Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 1, 2016

புதுவையில் 1031 என்ற இலவச எண் அறிமுகம் பொதுமக்கள் தெரிவிக்கும் புகார்கள் தொடர்பாக உடனடி நடவடிக்கை கவர்னர் உறுதி


புதுவையில் பொதுமக்கள் புகார் தெரிவிக்க 1031 என்ற இலவச தொலைபேசி எண் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் தெரிவிக்கும் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கவர்னர் கிரண்பெடி உறுதி கூறினார்.

கருத்து கேட்பு கூட்டம்
புதுவையில் குற்றங்கள் தடுப்பு மற்றும் போக்குவரத்து மேலாண்மை தொடர்பாக உயர்போலீஸ் அதிகாரிகள், பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு தலைமை செயலாளர் மனோஜ் பரிதா தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் புதுச்சேரி கவர்னர் கிரண்பெடி கலந்து கொண்டு குற்றங்கள் தடுப்பு தொடர்பாக காவல்துறை சார்பில் தயாரிக்கப்பட்ட புத்தகத்தை வெளியிட்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

1031 என்ற இலவச எண்
புதுச்சேரி அமைதியான யூனியன் பிரதேசம். அதற்கு நீங்கள் தான் காரணம். இங்கு உள்ள மக்கள் மிகவும் நல்லவர்கள். நான் புதுச்சேரி கவர்னராக பொறுப்பேற்று 2 நாட்கள் ஆகி உள்ளது. அதற்குள் அரசு துறை அதிகாரிகளை சந்தித்து பேசியுள்ளேன். நான் புதுவை மாநில வளர்ச்சிக்கு தேவையான அனைத்து திட்டங்களையும் செய்ய வேண்டும் என்று மிகுந்த உற்சாகத்துடன் உள்ளேன்.

புதுவையில் பொதுமக்கள் தங்கள் குறைகளை தெரிவிக்க 1031 என்ற இலவச தொலைபேசி எண் தொடங்கப்படும். இந்த எண் அடுத்த வாரம் புதன்கிழமை(8–ந் தேதி) முதல் அமலில் இருக்கும். இந்த எண்ணில் பொதுமக்கள் தங்கள் புகார்களை தெரிவிக்கலாம். இந்த புகார்கள் எனக்கும், தலைமை செயலாளருக்கும், காவல்துறை ஐ.ஜி.க்கும் வரும். புகார் தெரிவிப்பவர்களின் பெயர் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும்.

உடனடி நடவடிக்கை
திருட்டு, ஊழல், சமூக விரோத செயல்கள், பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் குற்றங்கள் குறித்து இந்த எண்ணில் புகார் தெரிவிக்கலாம். புகார்கள் தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். புகார் தெரிவிப்பவர்கள் தங்கள் பெயரை வெளிப்படுத்த வேண்டும் என்று விரும்பினால் அவர்களின் பெயர் வெளிப்படுத்தப்படும். சரியான தகவல்கள் கொடுப்பவர்களுக்கு வெகுமதி வழங்கப்படும். தவறான தகவல்கள் கொடுத்தால் அவர்கள் மீது காவல்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும்.

புதுவையில் வணிக வரித்துறை ஆணையர் தற்போது சோதனை நடத்துவதற்காக கடைகளுக்கு செல்ல தொடங்கி விட்டார். வாட் வரி கட்டாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். எனவே பொதுமக்கள் பொருட்கள் வாங்கும் போது பில் வாங்கி கொள்ளுங்கள். வாட் வரி கட்டாதவர்கள் இன்னும் ஒரு வாரத்திற்குள் தங்கள் பாக்கி தொகையை முழுமையாக செலுத்தி விட வேண்டும். இல்லை என்றால் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். புதுச்சேரியில் நிதிநிலை மிகவும் மோசமாக உள்ளது. நாம் மத்திய அரசிடம் இருந்து கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. இதனை போக்க நாமாகவே முன்வந்து வரி செலுத்த வேண்டும். அப்போது தான் மாநிலத்தின் வருவாய் உயரும்.

ஆய்வு மேற்கொள்வார்கள்
புதுவையில் நகராட்சிக்கு சொந்தமான நடைபாதையை ஆக்கிரமித்து கடைகள் வைத்திருப்பவர்கள் ஒரு வார காலத்திற்குள் தாங்களாகவே முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். இல்லை என்றால் நகராட்சி அதிகாரிகள் ஆக்கிரப்புகளை அகற்றுவார்கள். ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். கல்வித்துறை அதிகாரிகள் முன்னறிவிப்பு இல்லாமல் தினந்தோறும் பள்ளிகளுக்கு சென்று ஆய்வு மேற்கொள்வார்கள்.

இதே போல் ஆரம்ப சுகாதார நிலையங்கள், மருத்துவமனைகளிலும் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்வார்கள். காலதாமதமாக பணிக்கு வருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பான புகார்களை கூட 1031 என்ற எண்ணில் தெரிவிக்கலாம். நன்றாக பணி செய்பவர்கள் ஊக்குவிக்கப்படுவார்கள். பணி செய்யாமல் இருப்பவர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள்.

‘ஸ்பாட் பைன்’ திட்டம்
புதுவையில் சாலை விதிகளை மதிக்க வேண்டும். பொதுமக்கள் தங்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட இடங்களில் மட்டும் தான் வாகனங்களை நிறுத்த வேண்டும். சாலைகளில் போக்குவரத்திற்கு இடையூறாக வாகனங்களை நிறுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும். புதுவையில் யாருக்காகவும் போக்குவரத்து நிறுத்தப்பட மாட்டாது. சைரன் வைத்த வாகனங்களை(ஆம்புலன்ஸ் தவிர) யாரும் பயன்படுத்தக்கூடாது. குற்றவாளிகளை கண்டறிய காவல்துறை சார்பில் 100க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் வைக்கப்பட்டுள்ளது. அது இன்னும் அதிகப்படுத்தப்படும். பொதுமக்களும், பல்வேறு அமைப்புகளும் தாங்களாகவே முன்வந்து கண்காணிப்பு கேமராக்கள் வைத்தால் அது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

‘ஸ்பாட் பைன்’ திட்டம் நாளை(இன்று) முதல் செயல்படும். இரு சக்கர வாகனங்களில் செல்வோர் கட்டாய ஹெல்மெட் அணிய வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. அதனை புதுவையில் நடைமுறைப்படுத்துவோம். அரசியல்வாதிகள் கூறும் அறிவுரைகளை ஏற்றுக்கொள்வோம். ஆனால் அரசியல் குறுக்கீடுகளை அனுமதிக்க மாட்டோம். தற்போது காவல்துறை தொடர்பான கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. இதே போல் மின்துறை, பொதுப்பணித்துறை என ஒவ்வொரு துறைக்கான கூட்டமும் நடத்தப்படும். பொதுமக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும். புகார்களை 1031 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு கூற வேண்டியது மக்களின் கடமை. அதற்கு நடவடிக்கை எடுப்பது எங்களின் கடமை. இதன் மூலம் புதுச்சேரியை முன்னேற்றம் அடையச் செய்யலாம்.

இவ்வாறு கவர்னர் கிரண்பெடி கூறினார். கூட்டத்தில் போலீஸ் ஐ.ஜி. பிரவீர் ரஞ்சன், டி.ஐ.ஜி. கண்ணன் ஜெகதீசன் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.