடைப்பிடிக்கும் வழக்கம் கொண்டவர். எந்த விஷயமாக இருந்தாலும் குறிப்பிட்ட நேரத்துக்குள் திட்டமிட்டபடி நடக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பவர்.

அவரது மனைவி கமலா டீச்சரும் வித்தியாச மானவர்தான்!. முதல் -மந்திரியின் மனைவி என்றவட்டத்துக்குள் வலம் வராமல் எப்போதும் போல இயல்பான குடும்பத் தலைவியாக காட்சி தருகிறார். இவர்களுக்கு திருமணம் நடந்து 37 ஆண்டுகள் ஆகிறது. அப்போது கமலா ஆசிரியர்பயிற்சி படிப்பு (பி.எட்.) படித்துக் கொண்டிருந் திருக்கிறார்.
பினராயி விஜயனுடன் இல்லற வாழ்க்கையில் இணைந்த தருணங்கள் குறித்தும், அவருடைய வாழ்க்கை அனுபவங்கள் குறித்தும் நிறைய விஷயங்களை கமலா டீச்சர் பகிர்ந்துள்ளார்.
பொதுவாக கணவர் தேர்தலில் வெற்றி பெற்று முதல்-மந்திரியாக பொறுப்பேற்கும் அன்று மனைவியும் உடன் செல்வார். ஆனால் கமலா டீச்சர் அப்படி போகவில்லை.
“எல்லா நேரமும் கணவர் பின்னாலேயே செல்வது சரியாக இருக்காது. அது மற்றவர்களுக்கு இடைஞ்சல் ஆகிவிடும். முதல் – மந்திரியாக பொறுப்பேற்கும் நிகழ்வை நேரடியாக சென்றுதான் பார்க்க வேண்டும் என்றில்லை. வீட்டில் இருந்தபடி டிவியில் கூட பார்க்கலாம். முன்பு என் கணவர் கட்சியின் செயலாளர் பொறுப்பில் இருந்தார். இப்போது முதல் மந்திரி பொறுப் பில் இருக்கிறார். எனக்கு எந்த வித்தியாசமும் தெரியவில்லை. இரண்டையும் ஒன்றாகத்தான் பார்க்கிறேன். இப்போது பொறுப்புகள் அவருக்கு அதிகரித்து இருக்கிறது. பொதுவான நிலையில் இருந்து மாற்றம் வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் அதிகம் இருக்கிறது. அதை ஈடு செய்ய கடினமாக உழைக்க வேண்டியிருக்கிறது. அதுவே என் கணவரின் நினைவில் இருக்கிறது. திருமணமான நாளில் இருந்து என்னுடைய விருப்பம் அதுதான்” என்கிறார்.
பினராயி விஜயன் 37 வருடங்களுக்கு முன்பு தன்னை பெண் பார்க்க வந்தபோது நடந்த நிகழ்வுகளை மலரும் நினைவுகளாக கமலா டீச்சர் பகிர்ந்து கொள்கிறார்.
அவசரநிலை பிரகடனம் அமலில் இருந்த போது அவருடன் ஜெயிலில் இருந்த பாலன் என்பவர் இவரை பற்றி எங்கள் வீட்டுக்கு தகவல் சொன்னார். அரசியல் சூழ்நிலை உள்ள குடும்பத்தில் இருந்து பெண் வேண்டும். அரசியல்வாதியுடன் பொருந்திப் போகும்படியான குணம் இருக்க வேண்டும் என்பது அவருடையஎதிர்பார்ப்பாக இருந்தது. எனது தந்தை ஆண்டி மாடரும் அரசியல் ஈடுபாடு கொண்டவர்தான். அதனால் அரசியல் பிரபலங்கள் பற்றி எனக்கு ஓரளவு தெரியும். அவசர நிலை பிரகடனத்தின்போது ஜெயிலில் அடைக்கப்பட்டவர்கள் அடித்து துன்புறுத்தப்பட்டதாக கேள்விப்பட்டேன். இவரைப் பற்றியும் அவ்வப்போது செய்திகள் வரும். எனினும் இவரைப் பற்றி கூடுதல் தகவல்கள் எதையும் தெரிந்துகொள்ள நான் ஆசைப்படவில்லை.
