Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 11, 2016

சியாச்சின் பனிச்சரிவில் சிக்கி மரணம் அடைந்த ராணுவ வீரரின் மனைவியை கேலி செய்யும் அரசு அதிகாரிகள்


சிக்கமகளூரு,

சியாச்சின் பனிச்சரிவில் சிக்கி மரணம் அடைந்த ராணுவ வீரரின் குடும்பத்திற்கு அரசு அறிவித்த நிலம் கொடுக்கப்படவில்லை. இதுகுறித்து அரசு அதிகாரிகளிடம் கேட்டால், அவர்கள் ‘நிலம் வழங்கினால் உன்னால் விவசாயம் செய்ய முடியுமா’ என்று கூறி தன்னை ஏளனமாக பார்த்து கேலி செய்வதாக ராணுவ வீரரின் மனைவி கூறுகிறார்.

ராணுவ வீரர்

காஷ்மீர் மாநிலத்தின் சியாச்சின் மலைப்பகுதியில் கடந்த பிப்ரவரி மாதம் 3-ந் தேதி கடும் பனிச்சரிவு ஏற்பட்டது. அதில் இந்திய ராணுவ வீரர்கள் 10 பேர் சிக்கி உயிருடன் புதைந்தனர். அவர்களில் ஹனுமந்தப்பா என்ற ராணுவ வீரர் மட்டும் 6 நாட்களுக்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்டார். டெல்லி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த அவர், தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி உயிரிழந்தார்.

இதற்கிடையே பனிச்சரிவில் சிக்கிய மற்ற 9 ராணுவ வீரர்களும் பிணமாக மீட்கப்பட்டனர். அவர்களில் கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தைச் சேர்ந்த நாகேஷ்(வயது 36) என்பவரும் அடங்குவார். நாகேஷ் உள்பட கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த 3 பேர் பனிச்சரிவில் சிக்கி பலியாகி இருந்தனர்.

மரணம்

இவர்களது சாவு நாட்டையே உலுக்கியது. கர்நாடகத்தில் இவர்களது மரணம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில், நாகேசின் இறுதிச்சடங்கில் கர்நாடக மாநில உள்துறை மந்திரி பரமேஸ்வர் கலந்து கொண்டார். அப்போது அவர், நாகேசின் மனைவி ஆஷாவிற்கு அரசு வேலை வழங்கப்படும், அவரது 2 மகன்களும் மத்திய அரசு பள்ளியில் சேர்க்கப்படுவார்கள், அரசு சார்பில் ரூ.25 லட்சம் நிதி வழங்கப்படும், மேலும் 4 ஏக்கர் நிலம் வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்தார்.

அவர் கூறியபடி, அரசு சார்பில் நாகேசின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிதி வழங்கப்பட்டது. ஆனால் அவருடைய மகன்கள் மத்திய அரசு பள்ளியில் சேர்க்கப்படவில்லை. அவரது குடும்பத்திற்கு 4 ஏக்கர் நிலம் வழங்கப்படவில்லை. மேலும், அவருடைய மனைவி ஆஷாவிற்கும் அரசு வேலை வழங்கப்படவில்லை.

பேட்டி

இதுகுறித்து ஆஷா ஹாசன் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று கேட்டார். அப்போது அங்குள்ள அதிகாரிகள் அவரை அலைக்கழித்தனர். மேலும் அவரை கேலி செய்தனர். இதனால் மனமுடைந்த அவர் நேற்று முன்தினம் நாகேஷ் புதைக்கப்பட்ட இடத்திற்கு சென்று, அவருடைய சமாதியில் பூஜை செய்து கண்ணீர்விட்டு கதறி அழுதார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

எனது கணவர் நாகேஷ் நாட்டுக்காக உயிரை இழந்தார். ஆனால் இந்த நாடும், மத்திய-மாநில அரசுகளும் எங்களை கண்டுகொள்ளவில்லை. அவர்கள் எங்களுக்கு எந்தவொரு ஆதரவும் தரவில்லை. எனது மகன்களை மத்திய அரசு பள்ளியில் சேர்க்க முடியவில்லை. எனக்கு அரசு வேலையும் வழங்கவில்லை. மேலும் எங்களுக்கு 4 ஏக்கர் நிலம் அரசு சார்பில் வழங்கப்படும் என்று மந்திரி பரமேஸ்வர் வாக்குறுதி அளித்தார். ஆனால் நிலமும் வழங்கப்படவில்லை. இதில் அரசு அதிகாரிகள் காலம் தாழ்த்தி வருகிறார்கள்.

அலைக்கழிப்பு

இதுகுறித்து நான் கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று கேட்டால், அங்குள்ள அதிகாரிகள் என்னை ஏளனமாக பார்க்கிறார்கள். மேலும், ‘‘நிலம் கொடுக்க எங்கு இடம் இருக்கிறது. நிலம் கொடுத்தால் நீ உடனே அங்கு சென்று ஏர் உழுது விவசாயம் செய்து விடுவாயா!, நிலம் இருந்தால் நீயே பார்த்துவிட்டு வந்து எங்களிடம் சொல், அரக்கல்கோடு, அரிசிகெரே பகுதிகளில் இடம் கொடுத்தால் உன்னால் அங்கு சென்று விவசாயம் செய்ய முடியுமா?,’’ என்றெல்லால் கூறி என்னை கேலி செய்கிறார்கள். மேலும் எனது கணவரின் இறப்பு சான்றிதழைக் கூட கொடுக்காமல் அலைக்கழித்தனர்.

இதனால் நான் மிகவும் மனமுடைந்துள்ளேன். என் கணவரை இழந்து நான் படும் துயரை கண்டு அனைவரும் கிண்டல் செய்கிறார்கள். இதுகுறித்து மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தவறான தகவல்

இதுகுறித்து மாவட்ட கலெக்டர் உமேஷ் எச்.குஷாலிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

நாகேசின் மனைவி ஆஷாவை, அதிகாரிகள் கேலி-கிண்டல் செய்ததாகக் கூறுவது தவறான தகவல். அதில் உண்மை இல்லை. ஆஷாவிற்கு அரசு வேலை வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். மேலும் அவருக்கு 4 ஏக்கர் நிலம் வழங்க இடத்தை தேர்வு செய்து வருகிறோம்.

இவ்வாறு கலெக்டர் கூறினார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.