Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 24, 2016

குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு ஏற்படும்: சத்துணவுடன் மாம்பழச்சாறு வழங்குவது உகந்த திட்டம் அல்ல; தி.மு.க. உறுப்பினர் கேள்விக்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா பதில்


சத்துணவுடன் மாம்பழச்சாறு வழங்குவது உகந்த திட்டம் அல்ல. குழந்தைகளுக்கு வயிற்று போக்கு ஏற்படும் என்று தி.மு.க. உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா பதில் அளித்தார்.

மாம்பழச்சாறு

தமிழக சட்டசபையில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் கடைசி நாள் விவாதம் நேற்று நடந்தது. கூட்டம் தொடங்கியவுடன் கேள்வி நேரம் எடுத்துக்கொள்ளப்பட்டது.

அப்போது நடைபெற்ற விவாதம் வருமாறு:-

தி.மு.க. உறுப்பினர் டி.செங்குட்டுவன் (கிருஷ்ணகிரி தொகுதி):- பள்ளி மாணவர்களுக்கு சத்துணவுடன் மாம்பழச் சாறு வழங்கும் செயற்குறிப்பு அரசிடம் உள்ளதா?

அமைச்சர் டாக்டர் வி.சரோஜா(சமூல நலத்துறை):- பள்ளி குழந்தைகளுக்கு சத்துணவோடு மாம்பழச்சாறு வழங்கும் செயற்குறிப்பு அரசிடம் பரிசீலனையில் இல்லை.

ஜெயலலிதா பதில்

உறுப்பினர் டி.செங்குட்டுவன்:- கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 3 லட்சம் மெட்ரிக் டன் மாம்பழம் விளைச்சல் ஆகிறது. இதில் 2 லட்சம் மெட்ரிக் டன் மாம்பழச்சாறு ஆக்கப்படுகிறது. மீதமுள்ள 1 லட்சம் மெட்ரிக் டன் மாம்பழம் வீணாகி விவசாயிகள் நஷ்டம் அடைகிறார்கள். எனவே மாம்பழங்களை அரசு கொள்முதல் செய்து சத்துணவுடன் வழங்கினால் மாணவர்களுக்கு சத்து கிடைக்கும். விவசாயிகளுக்கு லாபம் கிடைக்கும்.

முதல்-அமைச்சர் ஜெயலலிதா:- மாம்பழம் உபரியாக இருக்கிறது என்றால் அதற்கு என்ன வழி காணலாம், எப்படி விற்பனை செய்யலாம், எப்படி ஏற்றுமதி செய்யலாம் என்று பல வழிகளை அரசு ஆராயும்.

இதற்காக பள்ளி குழந்தைகளுக்கு மாம்பழச் சாற்றை கொடுத்தால் பள்ளி குழந்தைகள் எல்லோருக்கும் அது ஒத்துக்கொள்ளாது. பல குழந்தைகளுக்கு டிசன்டரி (வயிற்றுப்போக்கு) ஏற்படுகின்ற ஆபத்து இருக்கிறது. அது உகந்த திட்டம் அல்ல.

மருத்துவர்கள் ஆலோசனை

உறுப்பினர் டி.செங்குட்டுவன்:- 2011-ம் ஆண்டு முதல்-அமைச்சர் தலைமையில் நடந்த கலெக்டர் மாநாட்டில் மதிய உணவு திட்டத்துடன் 200 மில்லி லிட்டர் மாம்பழச்சாறு வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் அறிவித்து அனைத்து பத்திரிகைகளிலும் செய்தி வந்து உள்ளது.

முதல்-அமைச்சர் ஜெயலலிதா:- வாழ்க்கையில் பல கட்டங்களில் பலவற்றை கூறுகிறோம். அதைப்பற்றி நன்றாக புரிந்து கொண்ட பிறகு கருத்தை மாற்றிக் கொள்கிறோம். அன்றைய தினம் மாம்பழச்சாறு வழங்கலாம் என்று நான் நினைத்தேன். அதன் பின்னர் மருத்துவர்கள் கூறிய ஆலோசனைப்படி இப்படி மாம்பழச்சாறு வழங்கினால் குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு ஏற்படும் என்று சொன்னார்கள். அதனால் அந்த திட்டம் கைவிடப்பட்டது.

மு.க.ஸ்டாலின் கேள்வி

எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின்:- பள்ளி மாணவர்களுக்கு, குழந்தைகளுக்கு மாம்பழச்சாறு ஒத்து வராது என்பதை ஏற்றுக்கொள்கிறோம். அதற்கு சத்துணவுடன் சத்து நிறைந்த பால் வழங்கிட கேட்டுக்கொள்கிறேன்.

முதல்-அமைச்சர் ஜெயலலிதா:- மெயின் கேள்வியோடு எதிர்க்கட்சி தலைவர் கேள்வி தொடர்பு உடையதாக இல்லை. எனவே இதற்கு எதிர்க்கட்சி தலைவர் தனி கேள்வி போடவும்.

இவ்வாறு விவாதம் நடந்தது. 

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.