பாலனும், இவரும் சேர்ந்து என்னை பெண் பார்க்க வந்தபோது நான் பி.எட்., படிப்பில் சேர்ந்து இரண்டு மாதங்கள்தான் ஆகி இருந்தது. அன்று எனது தந்தை உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். ஆனாலும் அவர் பெண் பார்க்க வந்த போது பதற்றம், பரபரப்பு எதுவும் என்னிடம் ஏற்படவில்லை. வழக்கம்போல் இயல்பாக இருந்தேன். அவருக்கு காபி போட்டு கொடுத்தேன். அவர் என்னோடு பேச வேண்டும் என்று அறைக்குள் வந்தார். என்னைப் பற்றி அவர் எதுவுமே கேட்க வில்லை. `”சரி நான் வர்றேன்”  என்று மட்டும் சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார்.
என் தந்தை மருத்துவமனையில் இருந்து டிசார்ஜ் ஆகி வீடு திரும்பிய பிறகு மீண்டும் வந்தார். என் தந்தைக்கு அவரை பிடித்து இருந்தாலும், ‘மகளிடம் கேட்டு சொல்வதாக’ கூறிவிட்டார். நான், அப்பா – அம்மாவுக்கு பிடித்திருந்தால் எனக்கு பிடிக்கும் என்று சொன்னேன். இதற்கிடையே ஒரு சிலர் அவரை, ‘நக்சலைட்’ என்று சித்தரித்து கூறினார்கள். அவர் விஷயத் தில், கவனமாக இருங்கள் என்றார்கள். நாங்கள் அதை பொருட்படுத்தவில்லை” என்கிறார். பினராயி விஜயனை திருமணம் செய்வதற்கு முடிவெடுத்து திருமணத்திற்கு தயாரானபோது கமலா டீச்சருக்கு அவருடைய அக்காவும் அறிவுரை கூறியிருக்கிறார்.
“திருமண ஏற்பாடு நடந்து கொண்டிருந்த போது எனது அக்கா பிரேமலதா என்னிடம், நீ சராசரி பெண்ணின் வாழ்க்கையை அவரிடம் எதிர்பார்க்க முடியாது. நீ எதிர்பார்க்கும் நேரம் உன்னோடு சேர்ந்து வருவதற்கு அவரால் முடியாமல் போகும். அந்த நேரத்தில் நீ வருத்தப் பட்டு எந்த பிரயோஜனமும் இல்லை என்றார். ஆனால் அரசியல் பிரமுகர்கள் எப்படி இருப்பார்கள். அவர்களுடைய வாழ்க்கை முறை எப்படி இருக்கும் என்பது எனக்கு தெரியும். எங்கள் வீட்டில் கட்சி கூட்டம் நடந்து இருக்கிறது. அதனால் அரசியல்வாதிகள் பற்றி எனக்கு தெரியும். 1979ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 2ந்தேதி எங்கள் திருமணம் நடந்தது” என்கிறார்.
பினராயி விஜயனின் செயல்பாடுகள், அவருடைய சுபாவங்கள், குணாதிசயங்கள் பற்றி கமலா டீச்சர் பட்டியலிடுகிறார்.
“அவரது உடை, நடை, தோற்றம் எல்லாம் நேர்த்தியாக இருக்கும். சட்டை பையில் ஒரே மாதிரி இரண்டு பேனா வைத்திருப்பார். சிறிய பார்டர் போட்ட வேஷ்டி, சுருக்கமே இல்லாத சட்டை அணிவார். ஒரு முடி கூட நெற்றியில் விழாத அளவுக்கு நன்கு வாரி தலைசீவி இருப்பார். எல்லாமே சரியாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார். வாசலில் கழற்றிவிடப்படும் செருப்புகள் கூட நேராக அடுக்கி வைக்கப்பட்டிருக்க வேண்டும்எ ன்பதில் கவனம் காட்டுவார். வெளியூருக்கு அவர் பிரயாணம் மேற்கொண்டால் கொண்டு செல்லும் சூட்கேசில் ஒவ்வொரு பொருளும் அது, அதற்குரிய இடத்தில் இருக்க வேண்டும் என்றும் எதிர்பார்ப்பார்.

