Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 27, 2016

வாட்ஸ்அப்பில் வீடியோ காட்சி வெளியிட திட்டம்: ‘ஓசூர் ஏட்டு கொலை வழக்கில் தப்பிக்க தீவிரவாதிகளைபோல செயல்பட்டோம்’ கைதான கல்லூரி மாணவர் பரபரப்பு வாக்குமூலம்


‘செல்போனில் போலி வாக்குமூலத்தை வீடியோ காட்சிகளாக பதிவு செய்து வாட்ஸ் அப்பில் வெளியிட திட்டமிட்டோம். இதன்மூலம் ஓசூர் ஏட்டு கொலை வழக்கில் இருந்து தப்பிக்க தீவிரவாதிகளைபோல செயல்பட்டோம்‘ என்று கைதான கல்லூரி மாணவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

ஏட்டு முனுசாமி கொலை
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பாரதிதாசன் நகரில் கடந்த 15–ந் தேதி ஆசிரியை பார்வதியிடம் நகை பறித்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை பிடிப்பதற்காக குற்றப்பிரிவு போலீசார் சென்றனர். அப்போது கொள்ளையர்கள் கத்தியால் குத்தியதில் ஏட்டு முனுசாமி கொலை செய்யப்பட்டார். சப்–இன்ஸ்பெக்டர் நாகராஜ், ஏட்டு தனபால் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

இது தொடர்பாக போலீசாரிடம் சிக்கிய கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகே கே.ஆர்.புரா பக்கமுள்ள ஜி.எம்.பாளையத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (வயது 19) மாரடைப்பால் இறந்தான்.

போலீசில் சரண்
இந்த வழக்கில் தொடர்புடைய முஜாமில் (வயது 19), அமர் (24), விக்கி என்கிற விக்னேஷ் (21) ஆகிய 3 பேரையும் போலீசார் தேடி வந்தனர். இதில் கடந்த 24–ந் தேதி அமர் கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் நங்கலி போலீஸ் நிலையம் அருகில் உள்ள அவரது உறவினர் வீட்டில் கைது செய்யப்பட்டார். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில் கொலை வழக்கில் தொடர்புடைய முஜாமில், விக்கி என்கிற விக்னேஷ் நேற்று முன்தினம் ஓசூர் டவுன் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியிடம் சரண் அடைந்தனர். இதில் முஜாமில் விஷம் குடித்து மயங்கி விழுந்தால், அவன் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டான்.

பரபரப்பு வாக்குமூலம்
சரணடைந்த விக்கி என்கிற விக்னேஷ் போலீசில் அளித்த பரபரப்பு வாக்குமூலம் வருமாறு:–

எனது பெயர் விக்கி என்கிற விக்னேஷ். பெங்களூரு அருகே உள்ள ஜி.எம்.பாளையத்தில் குடியிருந்து வருகிறேன். எனது தந்தை பெயர் ரவி. நான் பெங்களூருவில் உள்ள கல்லூரி ஒன்றில் பி.சி.ஏ. 2–ம் ஆண்டு படித்து வருகிறேன். எனக்கு தவறான நண்பர்களின் சேர்க்கை உண்டு.

நானும், முஜாமில், அமர், கிருஷ்ணமூர்த்தி ஆகியோரும் வழிப்பறி கொள்ளைகளில் ஈடுபட்டு வந்தோம். கடந்த 15–ந் தேதி ஆசிரியையிடம் நகை பறித்த பிறகு எங்களை பிடிக்க வந்த போலீஸ் ஏட்டு முனுசாமியை கத்தியால் குத்தி கொன்றோம். 2 போலீசாரை காயப்படுத்தினோம். இதன் பிறகு நான், முஜாமில், அமர் ஆகிய 3 பேரும் தலைமறைவானோம். கிருஷ்ணமூர்த்தி மட்டும் போலீசாரிடம் சிக்கி கொண்டான். பிறகு இறந்து விட்டான்.

