சமீபத்தில் திருமணமான இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா, தனது மனைவி ரீவா சோலங்கி குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் குஜராத் மாநிலத்தில் உள்ள கிர் வனவிலங்கு சரணாலயத்தை கடந்த 14 மற்றும் 15-ந் தேதிகளில் சுற்றி பார்த்து ரசித்தார். அங்கு சிங்கங்கள் இருக்கும் பகுதியை ஜீப்பில் சென்று பார்த்த ரவீந்திர ஜடேஜா, வாகனத்தில் இருந்து இறங்கி தனது மனைவியுடன் புகைப்படம் எடுத்து கொண்டார். மேலும் ரவீந்திர ஜடேஜாவும், அவரது மனைவியும் சுமார் 12 அடி பின்னணியில்சிங்கங்கள் இருக்கும் வகையில் ‘செல்பி’யும் எடுத்துள்ளனர். அதனை ரவீந்திர ஜடேஜா சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். வெளியிடப்பட்ட 4 படங்களில் ஒன்றில் வனஇலாகா அதிகாரிகளும் உள்ளனர்.
சிங்கம் வசிக்கும் பகுதி அபாயகரமானது என்பதால் யாரும் பாதுகாப்பு வாகனத்தை விட்டு இறங்கக்கூடாது என்று விதிமுறை உள்ளது. விதியை மீறி இறங்கியதுடன் சிங்கங்களுடன் ரவீந்திர ஜடேஜா ‘செல்பி’ எடுத்த விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. சரணாலயத்தை சுற்றி பார்த்ததை ரவீந்திர ஜடேஜாவின் சகோதரி நைனா உறுதி செய்துள்ளார். ஆனால் வாகனத்தில் இருந்து இறங்கி ரவீந்திர ஜடேஜா சிங்கங்களுடன் புகைப்படம் எடுத்தாரா? என்பது எனக்கு தெரியாது. ஆனால் அப்படி அவர் செய்து இருந்தால் விதிமுறையை தெரியாமல் தான் செய்து இருக்கக்கூடும் என்றார்.
இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தி ஓரிரு நாட்களில் அறிக்கை தாக்கல் செய்யுமாறு சம்பந்தப்பட்ட சரணலாய சூப்பிரண்டுக்கு, முதன்மை வன பாதுகாப்பு அதிகாரி ஏ.பி.சிங் உத்தரவிட்டுள்ளார். விசாரணை அறிக்கையின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார். மேலும் ‘சுற்றுலா பயணிகள் யாரும் சரணாலயத்தில் விதிமுறையை மீறி நடக்கக்கூடாது என்றும் விதியை மீறி செயல்படுபவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றும் குஜராத் வன இலாகா எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த விஷயத்தில் ரவீந்திர ஜடேஜாவிடம் விசாரணை நடத்தப்பட வாய்ப்புள்ளது. அத்துடன் ரவீந்திர ஜடேஜாவுடன் போட்டோவில் இருக்கும் வன அதிகாரிகள் மீது நடவடிக்கை பாயலாம் என்று தெரிகிறது.


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.