Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 7, 2016

கல்லூரியில் படித்தபோது காசு இல்லாமல் பட்டாணியை தின்று பசியை போக்கிய நாராயணசாமி: தாயார் உருக்கமான பேட்டி


நாராயணசாமி கல்லூரியில் படித்தபோது காசு இல்லாமல் பட்டாணியை தின்று பசியை போக்கி கொண்டதாக அவரது தாயார் தெரிவித்துள்ளார்.

புதுவை முதல்-அமைச்சராக பொறுப்பேற்றுள்ள நாராயணசாமி ஏழ்மை குடும்பத்தில் இருந்து படிப்படியாக முன்னேறியவர். இவரது சொந்த ஊர் புதுவை அருகே உள்ள பூரணாங்குப்பம். இவரது பெற்றோர் வேலு-ஈஸ்வரி.

வேலு பல ஆண்டுகளுக்கு முன்பே இறந்து விட்டார். தாயார் ஈஸ்வரி 95 வயதான நிலையில் இருக்கிறார். முதுமை காரணமாக அவரால் சரியாக நடக்க முடியவில்லை. சரியாக காதும் கேட்கவில்லை.

நேற்று முதல்-அமைச்சராக பதவிஏற்ற நாராயணசாமி காலையில் தாயாரின் காலில் விழுந்து ஆசிபெற்று அதன்பின்புதான் பதவி ஏற்பு விழாவிற்கு வந்தார்.

மகன் முதல்-அமைச்சராகி இருப்பது தாயார் ஈஸ்வரிக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது சம்மந்தமாக மாலை மலர் நிருபர் ஈஸ்வரியை சந்தித்தபோது அவர் கூறியதாவது:-



நாங்கள் மிகவும் ஏழ்மை குடும்பத்தை சேர்ந்தவர்கள். ஆரம்பத்தில் ஒரு குடிசை வீட்டில் தான் வசித்து வந்தோம். எனது கணவர் பனை மரம் ஏறும் தொழிலாளி. அவர் கொண்டு வரும் பதனீர், கள் மூலமே எங்கள் குடும்பத்தை நடத்தி வந்தோம். எங்களுக்கு மூத்த மகனாக நாராயணசாமி பிறந்தான். இதுதவிர சுப்பிரமணி, கோதண்டபாணி, உத்ராபதி ஆகிய மகன்களும், ஒரு மகளும் பிறந்தனர்.

கோதண்டபாணி, உத்திராபதி இருவரும் அரசு வேலைகளில் இருக்கிறார்கள். சுப்பிரமணி விவசாயம் செய்து வருகிறான்.

நாராயணசாமி நன்றாக படிப்பான். எனவே நிறைய படிக்க வைக்க வேண்டும் என்று விரும்பினோம். புதுவையில் பள்ளி மற்றும் கல்லூரி படிப்பு முடித்ததற்கு பிறகு சென்னையில் சட்ட கல்லூரியில் சேர்ந்து படித்தான். படிக்கிற காலத்திலேயும் வீட்டு வேலைகளை தவறாமல் செய்வான். அவரது தந்தை கொண்டு வரும் பதநீரை நாங்கள் விற்பனை செய்வோம். ஒரு கடை போல வைத்து அங்கிருந்து விற்பனை செய்து வந்தோம். நாராயணசாமியும் அந்த கடையில் இருந்து பதநீர் விற்பான். எங்களுக்கு விவசாய நிலம் இருந்தது. தோட்டத்திற்கு சென்று தண்ணீர் பாய்ச்சும் வேலையும் செய்வான்.

சென்னையில் சட்டகல்லூரியில் படித்த போது செலவு செய்ய எங்களிடம் போதிய பணம் இல்லை. சிறிதளவே பணம் அனுப்புவோம். அது சாப்பாட்டுக்கு போதுமானதாக இல்லாமல் இருந்தது. அப்போது பட்டாணியை சாப்பிட்டு தண்ணீர் குடித்து பசியை போக்கிக் கொண்டதாக என் மகன் சொல்வான்.

இது எங்களுக்கு மிகவும் கஷ்டமாக இருக்கும். அங்கும், இங்கும் பணத்தை வாங்கி மணிஆர்டர் மூலம் அனுப்பி வைப்போம். இப்படித்தான் கஷ்டப்பட்டு படித்தான்.

வக்கீல் படிப்பு முடித்த பிறகு கோர்ட்டுக்கு சென்று வக்கீல் தொழிலை செய்தான். ஊரில் இருந்து புதுவை கோர்ட்டுக்கு செல்வதற்கு வாகன வசதி இல்லை. மிகவும் கஷ்டப்பட்டு ஸ்கூட்டர் ஒன்றை வாங்கி கொடுத்தோம்.




நாங்கள் வாங்கி கொடுத்த முதல் ஸ்கூட்டரை இப்போதும் பத்திரமாக வைத்துள்ளான். பின்னர் அரசியலுக்கு சென்று எம்.பி.யாகி விட்டான். எல்லோருக்கும் நன்மை செய்ய வேண்டும் என்றே எப்போதும் கருதுவான். நாங்கள் வீட்டில் கஷ்டப்பட்டு கொண்டிருந்த நேரத்தில் கூட யாராவது உதவி என்று வந்தால் நாராயணசாமி முடிந்த அளவு உதவி செய்வான். பசி என்று வந்தால் எங்களுக்கு உணவு இல்லை என்றால் கூட, வந்தவர்களுக்கு உணவு வழங்குவோம்.

நாராயணசாமி பிறக்கும் போது இங்கு மருத்துவ வசதி கிடையாது. இதனால் வீட்டில் தான் பிறந்தான். நானே இங்குள்ள பெண்களுக்கு பிரசவம் பார்ப்பேன். ஊரில் யாருக்கு குழந்தை பிறந்தாலும் என்னை தான் கூப்பிடுவார்கள். விடிய, விடிய உட்கார்ந்து கூட பிரசவம் பார்ப்பேன்.

பிரசவம் பார்ப்பது மிகவும் புண்ணியமான செயல் என்று சொல்வார்கள். நான் செய்த அந்த புண்ணியத்தால் தான் என் மகன் இந்த அளவிற்கு வளர்ந்து வந்திருக்கிறான். நிச்சயம் ஒரு நாள் அவன் முதல்-அமைச்சராக வருவான் என்று எதிர்பார்த்தேன். எங்கள் ஊரில் உள்ள அங்காளம்மன் அருளால் முதல்-அமைச்சராகி இருக்கிறான். நான் கும்பிட்ட தெய்வம் அவனுக்கு உதவி இருக்கிறது.

நான் எனது மகன் கோதண்டபாணி பராமரிப்பில் இங்கு இருக்கிறேன். வாரம் ஒரு தடவை எப்படியாவது என்னை சந்தித்து விடுவான். டெல்லியில் நீண்ட நாள் இருந்தால் ஊருக்கு வந்தவுடன் என்னை சந்திக்க வந்துவிடுவான். என் மீது மிகவும் பாசம் காட்டுவான்.

எனது மருமகள் (நாராயணசாமி மனைவி) இறந்துவிட்டதால் அவன் கஷ்டப்படுகிறானே என்று எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது. முதல்-அமைச்சராகி இருக்கும் நாராயணசாமி புதுவை மக்களுக்கு மிகவும் நல்லதை செய்வான் என்று நான் எதிர்பார்த்திருக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.