Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 2, 2016

இந்திராகாந்தியின் குற்றத்தை செய்த ஜெயலலிதாவுக்கு எதிராக தேர்தல் ஆணையம் செயல்படுமா? கருணாநிதி கேள்வி


இந்திராகாந்தியின் குற்றத்தை செய்த ஜெயலலிதாவுக்கு எதிராக தேர்தல் ஆணையம் செயல்படுமா? என்று கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து, தி.மு.க. தலைவர் கருணாநிதி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தேர்தல் செல்லாது

12-6-1975 இந்தியாவின் நீதித்துறை வரலாற்றில் ஒரு முக்கியமான நாள். அன்று தான் 1971-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில், உத்தரப்பிரதேச மாநிலம், ரேபரேலி தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட இந்தியாவின் பிரதமர் இந்திரா காந்தியின் தேர்தல் செல்லாது என்று அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அந்தத் தீர்ப்பை அளித்த நீதிபதியின் பெயர் ஜகன் மோகன்லால் சின்ஹா.

இந்திரா காந்தி தனது தேர்தல் வெற்றிக்காக இந்திய சர்க்காரின் கெஜட் பதிவுபெற்ற அதிகாரியாகப் பணியாற்றிய யஷ்பால்கபூரை தனது தேர்தல் வாய்ப்புகளுக்காகப் பயன்படுத்திக்கொண்ட விதி மீறலையும், இந்திரா காந்தியின் தேர்தல் கூட்டங்களில் உத்தரப்பிரதேச அரசு செய்த ஏற்பாடுகளையும், போலீஸ் படைகளை அங்கு காவல் போட்ட வகையில் விதிமீறல் செய்தார் என்பதையும் நீதிபதி அப்போது தனது உத்தரவில் தெளிவாகக் குறிப்பிட்டிருந்தார். இது 1975.

அறிக்கை

2016-ம் ஆண்டு மே 12-ந்தேதியோடு பிரசாரத்தை முடித்துக்கொண்ட ஜெயலலிதா, அதற்குப் பிறகு அறிக்கைகள் வாயிலாக வாக்குகளைக் கேட்டுவந்தார். அவ்வாறு மே 14-ந்தேதி மதியம் 1.06 மணிக்கு அ.தி.மு.க. தொண்டர்களுக்கு ஜெயலலிதா விடுத்த அறிக்கையை, போயஸ் கார்டனில் இருந்து, முதல்-அமைச்சரின் மக்கள் தொடர்பு அதிகாரி, அரசிடம் இருந்து மாதந்தோறும் ஊதியம் பெற்று வரும் தங்கையன் என்பவர், தலைமைச் செயலகத்தில் உள்ள செய்தி வெளியீட்டுப் பிரிவுக்கு அனுப்புகிறார்.

இதையடுத்து, தேர்தல் ஆணையத்தால் நடவடிக்கை எடுக்கப்பட்ட இயக்குனர் குமரகுருபரன், கூடுதல் இயக்குனர் எழிலரசன், உதவி இயக்குனர் சுப்பிரமணியன், மக்கள் தொடர்பு அலுவலர் கலைநேசன் (இவர் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வின் தம்பி), அமைச்சர் வைத்திலிங்கத்தின் சொந்தக்காரரான உதவி மக்கள் தொடர்பு அலுவலர் ராகுல், ஓ.பன்னீர்செல்வத்துக்கு நெருக்கமானவரான துணை இயக்குனர் செல்வராஜ், (இவர்கள் அனைவரும் அரசிடம் மாதந்தோறும் ஊதியம் பெறுவோராகும்) ஆகியோர் தலைமைச் செயலகத்தில் இருந்தவாறு, உடனடியாக அனைத்து மாவட்ட பி.ஆர்.ஓ. அலுவலகங்களுக்கும் ஜெயலலிதாவின் கட்சி அறிக்கையை அனுப்பி, அதனை ஊடகங்களுக்கு அனுப்பச் செய்திருக்கிறார்கள்.

நடவடிக்கை இல்லை

இதுபற்றி தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு உடனடியாக தி.மு.க. அமைப்புச் செயலாளர் மூலமாக புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது. அதன் மீது ஏதாவது நடவடிக்கை எடுக்கப்பட்டதா என்றால் இல்லை. தேர்தல் விதிகள் நடைமுறைக்கு வந்த பிறகு, ஒட்டுமொத்த அரசு அதிகாரிகளும் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டுக்குள்ளே தான் இருப்பார்கள். கட்சி சம்பந்தப்பட்ட அறிக்கைகளை எல்லாம் அந்தந்த கட்சி அலுவலகத்தில் இருந்து தான் ஊடகங்களுக்கு அனுப்ப வேண்டும். ஆனால் அ.தி.மு.க. கட்சி சம்மந்தப்பட்ட அறிக்கையை கட்சி அலுவலகத்தில் இருந்து அனுப்பாமல், அரசு மெயில் ஐ.டி. மூலம் அனுப்பியிருக்கிறார்கள்.

‘‘தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் நிலையில் அரசின் செய்தித்துறை ஜெயலலிதாவின் அறிக்கையை மீடியாக்களுக்கு அனுப்பி வைத்திருப்பது அப்பட்டமான தேர்தல் விதிமீறல். கடந்த ஆண்டு நடந்த ஆர்.கே. நகர் இடைத்தேர்தலின் போது ஜெயலலிதா வேட்புமனு தாக்கல் செய்ய வந்த போது விதிகளை மீறி செய்தித்துறை கூடுதல் இயக்குனர் எழிலும் அங்கு இருந்தார். அதுபற்றிய புகைப்படத்தை அப்போதே தேர்தல் கமிஷனிடம் அளித்து புகார் கொடுத்தது தி.மு.க. ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

தேர்தல் ஆணையம்செயல்படுமா?

இந்த நிலையில் இப்போது 2-வது முறையாகத் தேர்தல் விதிகளை மீறியிருக்கிறார் எழில். அரசியல் பின்புலத்தில் இருப்பவர்கள் செய்தித்துறையில் நியமிக்கப்படுவதால் தான் இந்தநிலை. ஜெயலலிதாவின் தேர்தல் தொடர்பான அறிக்கையை வெளியிட்ட செய்தித்துறையினர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கத் தயங்குகிறார்கள்?’’ என்றெல்லாம் வாரப் பத்திரிகைகளில் எழுதப்பட்டிருந்தது.

1975-ம் ஆண்டு பிரதமராக இருந்த இந்திராகாந்தி அரசு அலுவலரைப் பயன்படுத்திக் கொண்டார் என்பதற்காக, இந்திராகாந்தி வெற்றி பெற்றது செல்லாது என்று தீர்ப்பளிக்கப்பட்டது. 2016-ல் அதே குற்றத்தைச் செய்த ஜெயலலிதாவுக்கு எதிராக தேர்தல் ஆணையம் செயல்படுமா? செயல்படாதா?.

இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார். 

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.