Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 29, 2016

பிளஸ் 2 தேர்வு முறைகேடு... பீகார் பள்ளிக் கல்வி தேர்வு வாரிய முன்னாள் செயலர் கைது!


பீகார் மாநிலத்தில் நடைபெற்ற பிளஸ் 2 தேர்வு முறைகேடு தொடர்பாக, அம்மாநில பள்ளிக் கல்வி தேர்வு வாரிய முன்னாள் செயலர் ஹரிஹர் நாத் ஜா நேற்று கைது செய்யப்பட்டார்.

பீகார் மாநிலத்தில் நடைபெற்ற பிளஸ் 2 தேர்வில் முதலாவதாக வந்த மாணவ-மாணவியர்களிடம் தனியார் தொலைக்காட்சி எடுத்த பேட்டியின்போது, ரூபி ராய் என்ற மாணவியின் பேட்டியும் பதிவு செய்யப்பட்டது.

அப்போது, ரூபி ராய் தன்னிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சரியான பதில்களை அளிக்காததுடன், "பொலிடிகல் சயின்ஸ்' என்ற பாடப் பிரிவை 'புரொடிகல் சயின்ஸ்' என்று முரண்பாடாக கூறினார். இதனால், பீகார் பிளஸ் 2 தேர்வில் முறைகேடு நடைபெற்றிருப்பது வெளிச்சத்துக்கு வந்து நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. முறைகேடு வெளிப்பட முக்கியக் காரணமாக அமைந்த மாணவி ரூபி ராயை போலீசார் சமீபத்தில் கைது செய்தனர்.

இதைத் தொடர்ந்து, இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வுக் குழுவை அந்த மாநில அரசு ஏற்படுத்தியது. அந்தக் குழு விசாரணை நடத்தி, பீகார் மாநில பள்ளிக் கல்வி தேர்வு வாரியத் தலைவர் லால்கேஷ்வர் சிங், அவரது மனைவியும், ஐக்கிய ஜனதா தள முன்னாள் எம்.எல்.ஏ.வுமான உஷா சிங், கல்லூரி முதல்வர் பாச்சா ராய் ஆகியோரைக் கைது செய்துள்ளனர்.

இதுகுறித்து பாட்னா நகர காவல்துறை மூத்த கண்காணிப்பாளர் மனு மஹராஜ் செய்தியாளர்களிடம் கூறும்போது, ''பிளஸ் 2 தேர்வு முறைகேடு விவகாரம் குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், மாநில பள்ளிக் கல்வி தேர்வு வாரிய முன்னாள் செயலர் ஹரிஹர் நாத் ஜாவுக்கு தொடர்பிருப்பதற்கான ஆதாரங்கள் எங்களுக்கு கிடைத்தன. இதன் அடிப்படையில், நாத் ஜாவை சிறப்பு புலனாய்வுக் குழுவினர் (எஸ்.ஐ.டி.) இன்று (திங்கட்கிழமை) கைது செய்தனர். நாத் ஜா கைதை தொடர்ந்து, இந்த முறைகேடு சம்பவத்தில் இதுவரை கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது" என்றார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.