Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 8, 2016

ஹிலாரி கிளிண்டன், வரலாறு படைத்தார் அமெரிக்காவின் முதல் பெண் ஜனாதிபதி வேட்பாளர் தகுதியை பெற்றார்


அமெரிக்காவின் முதல் பெண் ஜனாதிபதி வேட்பாளர் என்ற தகுதியை பெற்று, லாரி கிளிண்டன் வரலாறு படைத்தார்.

ஜனாதிபதி தேர்தல்

அமெரிக்காவில் ஒபாமாவின் பதவிக்காலம் முடிய உள்ளதால், அவருக்கு பதிலாக புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நவம்பர் மாதம் 8-ந் தேதி நடக்கிறது.

இந்த தேர்தலில் குடியரசு கட்சி, ஜனநாயக கட்சி ஆகிய இருபெரும் கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல்கள் அங்குள்ள மாகாணங்களில் நடந்து வருகின்றன.

டிரம்ப்-லாரி

குடியரசு கட்சி வேட்பாளர் தேர்தலில் அமெரிக்காவின் கோடீசுவர தொழில் அதிபர் டொனால்டு டிரம்ப் (வயது 69) 1,239 பிரதிநிதிகளின் ஆதரவை பெற்று, ஜனாதிபதி வேட்பாளருக்கான தகுதியை ஏற்கனவே பெற்று விட்டார். உத்தேச வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள அவர், அடுத்த மாதம் நடக்க உள்ள கட்சி மாநாட்டில் அதிகாரப்பூர்வ வேட்பாளராக அறிவிக்கப்படுவார்.

இந்த நிலையில் ஜனநாயக கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஆவதற்குரிய 2,383 பிரதிநிதிகள் ஆதரவை முன்னாள் வெளியுறவு மந்திரி லாரி கிளிண்டன் (68) நேற்று பெற்றார். இதை 2 முக்கிய ஊடக நிறுவனங்கள் உறுதி செய்தன.

வரலாறு படைத்தார்

அமெரிக்காவில் ஜார்ஜ் வாஷிங்டன் முதல் ஜனாதிபதியாக 1789-ம் ஆண்டு பதவி ஏற்றார். அந்த நாடு இதுவரையில் மொத்தம் 44 ஜனாதிபதிகளை கண்டுள்ளது. ஆனால் அத்தனைபேரும் ஆண்கள்தான்.

இந்த நிலையில் இப்போது லாரி கிளிண்டன், ஜனநாயக கட்சியின் ஜனாதிபதி வேட்பாளருக்கான தகுதியை பெற்று விட்டார். 227 ஆண்டு கால அமெரிக்க வரலாற்றில் முதல்முறையாக பெண் ஒருவர், பிரதான கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஆவதற்குரிய தகுதியை அடைந்திருக்கிறார். அந்த வகையில் லாரி வரலாற்று சாதனை படைத்துள்ளார். இது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த அவர், “வரலாற்றின் விளிம்பில் இருக்கிறோம். முன் எப்போதும் இப்படி ஒரு தருணம் வந்ததில்லை. ஆனால் நாம் இன்னும் செய்ய வேண்டிய பணிகள் நிறைய உண்டு” என கூறினார்.

பெர்னீ சாண்டர்ஸ் ஏற்க மறுப்பு

லாரி கிளிண்டன், ஜனாதிபதி வேட்பாளர் ஆவதற்கு தேவையான பிரதிநிதிகள் ஆதரவை பெற்று விட்டார் என்பதை அவரது போட்டியாளரான பெர்னீ சாண்டர்ஸ் ஏற்கவில்லை. இது குறித்து அவர் கருத்து தெரிவிக்கையில், பிரதிநிதிகள் ஆதரவு வாக்குகளுடன் ‘சூப்பர் டெலிகேட்ஸ்’ என்றழைக்கப்படுகிற அதிஉயர் பிரதிநிதிகள் வாக்குகளை இப்போது கணக்கில் கொண்டது தவறு என அவர் கருத்து தெரிவித்தார்.

அதுமட்டுமின்றி, கட்சி மாநாடு நடக்கும்வரை தான் களத்தில் தொடரப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.

லாரி கிளிண்டன் 1,812 பிரதிநிதிகளுடன், 571 அதிஉயர் பிரதிநிதிகளின் ஆதரவை பெற்றுள்ளார். பெர்னீ சாண்டர்ஸ் 1,521 பிரதிநிதிகள் ஆதரவையும், 47 அதிஉயர் பிரதிநிதிகள் ஆதரவையும் பெற்றார்.

அமெரிக்காவின் முதல் பெண் ஜனாதிபதி வேட்பாளருக்கான தகுதியை அடைந்து வரலாறு படைத்துள்ள லாரி, அந்த நாட்டின் முதல் பெண் ஜனாதிபதி என்ற புதிய வரலாறைப் படைப்பாரா என்பது நவம்பர் 8-ந் தேதி நடக்க உள்ள தேர்தலுக்கு பின்னர் தெரிய வரும். 

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.