Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 5, 2016

சிலைகள் கடத்தல் வழக்கில் தேடப்பட்ட தொழில் அதிபர் போலீசில் சரண்; சிலைகள் எந்த கோவில்களில் திருடப்பட்டவை என்று விசாரணை


சென்னை ஆழ்வார்பேட்டை முர்ரேஸ் கேட் சாலையை சேர்ந்தவர் தொழில் அதிபர் தீனதயாளன்.

வெளிநாடுகளுக்கு சிலைகள் கடத்தல்

இவர் தமிழ்நாட்டில் உள்ள பழங்கால கோவில்களில் இருந்து சாமி சிலைகளை திருடி வெளிநாடுகளுக்கு கடத்தி விற்பனை செய்து வருவதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் தலைமையில் துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரம், இன்ஸ்பெக்டர் ஜனார்த்தனம், ரவி ஆகியோர் அடங்கிய போலீசார் கடந்த 31-ந்தேதி ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள தீனதயாளனின் வீட்டில் அதிரடியாக புகுந்து சோதனை நடத்தினர்.

அப்போது தீனதயாளன் அங்கு இல்லாததால், வீட்டில் இருந்த ஊழியர்கள் குமார் (வயது 58), மான்சிங் (58), ராஜாமணி (60) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் அளித்த தகவலின் பேரில் வீட்டில் இருந்த 55 பழங்கால கற்சிலைகளை கைப்பற்றினர்.

தொழில் அதிபருக்கு சம்மன்

வீட்டில் 6 அறைகள் பூட்டி கிடந்ததால், கோர்ட்டின் அனுமதி பெற்று 2-ந்தேதி அந்த அறைகளின் பூட்டை உடைத்து போலீசார் உள்ளே சென்று சோதனை போட்டனர். அப்போது அந்த அறைகளில் இருந்து 34 ஐம்பொன் சிலைகள் கைப்பற்றப்பட்டன. நேற்று முன்தினமும் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனைகளின் போது மொத்தம் 43 ஐம்பொன் சிலைகளும், 71 கற்சிலைகளும், 75 பழங்கால ஓவியங்களும் கைப்பற்றதாக பின்னர் போலீசார் தெரிவித்தனர்.

15 நாட்களுக்குள் சரண் அடையும் படி, தலைமறைவான தொழில் அதிபர் தீனதயாளனுக்கு போலீசார் சம்மன் அனுப்பினர். இதுகுறித்து அவருடைய வீட்டில் போலீசார் நோட்டீசு ஒட்டினர். மேலும், தீனதயாளன் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்லாமல் இருக்க அவருடைய பாஸ்போர்ட்டை போலீசார் பறிமுதல் செய்தனர். தீனதயாளனின் நடமாட்டத்தையும் போலீசார் ரகசியமாக கண்காணித்தனர்.

போலீசில் சரண்

இந்த நிலையில் நேற்று முன்தினம் நிருபர்களுக்கு பேட்டி அளித்த சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன் மாணிக்கவேல், ‘‘தீனதயாளனை தேடி நாங்கள் போக மாட்டோம். அவரே எங்களை தேடி வந்து சரண் அடைவார்’’ என்று கூறினார். அதன்படி நேற்று முன்தினம் இரவு தீனதயாளன் போலீசில் சரண் அடைந்தார்.

இதுகுறித்து ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

சிலை கடத்தல் தொடர்பாக தேடப்பட்டு வந்த தீனதயாளன் பெங்களூரில் உள்ள அவருடைய மகள் வீட்டில் தலைமறைவாக இருந்தது தெரியவந்தது. அவர் வெள்ளிக்கிழமை இரவு 7.15 மணி அளவில் கிண்டி தொழிற்பேட்டையில் உள்ள சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் அலுவலகத்தில், தனது மகள் மற்றும் வக்கீல் துணையுடன் வந்து சரண் அடைந்தார்.

இன்று (நேற்று) காலை அவரிடம் விசாரணை நடத்தினோம். விசாரணையின் போது சிலை கடத்தல் தொடர்பான அனைத்து விவரங்களும் அவரிடம் இருந்து பெறப்பட்டு வாக்குமூலமாக பதிவு செய்யப்படும். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைப்போம். அதன் பின்னர் போலீஸ் காவலில் எடுத்து மேல் விசாரணை நடத்துவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

சர்வதேச கும்பல் தொடர்பு?

தீனதயாளனின் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட சிலைகள் தமிழ்நாட்டில்எந்தெந்த கோவில்களில் இருந்து திருடப்பட்டவை? எந்தெந்த நாடுகளுக்கு கடத்துவதற்காக திருடப்பட்டன? இதன் பின்னணியில் யார்-யார் இருக்கிறார்கள்? சிலை கடத்தலில் சர்வதேச கும்பலின் தொடர்பு உள்ளதா? என்பதை அறிய விசாரணை நடத்தி வருகிறோம்.

