Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 19, 2016

கொள்ளையனை பிடிக்க முயன்ற போலீஸ் ஏட்டு குத்திக்கொலை விசாரணைக்கு அழைத்து சென்ற கொள்ளையன் மர்மச்சாவு; தப்பிய 3 பேரை சுட்டுபிடிக்க முடிவு


ஓசூரில் கொள்ளையர்களை பிடிக்க முயன்ற போலீஸ் ஏட்டு கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். அப்போது பிடிபட்ட கொள்ளையன் விசாரணைக்கு அழைத்துச் சென்றபோது மர்மமான முறையில் இறந்தார். தப்பிய 3 கொள்ளையரை சுட்டுப்பிடிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

நகை பறிப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை சேர்ந்த சுமன் என்பவரது மனைவி பார்வதி (வயது 28). சினிகிரிப்பள்ளி ஊராட்சி ஒன்றிய தெலுங்கு தொடக்கப் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். 7 மாத கர்ப்பிணியான இவர் நேற்று முன்தினம் மாலை மொபட்டில் சினிகிரிப்பள்ளியில் இருந்து வந்து கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் அவர் கழுத்தில் இருந்த 3 பவுன் சங்கிலியை பறித்தனர்.

தடுக்க முயன்ற அவரை தாக்கிவிட்டு 3 பேரும் மோட்டார் சைக்கிளில் ஓசூர் நோக்கி தப்பிச் சென்றனர். இந்த தகவல் ஓசூர் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டதும் குற்றப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜ், ஏட்டுகள் முனுசாமி, தனபால் ஆகியோர் நகை பறிப்பு கொள்ளையர்களை விரட்டிச்சென்றனர்.

ஏட்டு குத்திக்கொலை

ஓசூர் பாரதிதாசன் நகரில் உள்ள ஒரு வீட்டில் பதுங்கிய அவர்களை பிடிக்க முயன்றபோது, சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜ், ஏட்டுகள் முனுசாமி, தனபால் ஆகிய 3 பேரையும் கொள்ளையர்கள் கத்தியால் சரமாரியாக குத்தினர். அப்போது கொள்ளையர்களில் ஒருவன் போலீசாரிடம் சிக்கினான்.

கத்திக்குத்தில் படுகாயம் அடைந்த சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 3 பேரும் சிகிச்சைக்காக ஓசூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் ஏட்டு முனுசாமி நள்ளிரவு 1 மணி அளவில் இறந்தார். அவருடைய உடல் பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

போலீசாரை கத்தியால் குத்தியபோது பிடிபட்ட கொள்ளையனிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அவனது பெயர் கிருஷ்ணமூர்த்தி என்கிற புஜ்ஜி (19) என்பதும், கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகே உள்ள ஜி.எம்.பாளையத்தைச் சேர்ந்த சந்திரசேகர் என்பவரின் மகன் என்பதும் தெரியவந்தது.

கொள்ளையன் மர்ம சாவு

பெங்களூருவைச் சேர்ந்த விக்கி, அமரா, சாத் ஆகிய 3 பேருடன் சேர்ந்து ஓசூரில் தங்கி நகை பறிப்பு குற்றத்தில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டான். அவனை போலீசார் நேற்று முன்தினம் வேனில் அழைத்துக் கொண்டு பெங்களூருவுக்கு சென்றனர். அங்கிருந்து நேற்று அதிகாலை கிருஷ்ணமூர்த்தியை அழைத்துக்கொண்டு போலீசார் ஓசூர் வந்து கொண்டிருந்தனர்.

அப்போது தமிழக எல்லை அத்திப்பள்ளி அருகே வந்தபோது அவனுக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனடியாக அவனை சிகிச்சைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அழைத்து வந்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், கிருஷ்ணமூர்த்தி வரும் வழியிலேயே மாரடைப்பால் இறந்ததாக தெரிவித்தனர். அவனது உடலை போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.

மாஜிஸ்திரேட்டு விசாரணை

இதுபற்றி தகவல் அறிந்ததும் கோவை மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. ஸ்ரீதர், சேலம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. நாகராஜ் ஆகியோர் ஓசூர் வந்தனர். அவர்கள் நடந்த சம்பவங்கள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர். மேலும் காயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவரும் சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜ், ஏட்டு தனபால் ஆகியோரை சந்தித்து ஆறுதல் கூறினார்கள்.

கொள்ளையன் மர்ம சாவு குறித்து ஓசூர் மாஜிஸ்திரேட்டு சாந்தி விசாரணை நடத்தினார். இறந்துபோன கிருஷ்ணமூர்த்தியின் தாய் அலமேலு மற்றும் உறவினர்களிடமும் விசாரணை மேற்கொண்டார்.

3 பேரை சுட்டுப்பிடிக்க முடிவு

நகை பறிப்பு மற்றும் போலீஸ் ஏட்டு கொலை தொடர்பாக ஓசூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொள்ளையர்கள் விக்கி, அமரா, சாத் ஆகிய 3 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள். அவர்களை சுட்டுப் பிடிக்கவும் போலீசார் முடிவு செய்துள்ளனர்.

அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததாக ஓசூர் பாரதிதாசன் நகரைச் சேர்ந்த அருள்பிரகாசம் என்பவரை போலீசார் பிடித்து விசாரிக்கின்றனர். இந்த தொடர் சம்பவங்களால் ஓசூரில் பரபரப்பு நிலவுகிறது. 

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.