Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 27, 2016

சினிமா பாணியில் போலீசார் விரட்டி பிடித்தனர் பிரபல ரவுடி சி.டி. மணியின் கூட்டாளிகள் 6 பேர் கைது 4 பட்டாக் கத்திகள், கார் பறிமுதல்


சென்னையில் பிரபல ரவுடி சி.டி. மணியின் நெருங்கிய கூட்டாளிகள் 6 பேர் கைது செய்யப்பட்டனர். சினிமா பாணியில் போலீசார் காரில் விரட்டி சென்று பிடித்தனர்.

வாகன சோதனை 

சென்னை நகரில் கொலைச்சம்பவங்கள் அதிகரித்துள்ளதையடுத்து, ரோந்து பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை மாம்பலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி தலையிலான போலீசார் நேற்றுமுன்தினம் இரவு தெற்கு உஸ்மான் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த இண்டிகா காரை நிறுத்த முயன்றனர். ஆனால் கார் நிற்காமல் சென்றது. இதையடுத்து போலீசார் ஜீப்பில் அந்த காரை விரட்டி சென்று மடக்கினர். அப்போது காரில் இருந்த 6 பேர் கொண்ட கும்பல் தப்பி ஓட முயன்றது. போலீசார் சுற்றி வளைத்து அவர்களை பிடித்தனர்.

பின்னர் 6 பேரையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று போலீசார் விசாரித்தனர். விசாரணையில் பிடிபட்ட 6 பேரும் பிரபல ரவுடி சி.டி. மணியின் நெருங்கிய கூட்டாளிகளான முகப்பேர் 5–வது பிளாக்கை சேர்ந்த வெற்றிவேல் (வயது 25), ஜெய்கணேஷ் (29), சி.ஐ.டி.நகர் முதல் தெருவை சேர்ந்த கணேசன்(25), சேகர்(38), மகேஸ்வரன்(23), நந்தனம் எஸ்.எம்.நகரை சேர்ந்த பஞ்சாட்சரம்(32) ஆகியோர் என்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் 6 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்கள் வந்த காரை சோதனை போட்ட போது 4 பட்டாக்கத்திகளும், உருட்டுக்கட்டைகளும் கைப்பற்றப்பட்டது.

பல்வேறு வழக்குகள் 

இதுகுறித்து போலீசார் கூறியதாவது:–

கைது செய்யப்பட்ட வெற்றிவேல், ஜெய்கணேஷ் ஆகிய இரண்டு பேரும் சகோதரர்கள் ஆவார்கள். ஜெய்கணேஷ் மீது கடந்த 2012–ம் ஆண்டு கோட்டூர்புரம் போலீஸ் நிலையத்தில் கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டு நிலுவையில் உள்ளது.

வெற்றிவேல் மீது குமரன் நகர் போலீஸ் நிலையத்தில் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கணேசன் மீது சைதாப்பேட்டை போலீஸ்நிலையத்தில் கடத்தல் வழக்குப்பதிவு செய்யப்பட்டு நிலுவையில் உள்ளது. சேகர் மீது சைதாப்பேட்டை போலீஸ் நிலையத்தில் அடிதடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. பஞ்சாட்சரம் மீது கடந்த 2009–ம் ஆண்டு தேனாம்பேட்டை போலீஸ் நிலையத்தில் கொலை வழக்குப்பதிவு நிலுவையில் உள்ளது.

சி.டி. மணிக்கு மகேஸ்வரன் குற்றச் செயல்கள் சம்பந்தமான முக்கிய தகவல்களை தெரிவித்து வந்துள்ளார். ஜாமீனில் வெளியே உள்ள சி.டி.மணியின் நடவடிக்கைகளையும் ரகசியமாக கண்காணித்து வருகிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

சிறையில் அடைப்பு 

கைது செய்யப்பட்ட 6 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர். முக்கிய குற்றவாளிகளை கைது செய்த தனிப்படை போலீசாரை கமிஷனர் டி.கே.ராஜேந்திரன் வெகுவாக பாராட்டினார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.