போலீசாருடன் எங்களுக்கு நடந்த மோதலில் முஜாமில் மற்றும் அமர் ஆகியோருக்கு காயங்கள் ஏற்பட்டது. இதன் பிறகு நாங்கள் ஆசிரியை பார்வதியிடம் பறித்த சங்கிலியை விற்று பணம் பெற்றோம். அந்த பணத்தில் முஜாமில், அமர் ஆகியோர் சிகிச்சை பெற்றனர். இதன் பிறகு போலீஸ் எங்களை தேடுவதை அறிந்து நாங்கள் மும்பை, ஐதராபாத் ஆகிய நகரங்களுக்கு சென்று தலைமறைவானோம். எங்களை தனிப்படை போலீசார் தொடர்ந்து தேடி வந்தனர்.

தீவிரவாதிகளை போல செயல்பட்டோம்
இதனால் வேறு வழியின்றி நீதிமன்றத்தில் சரண் அடையலாம் என்று முடிவு செய்து சென்னை, செங்கல்பட்டு மற்றும் திருக்கழுங்குன்றம் நீதிமன்றங்களுக்கு நானும், முஜாமில்லும் சென்றோம். அங்கு போலீசார் நின்றதால் நாங்கள் சரண் அடையும் எண்ணத்தை கைவிட்டோம். இதன் பிறகு நாங்கள் இந்த வழக்கை திசை திருப்புவதற்காக முடிவு செய்து ‘‘டெத் நோட்’’ என்ற பெயரில் 2 பக்கத்தில் எங்களுக்கு கொலை மற்றும் கொள்ளை சம்பவங்களில் சம்பந்தம் இல்லாததை போல எழுதினோம். மேலும் போலீசாருக்கு களங்கம் ஏற்படும் வகையில் சில வரிகளை அதில் எழுதினோம்.

அதன் பிறகு அதில் எங்களின் (விக்கி என்கிற விக்னேஷ், முஜாமில்) படங்களை ஒட்டி ஆவணம் போல தயாரித்தோம். தொடர்ந்து பொய்யான விவரங்களை ஆங்கிலத்திலும், தமிழிலும் தயாரித்தோம். தீவிரவாதிகளை போல வழிமுறைகளை பின்பற்றி நாங்கள் செல்போனில் எங்களின் பேச்சை வீடியோ பதிவு செய்தோம். அந்த மெமரி கார்டை பிரவீன் என்பவரிடம் கொடுத்து, எங்களை போலீசார் கைது செய்த பிறகு இதை பத்திரிகைகளுக்கு அனுப்புமாறும், வாட்ஸ் அப்பில் அனுப்புமாறும், மனித உரிமை கமிஷனுக்கு அனுப்புமாறும் கூறினோம்.

சொகுசு வாழ்க்கை
அதன்படி கடந்த 25–ந் தேதி ஓசூர் பஸ் நிலையத்திற்கு வந்தோம். அதன் பிறகு போலீசில் சரண் அடைய வந்தோம். அப்போது முஜாமில் என்னிடம் நான் விஷம் குடித்த மாதிரி வர போகிறேன். எனது குடும்பத்துடன் வந்து ஒரு நாடகம் நடத்தி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர போகிறேன். அங்கு வரப்போகிற பத்திரிகைகாரர்களிடம் போலீஸ் லஞ்சம் கேட்டாங்க என்று கூறி ஒரு கடிதத்தை நான் கொடுத்து நாடகமாட போகிறேன் என்று கூறினான்.

தவறான சேர்க்கை காரணமாகவும், சொகுசு வாழ்க்கை நடத்துவதற்காகவும் நான் இவர்களுடன் சேர்ந்து இந்த வழிப்பறி போன்ற குற்றங்களில் ஈடுபட்டேன். இவ்வாறு விக்கி என்கிற விக்னேஷ் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து கொலை மற்றும் கொள்ளை சம்பவத்தின் போது அவர் பயன்படுத்திய கத்தி, மற்றும் டெத் நோட் என்ற பெயரில் எழுதப்பட்ட 2 பக்க கடிதம், விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து விக்கியை போலீசார் ஓசூர் ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு 2–வது கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.