உணவு விஷயத்திலும் கறாராக இருப்பார். தனக்கு பிடிக்காமல் வேண்டாம் என்று ஒதுக்கி வைத்துவிட்டால் பின்னர் அதனை தொடவே மாட்டார். திருமணமான புதிதில் தினமும் ஐந்து, ஆறு முறை டீ குடிப்பார். திடீரென்று ஒரு நாள் டீ குடிப்பதை நிறுத்தப் போவதாக சொன்னார். அன்று முதல் டீ குடிக்கும் பழக்கத்தை விட்டுவிட்டார். எந்த உணவும் ருசியாக இருக்க வேண்டும் என்று விரும்புவார். முன்பெல்லாம் கோழி இறைச்சியை விரும்பி சாப்பிடுவார். இப்போது அப்படி இல்லை. ஆனால் மீன் குழம்பை அவரால் விட முடியவில்லை. அவருக்கு இனிப்பு மீதும் அதிக நாட்டம் உண்டு.
அதிகாலை 5 மணிக்கெல்லாம் எழுந்து விடுவார். உடற்பயிற்சி, யோகா, பத்திரிகை படிப்பது என அது அதற்கு நேரம் ஒதுக்கி அதனை சரியான நேரத்தில் செய்து கொண்டிருப் பார். அப்போதெல்லாம் நான் கடிகாரம் பார்ப்பதில்லை. அவர் பார்க்கும் வேலையை வைத்தே நேரத்தை கணித்து விடுவேன். எவ்வளவு பரபரப்பாக இருந்தாலும் குடும்பத்துக்கான நேரத்தை ஒதுக்கி விடுவார் என்கிறார் கமலா டீச்சர்.

அமைதியாக, எளிமையாக தோன்றும் கமலா டீச்சர், “முதல் மந்திரியின் மனைவி என்று என்னை நான் நினைப்பதில்லை. நான் அன்றும், இன்றும் சாதாரண குடும்பத் தலைவிதான்” என்று புன்னகைக்கிறார்.
—-
அம்மா பாசம்!
பினராயி விஜயனுக்கு அம்மா மீது பாசம் அதிகம். அவருடைய அம்மா பெயர் கல்யாணி. நெகிழ்ச்சி யாக அம்மா பாசத்தை விவரிக்கிறார் கமலா டீச்சர். “அவருடைய அம்மா தன்னுடைய வாழ்க்கையை மகனுக்காக தியாகம் செய்து இருக்கிறார். ஆடு வளர்த்து கஷ்டப்பட்டு அவரை படிக்க வைத்திருக்கிறார். அதனால் என் கணவருக்கு அம்மா மீது பாசம் அதிகம். இரவு எத்தனை மணிக்கு வீட்டுக்கு வந்தாலும் அம்மாவை பார்த்த பிறகுதான் தூங்க செல்வார். அவருடைய அம்மா தூங்கிக் கொண்டிருந்தாலும் அவருடைய முகம் பார்த்துவிட்டுதான் படுக்கைக்கு செல்வார். என் மாமியாரின் இறுதிநாள் இப்போதும் என் நெஞ்சில் நிழலாடுகிறது. அன்று வழக்கத்தை மீறி எனது மாமியார் மிகவும் சோர்வாக இருந்தார். அந்த சமயத்தில் கட்சியின் முக்கிய கூட்டம் நடந்துகொண்டிருந்தது. அதில் கலந்து கொள்ள வெளியூர் சென்றிருந்த என் கணவருக்கு தகவலை தெரியப்படுத்தினோம். மறுநாள் வீட்டுக்கு வந்தார். சோர்வாக இருந்த அம்மாவை தன் தோள் மீது தாங்கிப் பிடித்து கரண்டியால் கஞ்சி ஊட்டினார். கடைசி பூன் ஊட்டும்போது அவர் தலை தொங்கி, என் கணவரின் மார்பில் சாய்ந்தது. உயிர் பிரிந்தது. அப்போது நான் என் கணவரை பார்த்தேன். அவருடைய கண்கள் கண்ணீரில் நிறைந்து நின்றது. அவர் அழாவிட்டாலும், அதுவரை நான் பார்த்திராத அளவுக்கு நிலைகுலைந்து போனார்” என்கிறார். பினராயி விஜயன் – கமலா டீச்சர் தம்பதியரின் மகன் விவேக் கிரண் துபாயில் வங்கி அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். மகள் வீணா தகவல் தொழில்நுட்ப துறையில் பெங்களூருவில் பணியாற்றுகிறார். பேரக்குழந்தைகளும் உள்ளன.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.