தீனதயாளனை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கும் போது அவருடைய வயதை கருத்தில் கொண்டு மென்மையான முறையில் விசாரணை மேற்கொள்ளப்படும். விசாரணை பாதிக்கப்படக்கூடாது என்பதால், தீனதயாளனிடம் பெறப்படும் தகவல்கள், வாக்குமூலங்கள் ரகசியமாக வைக்கப்படும்.

தற்போது கைப்பற்றப்பட்டுள்ள ஓவியங்களில் 2 நடராஜர் ஓவியங்களையும், சிறிய அம்மன் சிலையையும் விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் பூண்டி கிராமத்தை சேர்ந்தவர்கள் அடையாளம் காட்டி உள்ளனர். அவை தங்கள் ஊரில் உள்ள கோவிலில் இருந்து மாயமானவை என்று கூறி இருக்கிறார்கள்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதா? என்பது பற்றி விழுப்புரம் போலீஸ் சூப்பிரண்டிடம் தகவல் கேட்கப்பட்டு உள்ளது. எந்தெந்த கோவில்களில் சாமி சிலைகள் மாயமாகி உள்ளன? என்ற விவரங்களை சேகரித்து வருகிறோம்.

இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.

கோர்ட்டுக்கு கொண்டு சென்றனர்

தொழில் அதிபர் தீனதயாளன் வீட்டில் கைப்பற்ற சிலைகளை, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டி.ஜி.பி. பிரதீப் வி.பிலிப் நேற்று பார்வையிட்டார். பின்னர் அவரது முன்னிலையில் 43 ஐம்பொன் சிலைகளில், 41 ஐம்பொன் சிலைகள் சந்தன பெட்டி, மர பெட்டிகளில் போலீசார் அடுக்கி வைத்தனர். அதைத்தொடர்ந்து 2 பெட்டிகளும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரம் பாதுகாப்பில் எழும்பூர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது.

அங்கு 2-வது மாஜிஸ்திரேட்டு (பொறுப்பு) மகேஸ்வரி பானுரேகா முன்னிலையில் சிலைகள் அடங்கிய பெட்டிகள் ஒப்படைக்கப்படும் என்று போலீசார் தெரிவித்திருந்தனர். ஆனால், அனுமதி பெற்று அவர் முன் கூட்டியே சென்றுவிட்டதால், சிலைகளை மீண்டும் ஆழ்வார்பேட்டையில் உள்ள தீனதயாளன் வீட்டிற்கே போலீசார் கொண்டு வந்தனர்.

இதுகுறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

திருவொற்றியூர் கோவில்

தீனதயாளன் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ள ஐம்பொன் சிலைகள், கற்சிலைகளை ஆய்வு செய்வதற்காக டெல்லியில் இருந்து மத்திய தொல்லியல் துறை அதிகாரிகள் குழு திங்கட்கிழமை சென்னை வருகிறது. அதன் பின்னர் சிலைகள் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஒப்படைக்கப்படும். பின்னர் மாஜிஸ்திரேட்டு அனுமதியுடன் திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலில் உள்ள திருமேனி அரசு பாதுகாப்பு அறைகளில் சிலைகள் வைக்கப்படும்.

ஐம்பொன் சிலைகள் எடை குறைவு என்பதால் அவற்றை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டுக்கு நாங்கள் எடுத்து செல்வோம். கற்சிலைகள் எடை அதிகம் என்பதால் மாஜிஸ்திரேட்டு நேரில் வந்து பார்வையிட்டு அனுமதி வழங்குவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

வெளிநாட்டுவியாபாரிகள்

தொழில் அதிபர் தீனதயாளனுக்கு 79 வயது இருக்கும் என்று போலீசார் கருதினார்கள். ஆனால் அவருக்கு 83 வயது என்பது போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில் தெரியவந்தது.

தீனதயாளன் 1965-ம் ஆண்டு முதல் பழமைவாய்ந்த கலைப்பொருட்கள், சிற்பங்கள் ஆகியவற்றை விற்பனை செய்யும் தொழில் செய்து வந்து உள்ளார். வெளிநாடுகளுக்கு அவைகளை ஏற்றுமதி செய்து இருக்கிறார்.

அப்போது தமிழ்நாட்டில் உள்ள புராதன கோவில்களில் உள்ள ஆயிரம் ஆண்டு பழமையான சாமி சிலைகளை ஏற்றுமதி செய்தால் பல கோடி ரூபாய் தருவதாக வெளிநாட்டு வியாபாரிகள் தீனதயாளனுக்கு ஆசை வார்த்தைகளை கூறி உள்ளனர்.

இதனால் தீனதயாளன் சிலை கடத்தலில் ஈடுபட்டு உள்ளார். நெல்லை மாவட்டம் பழவூர் கிராமத்தில் உள்ள கோவிலில் இருந்து பழமையான நடராஜர் சிலை உள்பட 13 சாமி சிலைகளை திருடியதாக அவர் மீது வழக்கு நிலுவையில் உள்ளது.

மேலும் ஸ்ரீவில்லிபுத்தூர் போலீஸ் நிலையத்திலும் தீனதயாளன் மீது சிலை கடத்தல் வழக்கு ஒன்று இருப்பது விசாரணையில் தெரியவந்து உள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.